Thursday 26 September 2013

பாண்டிய மண்ணில் பசுமை நடை...

பாண்டிய மண்ணில் பசுமை நடை  – திருவாதவூர் பயணம்...
நாள்: 22/09/2013

இரவெல்லாம் பூத்த வெண்பனி மலறாத மென் காலைப் பொழுது. கதிரவன் இன்னும் உறங்கி எழாத விடியுமுற்பொழுதை கொஞ்சமேனும் பகலாக்க உழைத்துக் கொண்டிருந்தன வீடு திரும்பாத நிலவும், இரவுப் பணியை முடிக்காத தெருவிளக்குகளும். அதிகாலைப் பண்பலைகள் ஒருபுறம் தேவகானம் பாட, ஞாயிற்றுக்கிழமையாதலால் வழக்கமான விறைப்போடல்லாது சற்று சோம்பலாகவே விழித்தன டீக்கடைகள். வழக்கமாக ஊர்வனவற்றில் சேரும் பேருந்துகளும், தங்களைப் பறப்பனவையாக அடையாளப்படுத்தும் முனைப்பில் தூக்கம் களைந்து உறுமிக்கொண்டு விரைந்தன, ஆளரவமற்ற தார் சாலைகளில். இவற்றோடு நானும் எனது வண்டியை உதைத்துக் கிளம்பி சென்றுகொண்டிருந்தேன் புகையும், தூசியுமற்ற விடிகாலை சாலையில்...


சேவல் கூவும் சத்தம் கேட்டு வானம் வைத்துக்கொண்டிருந்தது செந்நிறத்தில் ஒரு வட்டப் பொட்டு. வானம் எனக்கொரு போதிமரமென வைரமுத்து எழுதியது எவ்வளவு உண்மை! மறைதல் நாணமென்றால் உதித்தல் மோகம். கதிரவன் தூக்கம் களைய கண்விழித்துக் கொண்டிருந்தது மதுரை. போகும் வழியில் களைகட்டியிருந்தது கரிமேடு மீன் மார்க்கெட். கவிச்சி திங்காத ஞாயிற்றுக்கிழமைகளை சாபக்கேடாகக் கருதும் மதுரைக்காரர்களின் வாய் ருசிக்கவும், தங்களின் வயிற்றை ரொப்பவும் கூடை கூடையாக மீன்களை அள்ளிக்கொண்டிருந்தனர் வியாபாரிகள். குறுக்கும் நெடுக்குமாக வளைய வந்த ட்ரைசைக்கிளின் நடுவே சிரமேற்கொண்டு வண்டியை லாவகமாக ஓட்டுவதே சவால். சவாலில் வெற்றிபெற்ற என் வண்டி நேரே சென்று நின்ற இடம் மாட்டுத்தாவணி.

இரவு வீட்டில் தூங்கி எழுந்தார்களா? அல்லது இங்கு வந்து தூங்காமலே காத்திருந்தார்களா? ஆர்வமிகுதியுடன் எனக்கு முன்பே அங்கிருந்தனர் அநேகர். வழக்கம் போல சோம்பலான தாமதத்துடன் சிலர். சற்று நேரத்தில் கிளம்பியது பசுமைநடைப் பயணம் மாணிக்கவாசகரின் மண்ணை நோக்கி. மாட்டுத்தாவணியிலிருந்து ஒத்தக்கடை சென்று அங்கிருந்து வலதுபுறம் திரும்பியது திருவாரூர் பயணம். இதற்குள் கதிரவன் முழுச் சோம்பல் நீங்கி முறைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கென்ன கோபமோ?!? வழக்கமாக டீக்கடையில் மொய்க்கும் கூட்டம் பார்த்திருக்கிறோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒத்தக்கடை அங்குவிலாஸ் அல்வா கடையில் அதிகாலையிலேயே மொய்த்தது, ஈக்கள் அல்ல மக்கள் கூட்டம். புதுத்தாமரைப்பட்டி பத்திர அலுவலகம் வரையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகமாய் பட்டா போட்டிருந்த விளைநிலங்கள், அதைத் தாண்டியதும் கொஞ்சம் கொஞ்சமாய் பசுமை வடிவம் பெற்றிருந்தன.


