Monday 9 October 2017

மதுரை...
--------------
தொண்ணூறாம் வருடம் ஒவ்வொரு வெள்ளி மாலையும் ஆபீஸ் முடிந்து ஆறுமணிக்கு தென்காசியிலிருந்து  ஒரு நேசமணியையோ அல்லது திருவள்ளுவரையோ பிடித்து ராஜபாளையம் வந்துவிடுவேன். நேசமணி எப்பொழுதுமே ஒரு அசுரவண்டி.நிஜமாகவே அசுரவேகம்.அங்கிருந்து ஜெயவிலாஸ் என்று மற்றொரு வண்டியில் ஏறி மதுரையில் இறங்கி கொள்வேன். அப்படி மாறி வந்தால் தான் நள்ளிரவு ஒரு மணிக்கு திருச்சி போய் வீட்டுக்கு  சேரமுடியும். பெரியார் பஸ் நிலையம் அருகே அசோக் பவனில் ஒரு மசால் தோசையோ ஒரு ரவா தோசையோ தான் என் இரவு உணவு. அன்றிலிருந்தே மதுரைக்கும் எனக்கும் ஒரு பந்தம் உண்டு. சூடான இட்லி  காரச்சட்னியுடன் பகலா இரவா என்று வித்தியாசமே தெரியாமல் எந்நேரமும் விழித்துக்கொண்டிருக்கும்  ஊர் மதுரை. மதுரையை நகரம் என்று நான் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. பல கிராமங்களின் ஒருங்கிணைந்த கூடாரமே மதுரை என்பேன். அதனால் தானோ என்னவோ பல அடிப்படை நற் பண்புகளும், கலாச்சாரமும் அங்குள்ளோரின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்ததாக எனக்கு தோன்றும். ஸ்வரண் சிங் வருவதற்கு முன்னாள் இருந்த திருச்சியை விட மதுரையின் வீதிகள் அகலமானது. அந்த காலகட்டங்களில் காலேஜ் ஹவுஸை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கல்யாணமண்டபம் போன்ற பெரிய ஹாலில் வாழை இலை போட்டு வரிசையாக சாப்பாடு போடுவது அவர்கள் ஸ்பெஷல். மரமிருந்தால் அரசரடி, கற்சிலையை வைத்து யானைக்கல், சிம்மக்கல் என்று இடத்துக்கே நேர்த்தியான தமிழ்ப்பெயர் சூட்டிவிடுவார்கள். சங்கத்தமிழ் வளர்த்த ஊர் என்பதாலோ என்னவோ பெயர்களே ஒரு அழகு.. தபால் தந்தி நகர் என்ற பலகையை தாங்கி ஒரு பேருந்து போய்க்கொண்டிருக்கும். தமிழகத்தில் எந்த ஊரிலும் இதை பி அண்ட் டி காலனி என்று தான் அழைத்திருப்பார்கள். அப்போதிலிருந்தே வைகை ஆற்றில் தண்ணீரே பார்த்ததில்லை. எப்படியும் தண்ணியா வரப்போகுது என்று நம்பிக்கையில் ஆற்றில் நடுவில் விக்கிரகங்களை வைத்து சிறு சிறு கோவிலே வந்துவிட்டது.  திருமங்கலம் தாண்டி என் பஸ் வரும்போது தி.குன்னத்தூர்,தே.கல்லுப்பட்டி என்று இந்த பக்கத்துல ஊருக்கெல்லாம் இனிஷியல் வைப்பாங்க. திருப்பரங்குன்றம் ரோட்டில மேம்பாலம் ஏறி மீனாட்சி மில் கட்டிடத்தை பார்த்தவுடனே தான் பெரியார் பஸ் ஸ்டான்ட் வரப்போகுது இறங்கணும்னு தயாராவேன். அங்கிட்டு இறங்கி எதிர்த்த பஸ்ஸ்டான்ட்ல போய் திருச்சி பஸ்ஸுக்கு மாறணும்.. கே ஏ எஸ் சேகர்னு ஒரு லாட்டரி கடை ரொம்ப பேமசு..மைக்கை வச்சுக்கிட்டு ராத்திரி நேரத்துல கூட அறிவிச்சுக்கிட்டே  இருப்பாங்க.

