Saturday 8 November 2014

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்...”



பாறைத்திருவிழாவின் தித்திப்பினை அசைபோட்டபடியே அக்டோபர் 26, 2014 ஞாயிறன்று அதிகாலையில் தெப்பக்குளம் பசுமைநடைக்கு சாதரணமாய் கிளம்பிய எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அது என் வாழ்நாளில் முக்கியமான தினமாய் அமையப்போகிறதென்பது. பசுமைநடையின் தொடர்பு எண்ணைக் கையாளுவதால் எப்போதும் போல குறுஞ்செய்தி அனுப்பிய நாளிலிருந்து பசுமைநடை நிகழ்வு தொடங்கிய பின்னரும் தொடரும் அழைப்புகள் இம்முறை குறிப்பிடும்படி இல்லை. பாறைத்திருவிழாவின் வெற்றிக்குப் பின்னர், மழைக்கு மதிப்பளித்து அதோடு கூட தீபாவளிப் பண்டிகையின் குதூகலத்தையும் குலைக்க விரும்பாது, நீண்ட தூரமோ மலைப்பகுதியோ வேண்டாமென முடிவெடுத்து நகருக்குள் தெப்பக்குளத்திற்கு செல்வதென தீர்மானித்த எங்களுக்கு முதல் நாள் வரையில் சற்று ஏமாற்றமே. இருப்பினும் எப்போதும் உள்ள உத்வேகம் சற்றும் குறையாமல் நிகழ்விற்கு தயாரானோம்.


நிகழ்வன்று எங்கள் ஏமாற்றத்தினை பொய்யாக்கி எப்போதும்போல 150 க்கும் அதிகமான எண்ணிக்கையில் பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர். தெப்பக்குளத்தின் மைய மண்டபத்திற்கு செல்லலாமென ஆர்வத்துடன் தெப்பத்தினை எட்டிப்பார்த்தால் எங்களுக்கு முன்பே தெப்பத்தில் நீர் நிரப்பும் மாநகராட்சியின் ஆர்வம் ஏறக்குறைய 2 அடிகளுக்கும் மேல் நிரம்பியிருந்தது. என்ன செய்ய, தெப்பத்தினை ஒரு சுற்று சுற்றி பெருமூச்சுடன் அதன் மேற்கு கரையில் முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள படித்துறையில் மைய மண்டபத்தினை பார்த்தவாறு அமர்ந்து முனைவர்.சொ.சாந்தலிங்கம் அய்யா அவர்களின் உரை கேட்கலானோம். 



கிழக்கின் சூரியனை பின்னந்தலையில் தாங்கி அய்யா உரை நிகழ்த்திய கம்பீரத்தினை ரசித்துகொண்டிருக்கும் வேளையில் பசுமைநடையின் நிறுவனர் எழுத்தாளர் திரு.அ.முத்துக்கிருஷ்ணன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது முனைவர்.சொ.சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கு தஞ்சை பெரியகோவில் சதயவிழாக்குழு இவ்வாண்டின் இராஜராஜன் விருதினை வழங்கி கவுரவிக்க இருக்கிறது என்ற தகவல். தகவலைக் கேட்டதும் ஏதோ எனக்கே அந்த விருது கிடைத்தாற் போன்ற மகிழ்ச்சியுடன் நான் பூரித்துக் கிடந்த வேளையில் திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களிடமிருந்து வந்தது இன்னுமொரு அறிவிப்பு. 


ஒவ்வொருமுறையும் பங்கேற்பாளர்களுக்கு ஒருவித ஆச்சர்யத்தை ஒளித்துவைத்து பரிசளிக்கும் பசுமைநடை இம்முறை எனக்கும், என்னைப்போல இன்னும் 11 பேருக்கும், எங்கள் மூலம் பார்வையாளர்களுக்கும் புதுவித ஆச்சர்யத்தையும், உற்சாகத்தையும் பரிசளித்தது. விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும்போது கவுண்டவுண் சொல்லப்படுவதுபோல் முதலில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தமிழறிஞர் இராம.சுந்தரம் அய்யாவினை மேடைக்கு அழைத்த திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்து கவிஞர் மோகனரங்கன் அவர்கள், எழுத்தாளர் தாமோதர் சந்துரு அவர்கள், குழந்தைகள் நல மருத்துவர் பழனிச்சாமி அவர்கள் ஆகியோரையும் மேடைக்கு அழைத்ததோடு வரிசையாக என்னையும், கு.மதுமலரன், மோ.ராஜண்ணா வெங்கட்ராமன், பாடுவாசி ரகுநாத், க.குரூஸ் அந்தோனி ஹுபர்ட், கு.வேல்முருகன், இளஞ்செழியன், சித்திரவீதிக்காரன் சுந்தர், தீபா நாகராணி, வஹாப் ஷாஜஹான், கனகராஜ், கு.வித்யா குமரேசன் ஆகியோரையும் அழைத்தார்.


