Tuesday 15 October 2013

மதுரை வீதிகள்...

ஆயிரத்தொரு அராபிய இரவு கதைகளில் வரும் பாக்தாத் நகரை விடவும் அதிகக் கதைகள் கொண்டது மதுரை. குறிப்பாக மதுரையின் பகல் நேரக் கதைகள் சொல்லித் தீராதவை. கி.நாகராஜனும் சிங்காரமும் காட்டிய மதுரைக்காட்சிகள் வெறும் கீற்றுகளே. எல்லா வீதிகளும் இன்றும் நுரைதபடியே பொங்கிக் கொண்டிருக்கின்றன கதைகள். மதுரையில் கதை இல்லாத வீதிகள் இல்லை. நகரின் ஒவ்வொரு கல்லிற்குப் பின்னயேயும் ஒரு கதையிருக்கிறது.

மதுரை மாநகரம் குடித்துத் தீர்க்க முடியாத ஒரு சூதாட்ட பானகம். பகலிலும் இரவிலும் குரல் அடங்காத தெருக்கள். நாயின் அடங்காத நாக்கின் துடிப்பைப் போல எப்போதும் மெல்லிய பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கும் மனித நடமாட்டம். புரிந்து கொள்ளமுடியாத விதியின் கைகளில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டது.

மிகை நாடும் விருப்பம் அந்த நகரின் இயல்பிலே கலந்திருக்கிறது. ஒரு வேலை அழிந்த நகரம் என்பதால் தன்னை தனித்து அடையாளம் காட்டிக் கொள்வதற்காக அப்படித் துள்ளிக்கொண்டிருக்கிறதோ என்னவோ.

எத்தனை பாதைகள், எத்தனை வளைவுகள், மதுரையின் வீதியமைப்புகளுக்குள் காலை நேரங்களில் நடந்து பாருங்கள். அது ஸ்பானிய நகரங்களை நினைவுபடுத்தக் கூடியது.கோவிலின் உயர்ந்த கோபுரங்களுக்கு சமமான விளம்பரப்பலகைகள், கட்டடங்கள் இன்று உருவாகி விட்டிருக்கின்றன. ஆனால் மீனாட்சி கோவில் பூமிக்கும் ஆகாசதிர்க்கும் இடையில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மலரைப் போலவே தோன்றுகிறது.

கல்மண்டபங்களின் தூண்களின் விரல் தட்டி கேட்கும் சங்கீதம் நூற்றாண்டுகளின் முன் உள்ள மனிதர்களின் இதயத்துடிப்பைதானே வெளிப்படுத்துகிறது. மதுரையில் சுற்றியளைவதர்க்கு சற்றே பித்தேறிய மனநிலை தேவைப்படுகிறது அல்லது சுற்றியலைகிறவன் அப்படியொரு மனநிலைக்கு தானே உள்ளாகிறான்.

ஓடும் ஆற்றில் நீந்துவது போன்றது தான் மதுரையின் வாழ்க்கை. அதில் நம் முயற்சி அதற்குள் பிரவேசிக்க வேண்டியது மட்டுமே. மற்றபடி ஆற்றின் வேகமே நம்மை அடித்துக்கொண்டு போய்விடும்.

நம்பமுடியாமல் இருந்தால் ஒருமுறை டவுன்ஹால் ரோடின் உள்ளே நடந்து பாருங்கள். உங்கள் வேலை ரீகல் தியேட்டரில் இருந்து திரும்பி ஒரு எட்டு உள்ளே நுழைவது மட்டும் தான். ஆற்றின் வேகம் போல ஜனத்திரள் தானே உங்களை அழைத்துக்கொண்டு போய் மீனாட்சி கோபுரத்தின் அருகில் சேர்த்துவிடும். அங்கும் நீங்கள் விழிப்புணர்வு கொள்ளாவிட்டால் வெயிலேறிய மீனாட்சி அம்மன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் சூடு கொதிக்கும் கல்லில் நிதானமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

- எஸ்.ராமகிருஷ்ணன்...

2 comments:

  1. மதுரை வீதிகளில் அலைந்து அலைந்து பித்தேறிதான் சித்திரவீதிக்காரனானேன். மதுரை வீதிகளில் அலைவது சுகம். மதுரையைச் சுற்றும் கழுதையாகவே இருக்கிறேன்.

    நகர்மன்றச்சாலையில் இறங்கி நடந்து பேசிக்கொண்டே சித்திரைவீதிகளைச் சுற்றி வருவது வரம். மண்ணானாலும் மதுரையிலே மண்ணாவேன்.

    - அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்.

    ReplyDelete
    Replies
    1. மதுரை வீதிககளைப் பற்றி நீங்கள் விளக்கங்களுடன் ஒரு விரிவான பதிவு எழுதலாமே?

      Delete