ஆபீஸ் விஷயமா தொடர்ந்து பத்து நாள் கூட தங்கியிருக்கேன். சுப்ரீம் ஹோட்டல்ல பெரிய அப்பளம் போடுவாங்க. டவுன்ஹால் ரோடு களை கட்டும். கணேஷ் மெஸ்னு ஒண்ணு இருந்துச்சு, காலைல வெண்பொங்கலும்  சட்னியும் சிறப்பு. தெருமுனையில்  உள்ள பிரேமாவிலாஸ்ல சுடசுட திருநெல்வேலி அல்வா கிடைக்கும். இப்ப தான் முருகன் இட்லி எல்லா ஊர்லயும் வந்துருச்சே. ஜிகிர்தண்டா புகழை கேட்கவே வேண்டாம். மதுரையை சேர்ந்த சில இஸ்லாமிய குடும்பங்கள் பாரம்பரியமாக ஜிகிர்தண்டாவை அசல் தரமுடன் செய்கிறார்கள் என்று நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய பேவரைட் ஃப்ரூட் மிக்ஸர்  தான்.  இது மதுரையின் அடையாளங்களில் ஒன்று. இது கிடைக்காத கடைகளே கிடையாது. எல்லா பழங்களையும் போட்டு மிக்சில அடிச்சு ரெடியா ஒரு பெரிய குண்டான்ல பண்ணி வச்சிருப்பாங்க. ஒரு ரூபாய்லேந்து இதை சாப்பிட்டுருக்கேன்.  பார்லே என்பது ஒரு பிஸ்கட் வகை. தெற்கு மாவட்டங்களில் பிஸ்கட், கேக் விற்கும் கடைகளை பார்லி என்று சொல்லும் வழக்கத்தில் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தென்காசியில் கூட ராஜம் பார்லி என்பார்கள். மதுரையில் ராஜா பார்லி மிக பிரசித்தி. அதே போலத்தான் ஜெயராம் பேக்கரியை அறியாதவர்கள் இருக்கமுடியாது. இங்கு கிடைக்கும் பிஸ்கட் வகைகளை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. ஓமம், புதினா, மசாலா, செரி என்று  நினைக்கவே முடியாத காம்போவில் எல்லாம் இங்கு பிஸ்கட்கள் உண்டு. இதற்கு பல கிளைகள் இன்று வந்துவிட்டாலும் நேதாஜி ரோடு போகின்ற வழியில் இருக்கும் கடை தான் இதன் ஆதி கடை. சூப்பரா இருக்கும். எனக்கும் இந்த கோபு அய்யங்கார் கடைக்கும் ஓத்தே வருவதில்லை. அந்த வெள்ளையப்பமும் காரச்சட்னியையும் தேடி மூன்று முறை முயற்சித்தும் நான் போவதற்குள் கடையை அடைத்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் நான் விரும்பி செல்லும் இடம் நேதாஜி ரோடில் உள்ள மாடர்ன் ரெஸ்டாரண்ட் தான்.

