Saturday 28 September 2013

மதுரை...

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை...

நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை...

மல்லிகை மௌவ்வல் அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
நாடிய மாடிய பதிமதுரை...

தொன்னவன் நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை...

தமிழைக் குடித்த கடலோடு - நான்
தழுவேன் என்றே சபதமிட்டு
அமிர்தம் பரப்பும் வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை - இது
மரபுகள் மாறா வேல்மதுரை...

மதுரை தாமரைப் பூவென்றும் - அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை
எம்குடி மக்கள் திரள் என்றும் - பரி
பாடல் பாடிய பால்மதுரை - வட
மதுரா புரியினும் மேல்மதுரை...

மீசை வளர்த்த பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர் சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த
அந்நியரில்சில கண்ணியரும்
ஆட்சிபுரிந்த தென்மதுரை -
மீனாட்சியினால் இது பெண்மதுரை...

மண்ணைத் திருட வந்தவரைத் - தம்
வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட வந்தவரை - ஊர்
பொசுக்கிப் போக வந்தவரைத் - தன்
சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய தூய்மதுரை...

அரபுநாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல் - ஒரு
மண்டபம் திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
கவிதைத் தமிழனின் தலைமதுரை...

வையைக் கரையின் சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும் தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும் தென்மதுரை...

போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின் ஒசைகளும் - இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும் வலையொலியும்
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண்
தூங்காதிருக்கும் தொழில்மதுரை...

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம் பெருக்கியத்தில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை...

நெஞ்சு வறண்டு போனதனால் - வையை
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் - நதியைப்
பாட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை...

- கவிப்பேரரசு வைரமுத்து...        

Thursday 26 September 2013

பாண்டிய மண்ணில் பசுமை நடை...

பாண்டிய மண்ணில் பசுமை நடை  – திருவாதவூர் பயணம்...
நாள்: 22/09/2013

இரவெல்லாம் பூத்த வெண்பனி மலறாத மென் காலைப் பொழுது. கதிரவன் இன்னும் உறங்கி எழாத விடியுமுற்பொழுதை கொஞ்சமேனும் பகலாக்க உழைத்துக் கொண்டிருந்தன வீடு திரும்பாத நிலவும், இரவுப் பணியை முடிக்காத தெருவிளக்குகளும். அதிகாலைப் பண்பலைகள் ஒருபுறம் தேவகானம் பாட, ஞாயிற்றுக்கிழமையாதலால் வழக்கமான விறைப்போடல்லாது சற்று சோம்பலாகவே விழித்தன டீக்கடைகள். வழக்கமாக ஊர்வனவற்றில் சேரும் பேருந்துகளும், தங்களைப் பறப்பனவையாக அடையாளப்படுத்தும் முனைப்பில் தூக்கம் களைந்து உறுமிக்கொண்டு விரைந்தன, ஆளரவமற்ற தார் சாலைகளில். இவற்றோடு நானும் எனது வண்டியை உதைத்துக் கிளம்பி சென்றுகொண்டிருந்தேன் புகையும், தூசியுமற்ற விடிகாலை சாலையில்...


சேவல் கூவும் சத்தம் கேட்டு வானம் வைத்துக்கொண்டிருந்தது செந்நிறத்தில் ஒரு வட்டப் பொட்டு. வானம் எனக்கொரு போதிமரமென வைரமுத்து எழுதியது எவ்வளவு உண்மை! மறைதல் நாணமென்றால் உதித்தல் மோகம். கதிரவன் தூக்கம் களைய கண்விழித்துக் கொண்டிருந்தது மதுரை. போகும் வழியில் களைகட்டியிருந்தது கரிமேடு மீன் மார்க்கெட். கவிச்சி திங்காத ஞாயிற்றுக்கிழமைகளை சாபக்கேடாகக் கருதும் மதுரைக்காரர்களின் வாய் ருசிக்கவும், தங்களின் வயிற்றை ரொப்பவும் கூடை கூடையாக மீன்களை அள்ளிக்கொண்டிருந்தனர் வியாபாரிகள். குறுக்கும் நெடுக்குமாக வளைய வந்த ட்ரைசைக்கிளின் நடுவே சிரமேற்கொண்டு வண்டியை லாவகமாக ஓட்டுவதே சவால். சவாலில் வெற்றிபெற்ற என் வண்டி நேரே சென்று நின்ற இடம் மாட்டுத்தாவணி.

