அப்பா நாளைக்கு போகி.
அதுக்கு?
ஊர்ல இருக்கும் போது
நாம பழசெல்லாம் எடுத்து ஒதுங்க வச்சு, வேண்டாதத எரிச்சு, வெள்ளயடிச்சு, படியில
கோலம் போட்டு, மறுநா புதுஅரிசி போட்டு பொங்கவச்சு கொண்டாடுவமே? இப்ப ஏம்பா
கொண்டாடல?
ஆமாமா அது ஒண்ணு தான்
கொறச்சலா இருக்கு? உள்ளதுக்கே இங்க வழியக் காணோம், இதுல போகி, பொங்கல்ன்னுட்டு.
பேசாம இருக்கியா? சும்மா தொணதொணன்னுட்டு.
வெள்ளயடிக்க
வக்கில்லாத வீட்டு முத்தத்த வெறிச்சுப் பாக்கயில ஊர்ல இதேமாதிரியொரு போகிக்கு
முந்தய நாளோட ஏற்பாடுக நெனப்பு வந்துச்சு அவனுக்கு. காத்து வேகமா அடிக்கயில பன
ஓலயில செஞ்ச முள்ளுக் காத்தாடியா சுத்தி சுத்தி வேலை பாத்தாக அய்யாவும்
அப்பத்தாவும். அப்பாவும் அம்மாவுங்கூட ஏதேதோ வேலயா இருக்க வயக்காட்டு வரப்போரம்
பேத்து எடுத்துட்டு வந்த களிமண்ண வச்சு மாட்டு வண்டியும், ஆட்டு உரலும் செஞ்சு
வெளாண்டது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
ஊர்ல வீட்டு
முத்தத்துல ஒக்கார வச்சு அய்யா சொன்ன, பெண்ணே பூச்செண்டு தா, பெண்ணே பூச்செண்டு
தான்னு ராசாமகன் கேக்குற அண்ட்ரெண்ட பட்சி கத, அப்புறம்,
”மாடுகட்டி போரடிச்சா மாளாதுன்னு
ஆனகட்டி போரடிச்ச மருத நம்ம ஊரு,
கட்டுக்கு களங்காணும்
கதிர் உலக்கு நெல் காணும்
புட்டுக்கு மண் சுமந்து
பிரம்படி தான் பட்டவரு
சொக்கநாதர் அவர் பேரு
மருதயாளும் மன்னவரு” ன்னு ஆரம்பிச்சு
குட்டிமேகம் ஒன்னுக்கு பேஞ்சு வைகையில வெள்ளம் வந்த கதன்னு, கத கதயா நெனப்பு
வந்துச்சு அவனுக்கு.
தஞ்சோட்டுப்
பயலுகளோட சேந்து பாட்டி பாட்டி ஒண்ணுக்கு, சீனி பாப்பா சீனி, ஒரு கொடம்
தண்ணியெடுத்து ஒரு பூ பூத்தாச்சுன்னு வெளாண்ட ஒவ்வொரு வெளாட்டும் நெனப்பு
வந்துச்சு அவனுக்கு.
சிகரெட்
அட்டயில கூண்டு செஞ்சு பொன்வண்டு புடிச்சதும், கண்ணாடி சீசாவுல மின்மினிப்பூச்சி புடிச்சதும்,
மூக்குத்தி செடியில அமுக்கி பாப்பாத்தி புடிச்சதும், முள்ளுச்செடியில நிக்குற
தட்டான் புடிச்சதும், கவட்ட வச்சு குருவி அடிச்சதும், கொக்கி போட்டு ஓணான்
புடிச்சதும், அதுக்கு மூக்குப் பொடி போட்டு ஆட வச்சதும், சகதிக்குள்ள பொரண்டு மீன்
புடிச்சதும், செவக்காட்டுல போய் பனங்கா பறிச்சதும், கம்மா ஓரத்துல எலந்தபழம்
பறிச்சதும், அரசமர எலயில பீபீ செஞ்சு ஊதுனதும், ஆலமர விழுதுல ஊஞ்சல் ஆடி நீராவில
விழுந்து குளிச்சதும், செங்க - மண்ணு வச்சு வீடு, கோயில் கட்டி கூட்டாஞ்சோறு
சமச்சதும், சுடுகா ஒரசி தொடயில சூடு வச்சதும், வேப்பங்கொட்ட ஒடச்சி வெரலு
மொட்டியில வச்சு அடிக்கயில ரத்தம் வந்ததும், அப்பத்தாவோட உக்காந்து தாயம்
வெளாண்ட்தும், அது குடுக்குற பருத்தி வாங்கி கடயில போட்டு சேவு தின்னதும் நெனப்பு
வந்துச்சு அவனுக்கு.