பெரும்பாலான மதுரைக்காரர்கள் வீட்டில் ஹாஜி மூஸாவின் கட்டைப்பைகளையும்,தினமலரையும் பார்ப்பதை நீங்கள் தவிர்க்க இயலாது..அது ராணி சுங்கடியோ, ஹாஜி மூஸாவோ ஜவுளிகடல்யா ஜவுளிக்கடல். இப்போது இருபது முப்பது வருடங்களாகத்தான் இந்த பைபாஸ் ரோடு பிரபலமாக இருக்கிறது. அதற்கு முன்பு நான் வரும் இடங்களெல்லாம் ரயில்வே தண்டவாளங்களை கடந்த அழகப்பன் நகர், டி வி எஸ் நகர், டி வி எஸ் பூங்கா என்றே பஸ் போகும். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்றால் எஸ் எஸ் காலனி. மதுரையை தாண்டிய என் சில உறவினர்கள் இருந்த சோழவந்தான், தென்கரை(டி ஆர் மகாலிங்கத்தின் ஊர்)  போன்ற கிராமங்களுக்கும் சென்றிருக்கிறேன். நல்ல செழுமையான கிராமங்கள். கோயில், ஆறு, தோப்பு, பசுமை சூழ்ந்த பழைய கால அக்ரஹார வீடுகள் பார்ப்பதற்கே அத்தனை அழகு. சினிமாவும் மதுரையையும் பிரித்து பார்க்கத்தான் முடியுமா..பல வருடங்களாகவே பர்மா பஜார் சர்ச்சுக்கு முன்னால் வித்தியாசமான கட்அவுட்களை வைப்பதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் ரஜினி, இப்போது தல. தங்கம் என்றொரு தியேட்டர்..ஆசியாவிலேயே அதிக இருக்கைகள் கொண்டது என்று சொல்லி சொல்லி எங்களை போன்ற திருச்சிக்காரர்களை வெறுப்பேத்துவார்கள். ஏதோ ஒரு எம் ஜி ஆர் படத்தில் அவர் இறப்பதாக காட்சி வந்ததற்காக தியேட்டர் ஸ்க்ரீனையே கிழித்து விட்டதாக சொல்வதுண்டு. மதுரை மணி அய்யர்,
பாரத் ரத்னா எம் எஸ், மதுரை சோமு, டி என் சேஷகோபாலன் என்று கர்நாடகசங்கீத உலக ஜாம்பவான்களையும், இன்றைய பிக்பாஸ், இசைஞானி, வடுகபட்டி கவிப்பேரரசு, பாரதிராஜா என்று இன்னும்  எத்தனையோ  திரையுலக பிரபலங்களையும் கொடுத்தாலும் எடுவட்டபய அலப்பறை தாங்கமுடியலப்பு என்பது முதல்  ஆட்டையப்போடுவது வரை வைகைப்புயல் வடிவேல் அண்ணன் தாங்க எங்க திருவள்ளுவரு..  

இப்பொழுதும் கூட  நாலு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்கு தனியாக நடந்து போய் அதன் அழகை அனுபவிப்பேன். எப்பேர்ப்பட்ட கோவில்.. பொற்றாமரைக்குளம், விபூதி பிள்ளையார், பிறகு வெள்ளெருக்கு பிள்ளையார், சொக்கநாதரும், மீனாட்சியும்!!! "மீனலோசனி பாஷமோசினி, மானினி, கதம்பவனவாஸினி", தீக்ஷிதரின் மாஸ்டர் பீஸ் "மீனாக்ஷி மேமுதம் தேஹி" . அதுமட்டுமா கூடலழகரும், திருப்பரங்குன்றமும், பழமுதிர்சோலையும், நரசிம்மரும், மாரியம்மன் தெப்பக்குளம் என்று எதை விடமுடியும்.

அண்ணே அழகர் கோயிலுக்கு எந்த பஸ்ணே போகும்? நான் கேட்டது ஒருத்தர..நாற்பத்தி நாலாம் நம்பர் சார், அங்கிட்டு போயிருங்க, எங்கோ போயிக்கொண்டிருந்தவர் வந்து சொல்லிவிட்டு போனார். பஸ்ஸில்  பயணம் செய்தபோது இருபக்கமும் நல்ல காற்று. ஆண்களில் பெரும்பாலோர் வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை உடுத்தியிருந்தனர். பஸ்ஸில் வந்த பெண்கள் அனைவருமே எளிமையான, கண்ணை உறுத்தாத படாடோபம் இல்லாத ஆடையை அணிந்திருந்தனர். எல்லோர் தலையிலும் மணம் கமழும் மதுரை மல்லிகைப்பூ, பெரியவர்கள் நெற்றியில் குங்குமம், யுவதிகளின் நெற்றியில் சிறிய விபூதி.. பலரின் கைகளிலும் சாதாரண மாடல் நோக்கியா செல்போன். ஸ்மார்ட் போன்கள் அதிகம் தென்படவில்லை. ஒரு பஸ் நிறுத்தத்தில் அவசரமாக பஸ் கிளம்ப, ஏ நிப்பாட்டு, நிப்பாட்டு, பொம்பளையாள் ஏறுறாங்கல்ல, இவ்வளவு அவசரமா எங்கிட்டு போற ?