இரவு வீட்டில் தூங்கி எழுந்தார்களா? அல்லது இங்கு வந்து தூங்காமலே காத்திருந்தார்களா? ஆர்வமிகுதியுடன் எனக்கு முன்பே அங்கிருந்தனர் அநேகர். வழக்கம் போல சோம்பலான தாமதத்துடன் சிலர். சற்று நேரத்தில் கிளம்பியது பசுமைநடைப் பயணம் மாணிக்கவாசகரின் மண்ணை நோக்கி. மாட்டுத்தாவணியிலிருந்து ஒத்தக்கடை சென்று அங்கிருந்து வலதுபுறம் திரும்பியது திருவாரூர் பயணம். இதற்குள் கதிரவன் முழுச் சோம்பல் நீங்கி முறைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கென்ன கோபமோ?!? வழக்கமாக டீக்கடையில் மொய்க்கும் கூட்டம் பார்த்திருக்கிறோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒத்தக்கடை அங்குவிலாஸ் அல்வா கடையில் அதிகாலையிலேயே மொய்த்தது, ஈக்கள் அல்ல மக்கள் கூட்டம். புதுத்தாமரைப்பட்டி பத்திர அலுவலகம் வரையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகமாய் பட்டா போட்டிருந்த விளைநிலங்கள், அதைத் தாண்டியதும் கொஞ்சம் கொஞ்சமாய் பசுமை வடிவம் பெற்றிருந்தன.


கொஞ்சம் நெரிசலாய்த் தெரிந்த சாலை திருமோகூர் தாண்டியதும் வெறிச்சோடியிருந்தது. சாலையில் அமர்ந்து சாவகாசமாக சிற்றுண்டி உண்டுகொண்டிருந்தன புறாக்களும், காகங்களும், இன்னும் பெயர் தெரியாப் பறவைகளும். வழியெங்கும் ஆனந்தக்கூத்தாடிக்கொண்டிருந்தன மயில்கள். தார்ச்சாலையில் பெயரெழுதிச் சென்ற டிராக்டர்களின் இரும்புச் சக்கரங்கள் சொல்லிச்சென்றன இன்னும் அந்தப் பக்கம் மிச்சமிருக்கும் விவசாயத்தை. அவற்றின் தடங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன வசதியென நாம் மறந்து வாழாது விட்ட நம் வாழ்க்கையை. சாலைகளில் கிடை கிடையாக சென்றுகொண்டிருந்தன ஆடுகளும், மாடுகளும். அவற்றினூடே மனிதர்களும் அவ்வப்போது ஒன்றிரண்டு வண்டிகளும். இருமருங்கிலும் இருக்கும் மரங்களைப் பிடுங்கி நடுவே சிகப்பு, மஞ்சலென அரளிப்பூச்செடிகளை மலர்வளையமாக நட்டுவைத்திருக்கும் விரைவுச்சாலைகளைப் போலல்லாது, தன் இயல்பைத் தொலைக்காது இருபுறமும் மரங்கள் சூழ குகைப் பாதையென பயணிக்கிறது திருவாதவூர் சாலை.



வழியெங்குமிருந்த இன்னும் குழாய்களாக நசுக்கப்படாத, பாட்டில்களில் சிறையிடப்படாத நீர்நிறைந்த குட்டைகளில் கத்திக் கொண்டிருந்தன தவளைகள். அவற்றை உண்ணும் முனைப்பில் சுத்திக் கொண்டிருந்தன பாம்புகள். குட்டைகளின் கரையோரம் ஒருபுறம் அமர்ந்து பெண்கள் துவைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர் பயமறியாச் சிறுவர்கள்.


