Thursday 19 December 2013

நெனப்பு வந்துச்சு அவனுக்கு – பாகம் 2...

மாமா இந்த வாட்டி பொங்கலுக்கு டிவியில என்ன படம் போடுவாங்க? ஏன்டா படம் பாக்குறத தவிர பொங்கலுக்கு வேற ஒன்னுமே ப்ளான் இல்லையாடா?
வேற என்ன பண்றது? கரும்ப தின்னுட்டு படம் பாக்க வேண்டியது தான்.
கேட்டதும் சுருக்குன்னுச்சு அவனுக்கு. அவன் மாமா, சித்தப்பாமாருங்க அவனுக்கு சொல்லிக்குடுத்த பொங்கல் கொண்டாட்டம் அவனோட முடிஞ்சு போனதையும், அவனும் அவன் ஜோட்டு பயலுகளும் அக்கக்கா அங்கங்க வெளியூருகளுக்கு வேலைக்குப் போனதால அவங்க மாமா, சித்தப்பாமாருங்க இளவட்டங்களா இருந்தப்போ செட்டு சேந்து நடத்துன இளைஞர் நற்பணி மன்றம் இன்னைக்கு இருந்த எடமும், இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு அப்டினா என்னன்ற தடமும் தெரியாம போனதுக்கும், அத இந்த பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தாம போனதையும் நினைக்கயில சுருக்குன்னுச்சு அவனுக்கு.

இவன் சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பொங்கல்னா எப்டியெல்லாம் இருக்கும்ன்ற நெனப்பு வந்துச்சு அவனுக்கு. தை பொங்கலுக்கு வீட்டு வாசல்ல கிழக்க பாத்து பொங்க வைக்க வேண்டி, மார்கழி மாசம் முழுக்க வாசல்ல அம்மா கூட சேந்து கோலம் போட்டு, கோலத்து நடுவுல சாணியில பிள்ளையார் புடிச்சு அதுக்கு நடுவால பூசணிப்பூ சொருகி வச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. நெதம் எங்கருந்தாச்சும் பூசணிப்பூ பரிச்சுட்டு வந்துர்றா, பூசணிப்பூ வச்சு கோலம் போட்டாத்தேன் வாசல்ல வச்சு பொங்க வெய்க்க முடியும்னு அவங்க அம்மா சொன்னதும், அதுக்காக வெள்ளன எந்திரிச்சு காடுகரை சுத்தி பூ பறிச்சுட்டு வந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

பொங்கலுக்கு மொதநா எரிக்கிறதுக்காகவே வீட்டுல இருக்கிற பழச பெறக்கி எடுத்து, வீட்டுக்கு வெள்ளையடிச்ச பெறகு படிக்கெல்லாம் வெள்ளையும், செகப்புமா கோடு போட்டு மறுநா பொங்கலுக்கு விடியமுன்ன எந்திரிச்சு குளிச்சு, அம்மா கூட சேந்து வாசல்ல நல்லா பெரிய கலர் கோலமா போட்டு அதுக்கு நடுவுல அடுப்ப கெழக்க பாத்து வச்சு சூரியன் உதிக்கிறப்போ கையெடுத்துக் கும்பிட்டு மஞ்சகெழங்கும் கூரப்பூவும் சுத்திக் கட்டுன மம்பானையில பொங்க வெச்சதும், பொங்க பொங்கி வரையில அம்மா கொலவ போட பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்னு சந்தோசமா கத்துனதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. கிண்டுன பொங்கல வாழஎலையில 5 தழுவு போட்டு ஐம்பூதங்களுக்கும் படச்ச பெறகு அப்டியே கழுவச்சோறு வாங்கித் தின்னதும், தொட்டுக்க பச்ச மொச்சயும், தேங்காச்சில்லும் தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. பெறகு தஞ்ஜோட்டு பசங்களோட சேந்து கரும்ப தின்னுட்டே ஊரு சுத்துனதும், கோயில்ல வரிகுடுத்ததுக்கு ஓலக்கொட்டான்ல குடுக்குற பொங்கலயும், கரும்பயும், அவங்க ஐயா பேரச் சொல்லி மைக்குல கூப்பிட்டு குடுக்குற துண்டயும் வாங்க காத்துக் கெடந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