கொஞ்சம் நெரிசலாய்த் தெரிந்த சாலை திருமோகூர் தாண்டியதும் வெறிச்சோடியிருந்தது. சாலையில் அமர்ந்து சாவகாசமாக சிற்றுண்டி உண்டுகொண்டிருந்தன புறாக்களும், காகங்களும், இன்னும் பெயர் தெரியாப் பறவைகளும். வழியெங்கும் ஆனந்தக்கூத்தாடிக்கொண்டிருந்தன மயில்கள். தார்ச்சாலையில் பெயரெழுதிச் சென்ற டிராக்டர்களின் இரும்புச் சக்கரங்கள் சொல்லிச்சென்றன இன்னும் அந்தப் பக்கம் மிச்சமிருக்கும் விவசாயத்தை. அவற்றின் தடங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன வசதியென நாம் மறந்து வாழாது விட்ட நம் வாழ்க்கையை. சாலைகளில் கிடை கிடையாக சென்றுகொண்டிருந்தன ஆடுகளும், மாடுகளும். அவற்றினூடே மனிதர்களும் அவ்வப்போது ஒன்றிரண்டு வண்டிகளும். இருமருங்கிலும் இருக்கும் மரங்களைப் பிடுங்கி நடுவே சிகப்பு, மஞ்சலென அரளிப்பூச்செடிகளை மலர்வளையமாக நட்டுவைத்திருக்கும் விரைவுச்சாலைகளைப் போலல்லாது, தன் இயல்பைத் தொலைக்காது இருபுறமும் மரங்கள் சூழ குகைப் பாதையென பயணிக்கிறது திருவாதவூர் சாலை.



வழியெங்குமிருந்த இன்னும் குழாய்களாக நசுக்கப்படாத, பாட்டில்களில் சிறையிடப்படாத நீர்நிறைந்த குட்டைகளில் கத்திக் கொண்டிருந்தன தவளைகள். அவற்றை உண்ணும் முனைப்பில் சுத்திக் கொண்டிருந்தன பாம்புகள். குட்டைகளின் கரையோரம் ஒருபுறம் அமர்ந்து பெண்கள் துவைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர் பயமறியாச் சிறுவர்கள்.


ஊரூறிற்கு என்ன இருக்கிறதோ இல்லையோ வழியெங்கும் தவறாமல் இருக்கின்றன டீக்கடைகளும் அதில் காலை எழுந்தவுடன் தேசிய பானமாம் டீயின் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் மனிதர்களும். மதுக்கடைகளை டாஸ்மாக்குகளாக அங்கீகரித்ததைப் போல் டீக்கடைகளையும் அரசுடமையாக்கலாம். பெண்கள், குழந்தைகளும் குடிப்பதால் “யு” சான்றிதழோடு கடை நடத்தலாம். அரசின் கவனத்திற்கு!
இப்படி மாட்டுத்தாவணியிலிருந்து வழியெங்கும் குதூகலப்படுத்தி வந்த சாலையின் 19-ஆவது கிலோமீட்டரில் திருவாதவூருக்குள் செல்லும் முன்பே வலப்புறம் 2000 வருடப் பழமையை சுமந்து கொண்டு அமைதியாய்ப் படுத்துக் கிடக்கின்றது கற்பாறைகளாலான ஓவா மலை. 


ஏறக்குறைய தன்னைத் தவிர தன்னைச் சுற்றியிருந்த எல்லா சகோதர மலைகளையும் மனிதர்களின் பேராசைக்கு குவாரிகளாக தின்னக் கொடுத்த பிறகும் இன்னும் அது மிச்சமிருப்பது அது சுமந்த தமிழால். ஆம், அது தாங்கிய தமிழ் அதனைக் காத்து வருகிறது 2015 ஆண்டுகளாக. சமணம் தமிழுக்குச் செய்த தொண்டு ஒருபுறமிருக்க, அது மதுரைக்குச் செய்த தொண்டு மதுரையின் அனைத்துத் திசைகளிலும் உள்ள மலைகளில் குடைவரைகள், கற்படுக்கைகள், கல்வெட்டுக்களைப் பதித்து அவற்றையும், அவற்றோடு இயற்கையையும் காத்தது. இல்லாவிட்டால் இம்மலைகளெல்லாம் இந்நேரம் கபளீகரம் செய்யப்பட்டு, நிலவைப் போலவே மதுரையும் எண்ணற்ற குழிகளுடன் காட்சி தந்து கொண்டிருக்கும்.


மலையின் முகப்பில் பாதுகாக்க வேண்டிய இடம் என்ற வாசகங்களோடு, பாதுகாப்பின்றி நிற்கிறதொரு பலகை. அதனருகே சாவகாசமாய்ப் படுத்துக்கிடக்கின்றன 2009-ஆம் ஆண்டில் தொல்லியல் துறையால் வைக்கப்பட்ட மலையின் வரலாறு சொல்லும் இரு மார்பிள் கற்பலகைகள். அதன் மேற்பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் காணக் கிடைகின்றன குகைத்தளமும், கற்படுக்கைகளும், இரு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்.
 