ஊரூறிற்கு என்ன இருக்கிறதோ இல்லையோ வழியெங்கும் தவறாமல் இருக்கின்றன டீக்கடைகளும் அதில் காலை எழுந்தவுடன் தேசிய பானமாம் டீயின் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் மனிதர்களும். மதுக்கடைகளை டாஸ்மாக்குகளாக அங்கீகரித்ததைப் போல் டீக்கடைகளையும் அரசுடமையாக்கலாம். பெண்கள், குழந்தைகளும் குடிப்பதால் “யு” சான்றிதழோடு கடை நடத்தலாம். அரசின் கவனத்திற்கு!
இப்படி மாட்டுத்தாவணியிலிருந்து வழியெங்கும் குதூகலப்படுத்தி வந்த சாலையின் 19-ஆவது கிலோமீட்டரில் திருவாதவூருக்குள் செல்லும் முன்பே வலப்புறம் 2000 வருடப் பழமையை சுமந்து கொண்டு அமைதியாய்ப் படுத்துக் கிடக்கின்றது கற்பாறைகளாலான ஓவா மலை. 


ஏறக்குறைய தன்னைத் தவிர தன்னைச் சுற்றியிருந்த எல்லா சகோதர மலைகளையும் மனிதர்களின் பேராசைக்கு குவாரிகளாக தின்னக் கொடுத்த பிறகும் இன்னும் அது மிச்சமிருப்பது அது சுமந்த தமிழால். ஆம், அது தாங்கிய தமிழ் அதனைக் காத்து வருகிறது 2015 ஆண்டுகளாக. சமணம் தமிழுக்குச் செய்த தொண்டு ஒருபுறமிருக்க, அது மதுரைக்குச் செய்த தொண்டு மதுரையின் அனைத்துத் திசைகளிலும் உள்ள மலைகளில் குடைவரைகள், கற்படுக்கைகள், கல்வெட்டுக்களைப் பதித்து அவற்றையும், அவற்றோடு இயற்கையையும் காத்தது. இல்லாவிட்டால் இம்மலைகளெல்லாம் இந்நேரம் கபளீகரம் செய்யப்பட்டு, நிலவைப் போலவே மதுரையும் எண்ணற்ற குழிகளுடன் காட்சி தந்து கொண்டிருக்கும்.


மலையின் முகப்பில் பாதுகாக்க வேண்டிய இடம் என்ற வாசகங்களோடு, பாதுகாப்பின்றி நிற்கிறதொரு பலகை. அதனருகே சாவகாசமாய்ப் படுத்துக்கிடக்கின்றன 2009-ஆம் ஆண்டில் தொல்லியல் துறையால் வைக்கப்பட்ட மலையின் வரலாறு சொல்லும் இரு மார்பிள் கற்பலகைகள். அதன் மேற்பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் காணக் கிடைகின்றன குகைத்தளமும், கற்படுக்கைகளும், இரு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்.
 


“பாங்காட அரிதன் கொட்டுபிதோன்”, “உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்” என்ற அந்த இரண்டு தமிழ் பிராமி கல்வெட்டுக்களின் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு. வெட்டியதிலிருந்து எங்கும் தொலைந்து போகாத அந்தக் கல்வெட்டுக்களின் இருப்பிடத்தை 1996-ல் வெளிப்படுத்தியவர் ஐ.மகாதேவன். முதல் கல்வெட்டு இருப்பது குகைத்தளத்தின் நீர்வடிப்பகுதியின் மேல்பகுதியில். அதன் விளக்கம் “இத்தளத்தைக் குடைவித்துக் கொடுத்தது பாங்காடு அல்லது திருவாரூருக்கு அருகிலுள்ள பனங்காடி என்ற ஊரைச் சேர்ந்த அரிதன்” என்பதாகும். இரண்டாவது கல்வெட்டு அமைந்திருப்பது குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் கீழ்ப்பகுதியில். அதன் விளக்கம் “பரசு என்கிற உபாசகர் - உபாத்யாயன் – சமையல் ஆசிரியர் இந்த உறைவிடங்களை அமைத்துக் கொடுத்தார்” என்பதாகும்.