வயக்காட்டுல
கருதடிச்சு கட்டு சுமந்து போகயில சிந்தி விழுகிற மிச்சம் பொறுக்கி படி நெல்லு
சேத்ததும், கரும்பு அறுத்து ஆலைக்குப் போற வழியில இருக்க கரண்டு கம்பிய தொரட்டி
வச்சு தூக்கும்போது நின்னு போற வண்டியில கரும்பு உருவிட்டு ஓடுனதும், வாழமரம்
அறுத்து வண்டி கட்டி போகயில ஓடிப்போயி கால்ல மிதிச்சு கிழிச்சு வெளாண்டதும், தென்ன
ஓல பறிச்சு வந்து பாம்பு செஞ்சு வெளாண்டதும், ஆடிப் பட்டத்துல அய்யா வெதைக்க,
அந்நேரம் காத்தாடி செஞ்சு பறக்க விட்டதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அப்புறம்
கொஞ்ச நாச் செண்டு மழையில்லாம வறண்ட நெலத்த பாக்க புடிக்காம ஒழவுமாட்ட வித்து
வயக்காட்டுக்கு மோட்டர் தண்ணி பாச்சுன அய்யா போட்ட நெல்லு சாவியானத பாக்க
பொறுக்காம மாரடச்சு செத்துப் போனதும், அவர பொதச்ச புல்லுமேட்டுல ஊர்நாய் ஒருகாலத்
தூக்கி ஒண்ணுக்கடிச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அய்யா
செத்தபொறவு, மேக்கதிர் வீட்டுக்கு – நடுக்கதிர் மாட்டுக்கு – அடிக்கதிர் காட்டுக்குன்னு
சொல்லிக்குடுத்த அப்பத்தா சீமையிலயிருந்து வந்த மிசினு அறுத்துப் போட்ட வைக்கல
மாடு திங்காம திரிஞ்சதயும், அடுத்தடுத்த வருசம் வீட்டுக்கும் வராம கூடிக்கூடிப்
பிரிஞ்சு வேகமெடுத்துப் பறக்குற ஊர்க்குருவி திங்கவும் ஒண்ணுமில்லாமப் போனதயும்
நெனச்சு நெனச்சு அழுது ஒடஞ்சது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
கடசியில
சேத்துப்புண்ணா வெடிச்சுக் கெடந்த செவக்காட்டுல வெயிலு பொறுக்காம தள்ளாடி விழுந்த
அப்பத்தா செதுப்போனதா சேதி வந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அய்யாவுக்குப் பொறவு அப்பத்தாவும்,
அதோட சேத்து ஊர்ல அவக இருந்த வீடும், நெலமும், வெவசாயமும், வாழ்ந்த வாழ்க்கயும்
செத்துப் போனதும் ஒவ்வொரு பொங்கலுக்கும் எப்பவும் நெனப்புலயே இருக்கு அவனுக்கு...
அருமை, இதை எழுதும்போது உங்களுக்கு என்ன நெனப்பு வந்துச்சு?
ReplyDeleteஎனக்கு வந்த நெனப்பத் தான் எழுதியிருக்கிறேன் தோழரே...
ReplyDelete