“பாங்காட அரிதன் கொட்டுபிதோன்”, “உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்” என்ற அந்த இரண்டு தமிழ் பிராமி கல்வெட்டுக்களின் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு. வெட்டியதிலிருந்து எங்கும் தொலைந்து போகாத அந்தக் கல்வெட்டுக்களின் இருப்பிடத்தை 1996-ல் வெளிப்படுத்தியவர் ஐ.மகாதேவன். முதல் கல்வெட்டு இருப்பது குகைத்தளத்தின் நீர்வடிப்பகுதியின் மேல்பகுதியில். அதன் விளக்கம் “இத்தளத்தைக் குடைவித்துக் கொடுத்தது பாங்காடு அல்லது திருவாரூருக்கு அருகிலுள்ள பனங்காடி என்ற ஊரைச் சேர்ந்த அரிதன்” என்பதாகும். இரண்டாவது கல்வெட்டு அமைந்திருப்பது குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் கீழ்ப்பகுதியில். அதன் விளக்கம் “பரசு என்கிற உபாசகர் - உபாத்யாயன் – சமையல் ஆசிரியர் இந்த உறைவிடங்களை அமைத்துக் கொடுத்தார்” என்பதாகும்.

கல்வெட்டுக்களின் அருகில், தொட்டவுடன் சுருண்டு கொள்ளும் ரயில்பூச்சியினைப் போல, சுமை அதிகமானால் தலையில் சுருண்டு பிடிக்கும் சும்மாடைப் போல, கொசு அதிகமானால் கொளுத்தப்படும் கொசுவர்த்திச் சுருளைப் போல வடிவத்தில் ஒத்த ஓவியங்கள் நிறைய இருக்கின்றன. அது கற்கால ஓவியங்களா இல்லை சேட்டைக்காரர்கள் வரைந்த பிற்கால ஓவியங்களா எனத் தெரியவில்லை.

அன்று காணக்கிடைக்கவில்லை எனினும் குகைத்தளத்தின் இடது ஓரம் வாசம் செய்துகொண்டிருக்கின்றன சட்டைகளைக் கழட்டிப் போட்ட திகம்பரப் பாம்புகள். மலையைச் சுற்றிலும், செல்போன் கதிர்வீச்சோ, மாடம் வைத்துக் கட்டப்படாத வீடுகளோ ஏதோவொன்று தொலைத்துக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளும், பட்டாம்பூச்சிகளும் வட்டமிட்டு சுத்தித் திரிகின்றன.

தானே இயற்கையாய், மனிதர்களை விடுத்து ஆளில்லாத மலைகளில் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த, தமக்கென ஏதும் கொள்ளாது திசைகளையே ஆடையாய் அணிந்து வாழ்ந்து மறைந்த திகம்பரர்களின் வாழ்விடங்களே இன்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. பேராசைகளின் மொத்த மூட்டையாய் எல்லாவற்றையும் விழுங்கும் மனிதர்களின் வாழ்க்கை எதிரிலிருக்கும் குவாரிகளின் படுகுழிகளைப்போலே அதலபாதாளத்தில் வீழ்ந்தே கிடக்கின்றன என்ற உண்மை முகத்தில் அறைய பயணம் அங்கிருந்து திருவாதவூருக்கு திசை திரும்பியது.

திருவாதவூரின் பெருமை திருவாதவூரார்-மாணிக்க வாசகரால். எல்லோரும் உருகும் ஒருவாசகமாம் திருவாசகம் இயற்றிய சமயக்குறவர். இறைவன் பக்தர்களுக்காக அதிசயங்கள் புரிந்த கதை நிறைய உண்டு. இறைவனே தன் பக்தனுக்காக வந்து அடிவாங்கிய கதை இவருக்கு மட்டுமே உண்டு. சொக்கநாதர் இவருக்காக நரியைப் பரியாக்கினார், பிட்டுக்கு மண் சுமந்தார், பிரம்படியும் பட்டார் எனப் புராணங்கள் சொல்கின்றன. இன்னொரு சிறப்பும் இவ்வூருக்கு உண்டு. இவ்வூர் கி.மு.2-ஆம் நூற்றாண்டில் சங்ககாலப் புலவர் கபிலர் பிறந்து, வாழ்ந்து, மறைந்த ஊர்.