கல்வெட்டுக்களின் அருகில், தொட்டவுடன் சுருண்டு கொள்ளும் ரயில்பூச்சியினைப் போல, சுமை அதிகமானால் தலையில் சுருண்டு பிடிக்கும் சும்மாடைப் போல, கொசு அதிகமானால் கொளுத்தப்படும் கொசுவர்த்திச் சுருளைப் போல வடிவத்தில் ஒத்த ஓவியங்கள் நிறைய இருக்கின்றன. அது கற்கால ஓவியங்களா இல்லை சேட்டைக்காரர்கள் வரைந்த பிற்கால ஓவியங்களா எனத் தெரியவில்லை.

அன்று காணக்கிடைக்கவில்லை எனினும் குகைத்தளத்தின் இடது ஓரம் வாசம் செய்துகொண்டிருக்கின்றன சட்டைகளைக் கழட்டிப் போட்ட திகம்பரப் பாம்புகள். மலையைச் சுற்றிலும், செல்போன் கதிர்வீச்சோ, மாடம் வைத்துக் கட்டப்படாத வீடுகளோ ஏதோவொன்று தொலைத்துக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளும், பட்டாம்பூச்சிகளும் வட்டமிட்டு சுத்தித் திரிகின்றன.

தானே இயற்கையாய், மனிதர்களை விடுத்து ஆளில்லாத மலைகளில் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த, தமக்கென ஏதும் கொள்ளாது திசைகளையே ஆடையாய் அணிந்து வாழ்ந்து மறைந்த திகம்பரர்களின் வாழ்விடங்களே இன்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. பேராசைகளின் மொத்த மூட்டையாய் எல்லாவற்றையும் விழுங்கும் மனிதர்களின் வாழ்க்கை எதிரிலிருக்கும் குவாரிகளின் படுகுழிகளைப்போலே அதலபாதாளத்தில் வீழ்ந்தே கிடக்கின்றன என்ற உண்மை முகத்தில் அறைய பயணம் அங்கிருந்து திருவாதவூருக்கு திசை திரும்பியது.

திருவாதவூரின் பெருமை திருவாதவூரார்-மாணிக்க வாசகரால். எல்லோரும் உருகும் ஒருவாசகமாம் திருவாசகம் இயற்றிய சமயக்குறவர். இறைவன் பக்தர்களுக்காக அதிசயங்கள் புரிந்த கதை நிறைய உண்டு. இறைவனே தன் பக்தனுக்காக வந்து அடிவாங்கிய கதை இவருக்கு மட்டுமே உண்டு. சொக்கநாதர் இவருக்காக நரியைப் பரியாக்கினார், பிட்டுக்கு மண் சுமந்தார், பிரம்படியும் பட்டார் எனப் புராணங்கள் சொல்கின்றன. இன்னொரு சிறப்பும் இவ்வூருக்கு உண்டு. இவ்வூர் கி.மு.2-ஆம் நூற்றாண்டில் சங்ககாலப் புலவர் கபிலர் பிறந்து, வாழ்ந்து, மறைந்த ஊர்.

திருமறைநாதர்-வேதநாயகி அம்மாள். திருவாதவூரில் வீற்றிருக்கும் தெய்வங்கள். சலனமின்றி அமைதியாகவே இருக்கிறது இவர்களின் இருப்பிடமும், அங்குசென்றபின் நம் மனமும். கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோயிலுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டுக்களோடு, வியாபாரிகளும், தேவரடியார்களும் சிலைகள் வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டுக்களையும் சேர்த்து எழுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இவ்வூரில் “உலகளந்த சோழன் பேரேரி” அதாவது ராஜராஜச் சோழனின் பெயர் தாங்கிய ஏரி ஒன்றுள்ளது. இதன் மடையில், பீமன் இந்திரலோகத்திலிருந்து கொண்டுவந்ததாய்க் கருத்தப்படும் புருசாமிருகச் சிலையொன்று உள்ளது (பல் மருத்துவர் ராஜான்னா, யாரோ கடுங்கோவத்திலிருந்த ஒரு பொண்டாட்டி இந்த மிருகத்துக்கு பேர் வச்சிருப்பாளோ? என வேடிக்கையாய் சொல்வார்). அதோடு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சிப் பொறுப்பேற்றதைக் குறிக்கும் நினைவுத் தூணொன்றும் உள்ளது.