எதற்காக அழைக்கப்பட்டோம் என எல்லோரும் ஒரு எதிர்பார்ப்புடன் குழம்பி நிற்க, அப்போது அரங்கேறியது எங்கள் வாழ்வின் உன்னத தருணம்.


“காற்றின் சிற்பங்கள்” – பசுமைநடையின் பாறைத்திருவிழாவில் எங்கள் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்த திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திரு.ரத்தின விஜயன் அவர்களால் தொகுக்கப்பட்ட பசுமைநடை வலைப்பதிவர்கள் பன்னிருவரின் கட்டுரைகளை அச்சில் வார்த்த புத்தகம். பல்வேறு காரணங்களால் அன்று வெளியிடப்பட முடியாததால் தெப்பக்குளத்தில் வெளியிடப்பட்டது. கும்பகோணத்திலிருந்து சிலபல காரணங்களால் வரமுடியாத கனகராஜைத் தவிர்த்து நாங்கள் பதினோரு பேரும் வரிசையில் நிற்க தமிழறிஞர் இராம.சுந்தரம் அய்யா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு எங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பிரதியை வழங்க அந்த காற்றின் சிற்பங்களைக் கட்டிக்கொண்டு மேலெழும்பிப் பறந்தது மனது. என்ன சொல்ல எழுதிய தருணத்தினை விடவும் பெருமகிழ்ச்சி என் எழுத்தினை முதல் முறை அச்சில் பார்த்த பொழுது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கிணங்க, எவ்வித எதிர்பார்ப்புமில்லாது எங்கள் பசுமைநடையின் பயண அனுபவத்தை ஆர்வம் மேலிட குறுகுறுப்புடன் பதிவு செய்த எங்களுக்கு பசுமைநடை தந்தது அளவிடமுடியாத ஆச்சர்யம். ஆம், இதுவரையில் நினைத்ததை பதிவிடும் வலைப்பதிவர்களாக மட்டுமே இருந்த எங்களை, எங்கள் எழுத்துக்களை முதல்முறையாக அச்சில் வார்த்ததன் மூலம் எழுத்தாளர்களாக தரம் உயர்த்தி அழகு பார்த்தது பசுமைநடை. 

முகநூலில் சமயங்களில் நான் கவிதையென கிறுக்குவதை படிக்கும் சில நண்பர்கள் கேட்பதுண்டு, “என்னப்பா ஒரு புத்தகம் போட்ற வேண்டியது தான?”. கேட்கும்போது மனதிற்குள் ஒருபுறம் பெருமிதமாகவும், ஆசையாகவும் இருந்தபோதிலும், மறுபுறம் “நாம புத்தகம் போட்டு வாங்கிப் படிக்கிறது யாருப்பா? சும்மா என் புருசனும் கச்சேரிக்குப் போயிருக்கான்ற கதையா நானும் புத்தகம் போட்ருக்கேன்னு சொல்லிக்கிறதுக்கா? அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணுமப்போய்” என்று மறுதலித்தே வந்திருக்கிறேன். ஆனால் இன்று அந்த தகுதியை பசுமைநடை எனக்கு அளித்துவிட்டது. காற்றின் சிற்பங்களை கட்டிக்கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக பறந்தே திரிந்தேன். நிற்கையில், நடக்கையில், படுக்கையில் ஏன் கழிவறையில் அமர்ந்திருக்கையில் கூட மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே தானிருந்தேன். ஏற்கனவே எல்லாக் கட்டுரைகளையும் இணையத்தில் வாசித்திருந்தாலும் அவைகளை புத்தக வடிவில் அச்சில் பார்த்த போது, கருப்பு வெள்ளையிலும் அதன் நேர்த்தி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது.

“சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் இருக்கு தெரியுமா?” என்ற யானைமலை குறித்த எனது கட்டுரை புத்தகத்தின் முதல் கட்டுரையாக வெளிவந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. எனது முதல் பசுமைநடை கொங்கர்புளியங்குளமாயிருந்த போதிலும் சமணம் என்ற வார்த்தையை நான் முதன்முதலில் கேள்விப்பட்டது யானைமலையில். பள்ளிப்பருவத்தில் ஒத்தக்கடையில் இருக்கும் நண்பன் வீட்டிற்கு செல்லும்போது கேள்விப்பட்ட சமணர்படுக்கை என்ற வார்த்தைக்கு பசுமைநடையின் மூலமே எனக்கு அர்த்தம் தெரிந்தது. அதோடு சேர்த்து எனது எழுத்தையும் முதல்முறை அச்சில் வார்த்த பெருமையையும் சூடிக்கொண்டது பசுமைநடை. எங்கள் எல்லோரை விடவும் கூடுதல் உற்சாகத்துடனும், பூரிப்புடனும் பெருமிதம் கொண்டிருந்தார் எழுத்தாளர் திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள். “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்” என்பதைப்போல் பசுமைநடையினை தொடங்கியபோது அவர் எதிர்பார்க்கவில்லை பசுமைநடை பல தளங்களிலும் விரிந்து, பல தளங்களிலும் நேர்த்தியான கலைஞர்களை உருவாக்குமென்பதை. பசுமைநடை எங்களைப் போன்றவர்களை எழுதத்தூண்டியது. எண்ணற்றோரை வாசிக்கத்தூண்டியது. மதுரையின் மிக முக்கிய புகைப்படக்கலைஞர்களை உருவாக்கியுள்ளது. இன்னுமின்னும் ஏராளமானோரை இயற்கையின் மீது காதல் கொள்ளச் செய்துகொண்டேயிருக்கிறது. பசுமைநடை மதுரையின் மாபெரும் அடையாளம்.


காற்றின் சிற்பங்கள் புத்தகத்தில் என்னோடு சேர்த்து, என்னைவிட அருமையான கட்டுரைகளை எழுதியிருக்கும் நண்பர்கள் பதினோரு பேருக்கும் வாழ்த்துக்கள். எங்களைத் தவிர்த்து எழுதிக்கொண்டிருக்கும் இன்னும் சில புதிய எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள். “காற்றின் சிற்பங்கள் – கதம்பம்”.
- பா.உதயக்குமார்.

புகைப்படங்கள்:

அருண்பாஸ் மற்றும் குரூஸ் ஆண்டனி ஹுபர்ட்...

Wednesday 15 October 2014

வரலாறு கொண்டாடும் மதுரையில் வரலாற்றைக் கொண்டாடும் திருவிழா...


திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். விழாக்கள் மனித வாழ்வினின்று பிரிக்க இயலாது கலந்திருக்கிறது. வெற்றிகளை கொண்டாட பிறந்தன விழாக்கள். சமயங்களை கொண்டாடி வளர்ந்தன விழாக்கள். மனங்களை நெறிப்படுத்தி மகிழ்ந்தன விழாக்கள். மரணத்தினைக் கூட பறையிசைத்து ஆடிப்பாடிக் கொண்டாடியே மகிழ்ந்திருக்கிறது தமிழ்ச்சமூகம். விழாக்களின் வடிவமோ, பாடுபொருளோ மாறிக்கொண்டே வந்திருக்கலாம். ஆனால் அவற்றின் வெளிப்பாடு ஒன்றே, மகிழ்ச்சி. காலச்சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் சுருங்கிவிட்டாலும் சில விழாக்கள் நமது அடியாழம் தொட்டு நம்மை மேலிழுத்து வருகின்றன. அப்படியான விழாக்கள் கொண்டாடப்படும் வரை மனிதம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
மதுரை என்றாலே விழாக்களின் நகரம் தான். ஆண்டின் எந்தவொரு மாதமும் ஏதேனும் ஒரு சாலையில் ஒரு விழா ஊர்வலம் இருக்கும். ஏதேனும் ஒரு மூலையில் கிடாய்வெட்டு நடக்கும். தாரை தப்பட்டமோ, மேளதாளமோ கேட்டுக்கொண்டேயிருக்கும். மதுரையின் மரபான விழாக்கள் ஒருபுறமிருக்க, வரலாற்றைக் கொண்டாட முளைத்தது பசுமைநடை என்னும் புதியதொரு கூட்டம். ஆம் வரலாறு கொண்டாடும் மதுரையில் வரலாற்றைக் கொண்டாடும் கூட்டமிது. பசுமைநடையின் திருவிழாக்கள் மரத்தைக் கொண்டாடும், கல்லைக் கொண்டாடும், நம் மண்ணைக் கொண்டாடும். அதன் விழாக்களின் வேர் நம் மண்ணில், கல்லில், மரத்தில், இயற்கையில் புதைந்து கிடக்கும் நமது வரலாற்றில் பொதிந்திருக்கிறது.