திருமறைநாதர்-வேதநாயகி அம்மாள். திருவாதவூரில் வீற்றிருக்கும் தெய்வங்கள். சலனமின்றி அமைதியாகவே இருக்கிறது இவர்களின் இருப்பிடமும், அங்குசென்றபின் நம் மனமும். கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோயிலுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டுக்களோடு, வியாபாரிகளும், தேவரடியார்களும் சிலைகள் வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டுக்களையும் சேர்த்து எழுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இவ்வூரில் “உலகளந்த சோழன் பேரேரி” அதாவது ராஜராஜச் சோழனின் பெயர் தாங்கிய ஏரி ஒன்றுள்ளது. இதன் மடையில், பீமன் இந்திரலோகத்திலிருந்து கொண்டுவந்ததாய்க் கருத்தப்படும் புருசாமிருகச் சிலையொன்று உள்ளது (பல் மருத்துவர் ராஜான்னா, யாரோ கடுங்கோவத்திலிருந்த ஒரு பொண்டாட்டி இந்த மிருகத்துக்கு பேர் வச்சிருப்பாளோ? என வேடிக்கையாய் சொல்வார்). அதோடு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சிப் பொறுப்பேற்றதைக் குறிக்கும் நினைவுத் தூணொன்றும் உள்ளது.


எல்லாம் சரி. சங்க முற்காலத்திலிருந்து வெள்ளையர் காலம் வரை வெவ்வேறு காலத்திய அடையாளம் தாங்கிய இவ்வூருக்கு ஏன் திருவாதவூரெனப் பெயராம்? சனீஸ்வரருக்கு வாதநோயைப் போக்கியதால் வாதவூர் – திருமறைநாதர் வீற்றிருப்பதால் திருவாதவூர். வாத நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். ஊமைகளையும் வாதத்தில் வல்லவர்களாக மாற்றும் நாதர் இவர் அதனால் இது திருவாதவூர் எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ? அருமையானதொரு பயணம். அதைச் சாத்தியப்படுத்தியது பசுமை நடை.

பசுமைநடை –


எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணனால் விதையிடப்பட்டு  இன்று விருட்சமென வளர்ந்து நிற்கும் ஒரு தன்னார்வ அமைப்பு. நாம் மறந்துவிட்ட, நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட, நம்மைச் சுற்றியுள்ள, நமக்கு தெரிந்த/தெரியாத இடங்களின் தெரியாத வரலாறுகளை தெரியப்படுத்தி அதை பொதுவில் வைக்கிறது பசுமைநடை. ஏனோதானோவென்றில்லை,தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியலறிஞர்கள், சூழலியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்/ஆசிரியர்கள், முனைவர்கள், ஓவியர்களின் துணைகொண்டு ஆழமாக, வீரியமாக.


தொல்லியலறிஞர்.முனைவர்.சாந்தலிங்கம் மேற்சொன்ன வரலாற்றுத் தகவல்களை விவரிக்கும் பாங்கு அலாதியானது. அவற்றை அவர் விவரிக்கும் போது உண்டாகும் பூரிப்பு அதன் மேல் அவருக்கு இருக்கும் ஈர்ப்பையும், ஈடுபாட்டையும் காட்டுகிறது. பசுமைநடையின் சிறப்பு இதில் எல்லோருமே தத்தமது சொந்த அடையாளம் விடுத்து தன்னார்வலர்களாக, பசுமைநடை உறுப்பினர்களாக மட்டுமே இருப்பது தான். இது எளியோர்கள் சேர்ந்து நடத்தும் வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாதமும் பெரும்பாலானோருக்கு வசதிப்பட்ட ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பயணப்படுகிறது பசுமைநடை. நீங்களும் ஒருமுறை சென்று அனுபவியுங்களேன்...

புகைப்படங்கள்: மருத்துவர்.ராஜான்னா மற்றும் செல்வம் ராமசாமி...

பசுமைநடையில் இணைந்துகொள்ள - 97897 30105, greenwalkmdu@gmail.com.

27 comments:

  1. பயணக்கட்டுரை அருமையோ அருமை! வாழ்த்துக்கள்! நிறைய எதிர்காலம் இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே...

      Delete
  2. harish kumar pandian1:15 pm, September 26, 2013

    அருமையான பயண குறிப்பு , தொடரட்டும் உங்கள் பயணம் ,பசுமையான

    நடையில் , வாழ்த்துக்கள். "" உதயா பாஸ்கி ""

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.ஹரிஷ் குமார் பாண்டியன் அவர்களே...