எல்லாம் சரி. சங்க முற்காலத்திலிருந்து வெள்ளையர் காலம் வரை வெவ்வேறு காலத்திய அடையாளம் தாங்கிய இவ்வூருக்கு ஏன் திருவாதவூரெனப் பெயராம்? சனீஸ்வரருக்கு வாதநோயைப் போக்கியதால் வாதவூர் – திருமறைநாதர் வீற்றிருப்பதால் திருவாதவூர். வாத நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். ஊமைகளையும் வாதத்தில் வல்லவர்களாக மாற்றும் நாதர் இவர் அதனால் இது திருவாதவூர் எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ? அருமையானதொரு பயணம். அதைச் சாத்தியப்படுத்தியது பசுமை நடை.

பசுமைநடை –


எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணனால் விதையிடப்பட்டு  இன்று விருட்சமென வளர்ந்து நிற்கும் ஒரு தன்னார்வ அமைப்பு. நாம் மறந்துவிட்ட, நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட, நம்மைச் சுற்றியுள்ள, நமக்கு தெரிந்த/தெரியாத இடங்களின் தெரியாத வரலாறுகளை தெரியப்படுத்தி அதை பொதுவில் வைக்கிறது பசுமைநடை. ஏனோதானோவென்றில்லை,தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியலறிஞர்கள், சூழலியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்/ஆசிரியர்கள், முனைவர்கள், ஓவியர்களின் துணைகொண்டு ஆழமாக, வீரியமாக.


தொல்லியலறிஞர்.முனைவர்.சாந்தலிங்கம் மேற்சொன்ன வரலாற்றுத் தகவல்களை விவரிக்கும் பாங்கு அலாதியானது. அவற்றை அவர் விவரிக்கும் போது உண்டாகும் பூரிப்பு அதன் மேல் அவருக்கு இருக்கும் ஈர்ப்பையும், ஈடுபாட்டையும் காட்டுகிறது. பசுமைநடையின் சிறப்பு இதில் எல்லோருமே தத்தமது சொந்த அடையாளம் விடுத்து தன்னார்வலர்களாக, பசுமைநடை உறுப்பினர்களாக மட்டுமே இருப்பது தான். இது எளியோர்கள் சேர்ந்து நடத்தும் வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாதமும் பெரும்பாலானோருக்கு வசதிப்பட்ட ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பயணப்படுகிறது பசுமைநடை. நீங்களும் ஒருமுறை சென்று அனுபவியுங்களேன்...

புகைப்படங்கள்: மருத்துவர்.ராஜான்னா மற்றும் செல்வம் ராமசாமி...

பசுமைநடையில் இணைந்துகொள்ள - 97897 30105, greenwalkmdu@gmail.com.

Monday 16 September 2013

வணக்கம்...

மீனாட்சி பட்டணம் -


தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகராம் மதுரையின் கலாச்சாரத்தையும் அதன் பின்புலத்தையும் தேடிச் சென்று தொகுக்கும் ஒரு சாதாரணனின் முயற்சி... 

நமது பழக்கவழக்கங்கள், சடங்குகள் என கூடுமானவரை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் முயற்சி. "மதுரையைச் சுற்றிய கழுதையும் வேற ஊர் தங்காது" என்றொரு சொலவடை உண்டு. இது மதுரையைச் சுற்றும் கழுதையின் அனுபவம். மதுரையை சுற்ற விரும்பும் கழுதைகளுக்கான களம்...

தங்களது மேலான ஆதரவுகளுடன்...

பா.உதயக்குமார்...