ஒவ்வொரு பசுமைநடையுமே ஒரு கொண்டாட்டமான விழா தான் எனினும் முத்தாய்ப்பாய் இரு விழாக்களை கொண்டாடி மகிந்தது பசுமைநடை. பசுமைநடையின் 25-வது நிகழ்வை கடந்த ஆண்டு (25 August 2014) விருட்சத் திருவிழாவாகவும், 40-வது நிகழ்வை இந்த ஆண்டு (28 September 2014) பாறைத் திருவிழாவாகவும் கொண்டாடியது பசுமைநடை. பசுமைநடையின் இந்த இரு திருவிழாக்கள் கொடுத்த மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. வாழ்வின் மறக்கவியலாத கொண்டாட்டங்களை, உணர்வுகளை ஏற்படுத்தியதாக இருக்கலாம் இதில் பங்கேற்றவர்களுக்கு. அதனினும் ஆயிரமாயிரம் மடங்கு பெரிது இந்த விழாக்களின் ஏற்பாடுகளை, பின்னரங்கு வேலைகளை முன்னின்று பார்த்தவர்களின் உணர்வு.
என்னென்ன நடந்தது விழாவில் என எடுத்துரைக்க பலர் இருக்க, நான் எதிர்பார்த்தது இருந்ததா என்பதையே விளக்குகிறது இந்த கட்டுரை.

பாறைத் திருவிழா உணர்வுகள்:


கருப்பட்டி கலந்த அரிசி மாவில் பிழிந்து சுடப்பட்ட சீரணி மிட்டாயாய் விருட்சத் திருவிழாவின் தித்திப்பு மனதில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்க, அதன் மேல் ஊற்றப்பட்ட வெல்லப்பாகாக மேலும் தித்திப்பு கூட்டியது பாறைத் திருவிழா. விருட்சத் திருவிழாவின் கொண்டாட்டங்களை, மகிழ்ச்சியை, அது தந்த தித்திப்பான உணர்வை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டது பாறைத் திருவிழாவின் நிகழ்சிகள். பெயர்சூட்டுதலில் தொடங்கி, இடம், சிறப்பு விருந்தினர்கள், உணவு, குழந்தைகள் விழா,  விழா அனுமதி, ஏற்பாடுகள், பின்னரங்கு வேலைகள், இத்யாதி இத்யாதியென திட்டமிடுதலில் தொடங்கி விழா நிகழ்வு வரை எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கமைந்த நேர்த்தியை வெளிப்படுத்தி ஒரு கலாச்சார விழாவினை நடத்தும் முறையைக் கற்றுத்தந்தது பாறைத் திருவிழா.



விருட்சத் திருவிழாவின் முந்தைய நாளிரவு ஊரின் எல்லையில் யாருமற்ற பெருவெளியில் நிசப்தமாய் குடிகொண்டிருக்கும் சமணமலை அடிவாரத்தில், கோயில்கொண்டு கருப்பு காவலிருக்க, மதுரையின் மிகப்பெரியதொரு எழுநூறாண்டு பழமையான ஆலமரத்தினடியில் கிளைகளின், இலைகளின், விழுதுகளின் வழியே வெள்ளி முளைத்து விரிந்துகிடக்கும் வானம் பார்த்துக்கொண்டே சிதிரவீதிக்காரனோடும், சஞ்சிகை வடிக்கும் முருகராஜுடனும் சமணமலை சுமந்த கதைகளையும், கதைமாந்தர்களையும் அருகாமை அமர்த்தி சடச்சிபொட்டலில் கதைபேசி மகிழ்ந்து படுத்துக்கிடந்தது மனதில் மேலெழும்பி உந்தித்தள்ள மீண்டுமொருமுறை கிடைக்கப்போகும் அந்த அரியதொரு இரவை எதிர்நோக்கி வேகமெடுத்தது பாறைத் திருவிழாவின் ஏற்பாடுகள்.
விழாவிற்கு முந்தைய நாள் வரையில் எல்லாமே எல்லோரும் எதிர்பார்த்தபடி நடக்க, யார் கண் பட்டதோ 18 ஆண்டுகளாக சூல்கொண்டிருந்த அரசியல் புயல் கரை கடந்ததில் கொஞ்சம் சேதமாகித்தான் போனது எழுகடல் பட்டிணமும். சாலையில் வாகனங்கள் ஓடவில்லை. மதியற்ற வீணர்கள் துரத்த மக்கள் ஓடினார்கள். தங்கள் தலைவிக்கு வழங்கப்பட்ட நீதியை கடைகளை அடைத்துக் கொண்டாடினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். மாநிலமெங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போதாத குறைக்கு வருணனும் வாழ்த்துமாரி பொழிய, வீட்டிலிருப்பவர்களின் பயத்தினால்  இம்முறை கிடைக்காமலே போனது அந்த மதுரமான இரவு.