இளைஞர் நற்பணி இயக்கத்துல இவங்க மாமா செயலாளரா இருந்ததும், பொங்கல் விளையாட்டுப் போட்டிக்கு அவங்க கூட சேந்து வசூல் பண்ணப் போகையில பனங்கெழங்கும், வேர்கல்லயும் வாங்கித் தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. பொங்கலன்னைக்கு காலையில ஓட்டப்பந்தயம், சுலோ சைக்கிள் ரேசு, சாக்கு ரேசு வச்சதும், ஓட்டப்பந்தயம் ஓடயில கால் வாரி கீழ விழுந்து முட்டி செரச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. சாயங்காலத்துல அவனுக்கு எப்பயுமே ரொம்பப் பிடிச்ச முட்டி ஒடைக்கிற போட்டி வெய்க்கிறதுக்கு முன்னால போய் மைக்ல அலோ மைக் டெஸ்டிங் 1 2 3 ன்னு பேசுறதும், அப்புறம் ரவியண்ணே “இன்னும் சற்று நேரத்தில் பழங்காநத்தம் மேலத்தெரு இளைஞர் நற்பணி இயக்கத்தின் சார்பாக பிள்ளையார் கோயில் திடலில் முட்டி உடைக்கும் போட்டி நடைபெற இருப்பதால் ஆங்காங்கே இருக்கும் பெரியோர்களும், தாய்மார்களும் போட்டி நடைபெற இருக்கும் இடத்திற்கு திரளாக வந்திருந்து போட்டியாளர்களை உற்சாகப் படுத்துமாறு விழாக் கமிட்டியாளர்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கண்ணக் கட்டுன பிறகும் நன்றாக கண் தெரியும் திறமையான இளைஞர்களும், அவர்களை ஊக்கப்படுத்த மொறையுள்ள தாவணி போட்ட பொண்ணுங்களும் கோவிலுக்கு அருகில் வரவும். கம்பத் தூக்கி முட்டிய அடிக்கிற தெம்பிருக்கும் ஆம்பளைகள் 2 ரூபாய் குடுத்து தங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளவும் னு அனவுன்ஸ் பண்ணவும், அத தொடர்ந்து ஜெகஜ்ஜோதியா நடக்குற முட்டி உடைக்குற போட்டியும், அதுல ஆளுக்கு ஒரு லெக்குல கம்பத் தூக்கிட்டு போறதயும், ஸ்டெப்பு கணக்கு பண்ணி, செருப்பில்லாம கால்ல மிதிக்கிற கல்லு அடையாளம் வச்சு அப்டி இப்டின்னு ஒவ்வொருத்தர் பண்ற பிரயத்தனத்தையும், ஆனாலும் அடிக்க மாட்டாம அவங்க கம்ப பெலக்க வீசையில அடுத்தாளு மேல படாம இருக்க ரெண்டு பேரு கூடவே கம்போட போய் அந்த கம்புட்ட அடிய தாங்குறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இப்டியே அடிக்க முடியாதவங்க மறுபடி மறுபடி ரீ என்ட்ரி கட்டி தோக்குறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. கடைசியில யாரோ ஒருத்தர் அடிக்க அவருக்கு பரிசா பெரிய பிளாஸ்டிக் வாளிய குடுத்துட்டு அவர ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு புகழ்ந்து அனுப்புறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

மறுநா அவங்க மாமாகூட சல்லிக்கட்டு பாக்க போகணும்னு நெனச்சுட்டே தூங்கப் போறதும், வெள்ளன எந்திரிச்சு போய் அவங்க மாமா அவன பத்தரமா சாரத்துல ஏத்தி விட்டுட்டு அவரு களத்துல நின்னுகிட்டு சல்லிக்கட்டு பாத்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இன்னைக்கு அவன் மாமா டிவியில சல்லிக்கட்டு பாக்குறதையும், அவரு மகன் சிறப்புநிகழ்ச்சி படம் போடச் சொல்லி அவரு கூட சண்டை போடுறதையும் நெனைக்கையில கண்ணீரு முட்டுச்சு அவனுக்கு. தனக்கு கெடச்ச சந்தோசத்த அடுத்த தலமொறைக்கு கடத்தாம பொழப்புக்காக அடகு வச்சத நெனைக்கையில நெஞ்சுக்குள்ள முள்ளு முள்ளா குத்துது அவனுக்கு.

இன்றல்ல
என்றும் அதே அன்புடன்,
பா.உதயக்குமார்.


4 comments:

  1. எங்கிட்டு போனாலும் பெரிய பெரிய கோலம்.. உங்கூட்டு கோலம் பெருசா எங்கூட்டு கோலம் பெரிசான்னு சண்டை. இன்னைக்கி எந்திரிச்சு எங்க போயி நான் தேட அந்த பூசணிப்பூவ?

    அதவிட முக்கியமான விஷயம்.. பொங்கலாகி முடிச்ச பெறவு சின்ன சின்ன டப்பாவுல அடைச்சி அத எடுத்துட்டு சொந்தக்காரங்க தெரிஞ்சவிங்க வீட்டுக்கு போயி குடுக்குறது. அத சாக்கா வச்சி அங்க இருக்க புள்ளைங்கள பாக்குறதுன்னு போன காலம் எல்லாம் மறக்குமா?

    பொங்கலுக்கு ஊருக்கு வர்றவன் நெலம பரவாயில்ல. வர முடியாம வெளியூர்ல இருக்கவன் பாடு ரொம்ப திண்டாட்டம். சோறு கூட கெடைக்காம தவிக்கிறப்போ நெனப்பு வரும் - பேசாம ஊருக்கு அடிச்சு புடிச்சு போயிருக்கலாமேன்னு.

    நம்ம கொண்டாடுன பொங்கல் வேற எவனும் கொண்டாட மாட்டான்யா இனிமேல். சர்வம் சரக்கு மயம். எல்லாம் டிவி செய்த மாயம்.

    ReplyDelete
  2. பட்டாளத்துகாரனாக ஆன பிறகு இந்த வருடம்தான் பொங்கல் கொண்டாட விடுமுறை கிடைத்தது. என் மனைவி மற்றும் மகனுடன் முதல் பொங்கல் கொண்டாட போகிறேன்.நினைக்கும்போதே மகிழ்ச்சி பொங்குகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆனந்தமாய் கொண்டாடுங்கள்...

      Delete