      Delete
  3. அருமையான அனுபவம் தோழர்.. நாம் முன்னேயே சென்றது ஒரு விதத்தில் நல்லதாய் போனது.. புகைப்படங்கள் எடுக்க கிடைத்த வாய்ப்புகள் ஞாயிறு காலை கிடைக்கவில்லையே. :)

    ReplyDelete
    Replies
    1. இனி வரும் நடைகளில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் ஒரு குழுவாய் பயணிப்போம்...

      Delete
  4. யப்பா.. அந்த வோர்ட் வெரிபிகேசன் எடுத்து விடுப்பா. கமென்ட் போடுறதுக்கு எரிச்சலா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. எடுத்தாச்சு... எடுத்தாச்சு...

      Delete
  5. முதலில் மீனாட்சி பட்டண நண்பர் உதயாவிற்க்கு வாழ்த்துக்கள்...

    இனிய வருணனைகளோடு அமைந்த ஒரு அழகிய வாசித்தல் தளம். சொல்ல வரும் செய்தியை சொக்க வைக்கும் உணர்வுகளோடு கூடிய சொல்லாடல்கள். எழுதிய செய்தியை ரசிப்பதா ?.. எழுத்தை ரசிப்பதா ?... என்றுள்ளது. நிறைய எழுதுங்கள்.... படிப்பதற்காகவும் ரசிப்பதற்க்காகவும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எழுதுபவனுக்கு ஊக்கம் அதை வாசிக்கும் வாசகர்கள்... நீங்கள் அதற்கும் மேல் ரசிக்கும் ரசிகாராய் இருக்கிறீர்கள்... உங்களுக்கு செய்யும் கைம்மாறு தொடர்ந்து எழுதுவது மட்டுமே... எழுதுகிறேன் இனி தொடர்ந்து...

      Delete
  6. nanraga irukkirathu... valthukkal.....!!

    ReplyDelete
  7. samanam thamilukku seitha thondai ungalai pola silar mattume innum marakkamal ninaivu seikreerkal, thotaratum ungal sevai valthukkal valga valamudan

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இணைந்து கொள்ளலாம்...

      Delete
  8. Epper patta Nandri sonnaalum Ungal Kuzhuvukku ......... Eedaagaadhu. Vaarthayaal Solli vittu selvadhu Panbaagaadhu......Aduttha Pasumai nadai I'll PARTICIPATE & ARRANGE NOON MEAL for all participants. Needoozhi nalamodum Valamodum Neer Vaazha Mukkaalmum Vunarndhavanai Vendugiren

    ReplyDelete
  9. Vaarthaigalaal Vivarikka Mudiyaadha Miga Arumayaana Thondinai Seyyum Ungal Kuzhuvinarai Siram Thaazhndhu Vanangugiren. Pasumai nadayil payanapada Aarvam irundhum Ungal Magavari theriyaamal Thavitthen, Adutha nadaikku Avasiyam kalandhu kolvadhodu, I'll arrange NOON MEAL FOR all participants. --- Sridharan,Pondicherry 9787300353

    ReplyDelete
  10. Anbulla Ayyaa
    Vanakkam
    Miga sirappaana katturai
    mikka nandri
    idhai anuppiya Thiru.Santhanam Avarkadkum Mikka nandri

    ReplyDelete
  11. நன்றி திரு.கனக அஜிதா தாஸ் அவர்களே...

    ReplyDelete
  12. makkalukkaga neengal,miga araumai

    ReplyDelete
  13. Replies
    1. நன்றி திரு.பத்மராஜ் தர்மசாம்ராஜ்யன் அவர்களே...

      Delete
  14. பசுமைநடை குறித்த முந்தைய அனுபவங்களையும் எழுதுங்கள். திருவாதவூர் குறித்த பதிவு அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, சித்திரைவீதியாரே... முந்தைய அனுபவங்களை எழுத இயலுமா என்பது தெரியவில்லை... அடுத்தடுத்த நடையின் அனுபவங்களை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்கிறேன்...

      Delete
  15. அருமையான நடை.
    வாழ்த்துக்கள்..
    எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தெளிவான தீர்க்கமான சாந்தமான பேச்சை கூடங்குளம் பற்றிய நிகழ்வில் கேட்டுள்ளேன்.. உங்கள் செயல் வெற்றி பெற வேண்டும்

    ReplyDelete
  16. அருமையான நடை.
    வாழ்த்துக்கள்..
    எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தெளிவான தீர்க்கமான சாந்தமான பேச்சை கூடங்குளம் பற்றிய நிகழ்வில் கேட்டுள்ளேன்.. உங்கள் செயல் வெற்றி பெற வேண்டும்

    ReplyDelete