ஏறக்குறைய எங்களைத்தவிர எல்லோருமே அறிவித்திருந்தார்கள் பாறைத் திருவிழா நிறுத்தப்பட்டதாய். ஆனால் எந்தப்பெரிய புயலும், மழையும் அசைத்துக்கூட பார்க்கவில்லை பசுமைநடையின் பாறைத்திடமான உறுதியை.


வான வேடிக்கையோடு கொண்டாட வேண்டிய விழா, ஒருபுறம் வானம் வேடிக்கை காட்ட, மறுபுறம் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியில் பேருந்துகளும் தவழாது கிடக்க, நமத்துபோகுமென நினைத்தவர்கள் வாயைப்பிளக்க, பசுமைநடையினை நம்பி, பசுமைநடைக்கு நம்பிக்கையளித்து சாரையாக வந்த மக்கள் நடத்திக்காட்டினார்கள் உறுதிமிக்கதொரு விழாவை. ஆம், பாறைத் திருவிழா பெயருக்கேற்ப பாறைத்திடமான உறுதிகொண்ட மக்களின் உறுதுணையும், பங்களிப்புமோடு அரங்கேறியது. இந்த உறுதி பெண்களாலும், குழந்தைகளாலும், குடும்பங்களாலும் பிணைக்கப்பட்டது.
விழாவின் அடிநாதமாக பசுமைநடை வரலாற்றின் மூலம் வடிக்கப்பட்ட மதுர வரலாறு நூல் இம்முறை நேர்த்தியான மூன்றாம் பதிப்பாகவும், ஆங்கில வடிவமான  “History of Madura – Voyage into Jaina Antiquity” யாகவும் வெளியிடப்பது. இனி மதுரையின் மதுரமான வரலாற்றை சமணப்பெருவெளியினூடே அறிந்துகொள்ள முற்படுவோர் பசுமைநடையின் வாயிலாகவே அதை அறிந்துகொள்ள முடியும்.


வெளியெங்கும் மழை. ஆனால் மக்கள் மனமெங்கும் பாறைத் திருவிழா நிகழ்வுகளை எதிர்நோக்கிய ஆவல். பேரிடர் மேலாண்மையில் மேற்படிப்பு முடித்தவர்களைப் போல் பேரிடர் மீட்பிற்குரிய நேர்த்தியில் எல்லா ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தி செவ்வனே விழாவினை கொண்டு சென்றது பசுமைநடைக் குழு. விழா நிறைவடைகையில் எல்லோரது மனதும் நிறைந்தே இருந்தது. முன்னெப்போதும் பெறாத மன நிறைவுடன் மீண்டுமொரு விழாவினை முன்னெடுக்கும் முனைப்போடு கலைந்து சென்றது பசுமைநடை.   
புகைப்படங்கள் உதவி: Eb Jai...
பி.கு: விருட்சத் திருவிழா மற்றும் பாறைத் திருவிழாக்களின் சுவாரசியம் நிறைந்த விழா ஏற்பாடுகள், பின்னரங்கு வேலைகள், உணர்வுகள் ஆகியவை ஒரு பதிவாகவும், குழந்தைகள் திருவிழா ஒரு பதிவாகவும் விரைவில் இங்கே பதிவிடப்படும்...

Thursday 9 January 2014

யானைமலையில் பசுமைநடை (29)...