அவிய்ங்க ஏறிட்டாய்ங்கன்னு நினைச்சேன்!!!.

நல்லா நினைச்சே.. இப்படி தட்டி கேட்டு குட்ட அவர்கள்  தயங்குவதில்லை .

இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு என்றால்
டி வி எஸ் குழுமத்தை தான் இன்றும் நம்பியிருக்கிறார்கள். இப்பொழுது ஃபென்னர் போன்ற கம்பெனிகளும், சில டெக்ஸ்டைல் பார்க்குகளும் ஆங்காங்கே தென்படுகின்றன . மற்றவர்களில் சிலர் அரசாங்க வேலையோ அல்லது வியாபாரமோ செய்கிறார்கள். விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று அனைத்து தென் மாவட்டங்களும்  கம்பிகள் முதல் சிமெண்டு வரையில் எல்லாவற்றிற்கும் மதுரையை நம்பித்தான் பிழைப்பு நடக்கிறது.
 
சில  வருடங்களுக்கு முன்பு உடல் உபாதையினால் நான்  மிகவும்  சிரமப்பட, ஷெனாய் நகரில் உள்ள ஒரு இயற்கை மருத்துவர் ஆஸ்பத்திரியில் சில பல யோகாசனங்களை காலையும் மாலையும் செய்ய வருவேன். சில நாட்கள் சத்சங் நடத்துவார். கறிகாய் வியாபாரம் செய்பவர், டீக்கடை காரர், டெய்லர் என்று பொருளாதார ரீதியாக  மிகவும் சாதாரண நிலையில் இருப்பவர்கள் அங்கு வருவார்கள். யோகா செய்பவர்களில் சிலர் இஸ்லாமியர்களும் கூட உண்டு. அவர்களோடு நாட்டு நிலவரம், பணம், தொழில், சென்னை, ஆன்மிகம் என்று எல்லாவற்றைப்பற்றியும் பேசிக்கொண்டிருப்பேன். வெள்ளந்தியான மனிதர்கள். அவர்களுடன் பழகியதில் பலவற்றை நான் கற்றுக்கொள்ள முடிந்தது. சென்னை போன்ற நகரத்தில் வாழும் வாழ்க்கையில் அதிகம் பாசாங்கு இருப்பது போலவும் என் ஒரு முகம் மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதின் தாக்கம் என்றும்  தோன்றியது. என் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெற அந்த மனிதர்களின் இயல்பான வாழ்க்கைமுறை , பேச்சு மற்றும் எளிய அன்பு என்றே இன்றளவும் நினைக்கின்றேன்.    
 
பணியிலிருந்து ஒய்வு பெறும் நேரத்தில் மறுபடியும்  கிராமங்களுக்கு போவது என்பது இன்றைய சூழலில் நடக்காத காரியம், மதுரையை போன்ற பாசாங்கற்ற முகங்களை கொண்ட மண்வாசனை மிகுந்த மதுரை  ஒரு  சிறந்த ஏற்பாடாக இருக்கக்கூடும்.வெயில் கொஞ்சம் அதிகம் தான்,இருப்பினும் மனிதர்களின் மனம் குளிர்ச்சியானது. காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்...

----
எழுதியவர் பெயர் தெரியவில்லை.
வாட்சப்  உபயம்...

No comments:

Post a Comment