என்ன மாப்ள 2-3 நாளா உன் போன் ரீச் ஆகல?

ஆமா மாப்ள, புனே போயிருந்தேன்டா அதான் சுவிட்ச் ஆப் பண்ணிருந்தேன், ஏன்டா?

வேற ஒண்ணுமில்லை, போன ஞாயித்துக்கிழமை உங்க ஏரியாவுக்கு வந்திருந்தோம் அதான்.

வந்திருந்தோமா? யார்யாரெல்லாம்? எதுவும் முக்கியமான விசயமா?

இல்ல மாப்ள, சும்மா தான் கிரீன் வாக்ல இருந்து யானைமலைக்கு வந்திருந்தோம். சரி நீ வீட்ல இருந்தா உன்னையும் வர சொல்லலாம்னு தான்.


கிரீன் வாக்னா இந்த மலை மலையா போவிங்களே அதான? இந்த வாட்டி யானைமலையாக்கும்? உங்களுக்கு யானைமலையைப் தெரியுமா?

எங்களுக்கு தெரியுறது இருக்கட்டும். உனக்கு முழுசா தெரியுமா?

ஏன் தெரியாம? எங்களுக்கு இந்த மலையே சாமிடா. இங்க நரசிங்கப்பெருமாளுக்கு குடைவரை கோயில் இருக்கு. ரொம்ப பழமையான கோயில்.


வேற என்ன தெரியும்?

வேற என்ன இருக்கு?

இந்த மலையில சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் எல்லாம் இருக்கு தெரியுமா? லாடன் கோயில் இருக்கு தெரியுமா?


ஆமா, மலை மேல கொஞ்ச தூரத்துல கல்வெட்டுலாம் இருக்கு. ஏதோ பஞ்ச பாண்டவர், முனிவர்லாம் இருந்த இடம்னு சொல்லுவாங்க. அதென்ன சமணர் படுக்கை? லாடன் கோயில்?

அது என்னன்னு சொல்றேன். கல்வெட்டுலாம் இருக்குனு சொன்னியே அதுல என்ன எழுதிருக்குனு தெரியுமா?

கல்வெட்டு இருக்குனு தான் தெரியும். அதுல என்ன இருக்குனு தெரியாது.

ஆனா எனக்கு தெரியும். இந்த மலையைப் பத்தி உனக்கு தெரியாததெல்லாம் எனக்கு தெரியும். எனக்கு மட்டுமில்ல, சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், விருது நகர், ராமநாதபுரம், வத்ராப் அப்புறம் மதுரைக்குள்ளயே  அங்க இங்கனு  கிட்டத்தட்ட இப்போ 250  பேருக்கும் அதிகமானவங்களுக்கு தெரியும்.


என்னடா சொல்ற? எங்க ஊரைப்பத்தி எனக்கே தெரியாததெல்லாம் எங்கெங்கயோ இருந்து வந்து தெரிஞ்சுட்டு போயிருக்காங்க. நீ சொல்லும்போது எனக்கே வெக்கமா இருக்கு மாப்ள. தயவுசெஞ்சு கொஞ்சம் அதபத்தி சொல்லுடா, நானும் தெரிஞ்சுக்குறேன்...

ஹா ஹா. சொல்றேன் மாப்ள. உங்க ஊரு பேரு மொதல்ல, அதாவது 9-10 நூற்றாண்டுல நரசிங்கமங்கலம், இப்போ தான் அது நரசிங்கம்னு சுருங்கிடுச்சு. நான் சொல்லல, கல்வெட்டு சொல்லுது. இந்த மலையோட உயரம் 90 மீட்டர், அகலம் 1200 மீட்டர்,  நீளம் 4000 மீட்டர்.  



நாம நிக்கிறதுக்கு நேரா தும்பிக்கை மாதிரி தெரியுது பாரு அங்க ஒரு இடத்துல இயற்கையாவே சின்ன குகை மாதிரி இருக்கும். அங்க கொஞ்சம் சமணர் படுக்கைகளும், ஒரு தமிழ் பிராமி கல்வெட்டும் இருக்கு. சமணர் படுக்கைனா என்னன்னா, மதுரையை சுத்தி இருக்கிற அதிகமா ஆள் நடமாட்டமில்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற மலைகள்ல யார் தொந்தரவும் இல்லாம இருக்கனும்ங்கறதுக்காக சமணத் துறவிங்க வந்து தங்கினாங்க. அவங்க தங்குறதுக்கு வசதியா கல்லுலயே படுக்கை மாதிரி வெட்டி குடுப்பாங்க, அதான்.



யானைமலையில அந்த இடத்துக்கு போறதுக்கு நரசிங்கம் மெயின் ரோட்ல போலீஸ் ஸ்டேஷன் தாண்டுனதும் வலது பக்கம் ஒரு சந்து மாதிரி போகுதுல, உனக்கு தான் தெரியுமே அந்த வழியாத் தான் போகணும். 



ஆனா மேல கொஞ்சம் சிரமப்பட்டு தான் மாப்ள ஏறனும். கொங்சதூரம் படி இருக்கு, அப்புறம் ஒரு இடத்துல இரும்புட்ட படி போட்ருக்காங்க. அதத் தாண்டி போனா தான் நான் சொல்ற படுக்கைகளும், கல்வெட்டும் வரும்.



அந்த கல்வெட்டுல என்ன போட்ருக்குனா,
“இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்
அப்டின்னு போட்ருக்கு. இதுல இவம் அப்டினா சமஸ்கிருதத்துலயும், பிராகிருதத்துலயும் யானைன்னு அர்த்தம். அதாவது 2000 வருசத்துக்கு முன்னாடியே இதுக்கு யானைமலைன்னு பேர் இருந்திருக்கு. உறையுள் அப்டினா தங்குமிடம், பாதந்தான் அப்டினா பாய் அல்லது படுக்கை. அதையே பதந்தன்ன்னு வாசிச்சா மரியாதைக்குரியவர்னு அர்த்தம். அட்டவாயி/அத்துவாயின்னா சொற்பொழிவாளர்ன்னு அர்த்தம். காயிபனை காஸ்யபன்ற கோத்திர பேராகவும் அர்த்தப்படுத்திக்கலாம். சுருக்கமா சொல்லனும்னா ஏரி அரிதன் மற்றும் அத்துவாயி அரட்டகாயிபன்ங்கிற ரெண்டு சமணத்துறவிகளுக்காக யானைமலையில வெட்டிக்குடுத்த படுக்கை அப்டின்னு அர்த்தம்.


மாப்ள, இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? இத்தனை நாள் எனக்கு தெரியாமப் போச்சே மாப்ள. சரி மலைமேல ஒரு யானைக்கண்ணீர் ஊற்று இருக்கே? போனிங்களா?


அது தெரியும் மாப்ள. ஆனா இந்த தடவ போகல. இன்னொரு நாளைக்கு மலைக்கு மேல நடக்கனும்னு சொல்லிருக்காங்க. அன்னைக்கு போவோம்.
மாப்ள, அப்புறம் நரசிங்கம் கோயிலுக்கு போற வழியில நிறைய சமண சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டும் இருக்கு. அதையெல்லாம் இந்த தடவ பாக்கல. ஏற்கனவே அங்க போய்ட்டு வந்துட்டோம். ஆனாலும், புதுசா வந்தவங்களுக்காக காந்திகிராம் பல்கலைக்கழகத்தோட ஹிஸ்டரி ப்ரொபசர் கண்ணன் சார் கொஞ்சம் சொன்னாரு.



நரசிங்கபெருமாள் கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி வலது பக்கம் திரும்பி போனா 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், அப்புறம் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா இயக்கி சிலைகள் இருக்கு. அதுக்கு மேலயெல்லாம் சுண்ணாம்பு பூசி அழகழகா கலர்ல ஓவியம் வரைஞ்சிருக்காங்க. அது சித்தன்ன வாசல் ஓவியம் வரைஞ்ச காலகட்டத்தை சேர்ந்ததுன்னு சொன்னாரு. யோகநரசிம்மர் கோயிலும், லாடன் கோயிலும் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயிலாம்.



பாத்தியா உங்க ஊரு மலை எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு. இப்பிடிப்பட்ட மலையைத் தான் சிற்ப நகரா மாத்தணும்னு முயற்சி பண்ணாங்க. அப்போ ஆரம்பிச்சது தான் பசுமை நடை. அதுனால இந்த மலை பசுமைநடையோட வரலாற்றுலயும் இடம் பிடிச்சுருச்சு.


அப்டியா மாப்ள. நான் கூட எங்க மலைய உடைக்கக்கூடாதுன்னு பயலுகளோட சேந்து ரோட்ட மரிச்சேன் மாப்ள. சரி மாப்ள, யாரு வேணாலும் பசுமை நடைக்கு வரலாமா? எப்போலாம் போவிங்க? சேரணும்னா என்ன பண்ணனும்?


யாரு வேணாலும் சேரலாம் மாப்ள. ஒவ்வொரு மாசமும் ஏதாவதொரு ஞயிற்றுக்கிழமை அன்னைக்கு காலைல வெள்ளன 6 மணிக்கெல்லாம் போய்ட்டு 9-10 மணிவாக்குல முடிச்சு திரும்பிடுவோம். இத SMS / Face Book மூலமா தான் ஒருங்கிணைக்கிறோம். இதுல சேரணும்னா 97897 30105 ன்ற நம்பரை தொடர்பு கொண்டா போதும். Face Book ல போய் Green Walk ன்ற பேஜ் பாரு மாப்ள.

அ.முத்துக்கிருஷ்ணன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார்ல?


ஆமா, இந்த விஜய் டிவில எல்லாம் வருவாரே, நீயா நானவுல?

அவரே தான். அவரு தான் இத மொத மொதல்ல ஆரம்பிச்சாரு. அப்புறம் அவரோட நண்பர்கள், பொது மக்கள்னு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 800 பேர் வரை பசுமைநடையில உறுப்பினர் ஆகிருக்காங்க மாப்ள. இந்த தடவ கூட 250 பேர் வந்துட்டாங்க. அதான் ஏற்கனவே சொன்னேன்ல?


யே யாத்தே! அம்புட்டு பெரும் காலங்காத்தால எந்திரிச்சு வந்துர்றாங்களா மாப்ள? அதுவும் வெளியூர்கள்ல இருந்தெல்லாம் வர்றாங்கன்னு வேற சொல்ற?

அதெல்லாம் ஒவ்வொரு தடவையும் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது மாப்ள. இதுல அவ்வளவு பேருக்கும் காலை சாப்பாடு வேற தர்றோம் மாப்ள. அதுவும் கட்டணமில்லாம. ஆனா யாராவது தானா முன்வந்து ஏதாவது குடுத்தா வாங்கிக்குவோம்.

அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும் மாப்ள. பசுமைநடைக்கு கும்பகோணத்துல இருந்து முருகராஜ்னு ஒரு நண்பர் வர்றாரு. அவரும் அவரு நண்பர்களும் சேந்து சஞ்சிகைனு ஒரு சின்ன பத்திரிகை நடத்துறாங்க. அதுல பசுமைநடையைப் பத்தி தொடர்ச்சியா பதிவுபண்றாங்க. நான் கூட கட்டுரை எழுதிருக்கேன். இந்த மாசத்தோட சஞ்சிகை இதழ அங்கன மலை மேலேயே வச்சு வெளியிட்டாப்ள. வந்தவங்களுக்கும் அதுல ஒரு சந்தோசம்.


பரவாயில்லையே மாப்ள. யானைமலை சிற்பநகரா மாத்துனப்ப ஆரம்பிச்சதுன்னு சொல்ற? அப்டினா கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கு மேல ஆச்சே. இவ்ளோ நாளு இத கட்டணமில்லாம நடத்துறதே பெரிய விஷயம் தான் மாப்ள. உண்மையிலேயே எழுத்தாளர்.அ.முத்துக்கிருஷ்ணனைப் பாராட்டணும். எனக்கும் இப்போ ஆர்வமாயிடுச்சு மாப்ள. அடுத்த மாசத்துல இருந்து நானும் வர்றேன். அதுக்கு முன்னாடி யானைமலையை பயலுகளோட ஒரு வாட்டி சுத்திப்பாக்கப் போறேன். நிறைய விசையம் சொல்லிருக்க. ரொம்ப நன்றி மாப்ள.

சரி மாப்ள. நீ பாத்துட்டு வா. நாம அடுத்த நடையில அதப்பத்தி பேசலாம். அடுத்த நடை மேலக்குயில்குடிக்கு போறோம், ஜனவரி 26 ம் தேதி. அங்க சந்திப்போம். பாய்.


- உதயக்குமார் பாலகிருஷ்ணன்... 

ஒளிப்படங்கள்:

அருண் பாஸ், எப் ஜெய், மதுமலரன், ஷாஜகான், சுந்தர், P.G.சரவணன்...