Wednesday 15 October 2014

வரலாறு கொண்டாடும் மதுரையில் வரலாற்றைக் கொண்டாடும் திருவிழா...


திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். விழாக்கள் மனித வாழ்வினின்று பிரிக்க இயலாது கலந்திருக்கிறது. வெற்றிகளை கொண்டாட பிறந்தன விழாக்கள். சமயங்களை கொண்டாடி வளர்ந்தன விழாக்கள். மனங்களை நெறிப்படுத்தி மகிழ்ந்தன விழாக்கள். மரணத்தினைக் கூட பறையிசைத்து ஆடிப்பாடிக் கொண்டாடியே மகிழ்ந்திருக்கிறது தமிழ்ச்சமூகம். விழாக்களின் வடிவமோ, பாடுபொருளோ மாறிக்கொண்டே வந்திருக்கலாம். ஆனால் அவற்றின் வெளிப்பாடு ஒன்றே, மகிழ்ச்சி. காலச்சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் சுருங்கிவிட்டாலும் சில விழாக்கள் நமது அடியாழம் தொட்டு நம்மை மேலிழுத்து வருகின்றன. அப்படியான விழாக்கள் கொண்டாடப்படும் வரை மனிதம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
மதுரை என்றாலே விழாக்களின் நகரம் தான். ஆண்டின் எந்தவொரு மாதமும் ஏதேனும் ஒரு சாலையில் ஒரு விழா ஊர்வலம் இருக்கும். ஏதேனும் ஒரு மூலையில் கிடாய்வெட்டு நடக்கும். தாரை தப்பட்டமோ, மேளதாளமோ கேட்டுக்கொண்டேயிருக்கும். மதுரையின் மரபான விழாக்கள் ஒருபுறமிருக்க, வரலாற்றைக் கொண்டாட முளைத்தது பசுமைநடை என்னும் புதியதொரு கூட்டம். ஆம் வரலாறு கொண்டாடும் மதுரையில் வரலாற்றைக் கொண்டாடும் கூட்டமிது. பசுமைநடையின் திருவிழாக்கள் மரத்தைக் கொண்டாடும், கல்லைக் கொண்டாடும், நம் மண்ணைக் கொண்டாடும். அதன் விழாக்களின் வேர் நம் மண்ணில், கல்லில், மரத்தில், இயற்கையில் புதைந்து கிடக்கும் நமது வரலாற்றில் பொதிந்திருக்கிறது.ஒவ்வொரு பசுமைநடையுமே ஒரு கொண்டாட்டமான விழா தான் எனினும் முத்தாய்ப்பாய் இரு விழாக்களை கொண்டாடி மகிந்தது பசுமைநடை. பசுமைநடையின் 25-வது நிகழ்வை கடந்த ஆண்டு (25 August 2014) விருட்சத் திருவிழாவாகவும், 40-வது நிகழ்வை இந்த ஆண்டு (28 September 2014) பாறைத் திருவிழாவாகவும் கொண்டாடியது பசுமைநடை. பசுமைநடையின் இந்த இரு திருவிழாக்கள் கொடுத்த மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. வாழ்வின் மறக்கவியலாத கொண்டாட்டங்களை, உணர்வுகளை ஏற்படுத்தியதாக இருக்கலாம் இதில் பங்கேற்றவர்களுக்கு. அதனினும் ஆயிரமாயிரம் மடங்கு பெரிது இந்த விழாக்களின் ஏற்பாடுகளை, பின்னரங்கு வேலைகளை முன்னின்று பார்த்தவர்களின் உணர்வு.
என்னென்ன நடந்தது விழாவில் என எடுத்துரைக்க பலர் இருக்க, நான் எதிர்பார்த்தது இருந்ததா என்பதையே விளக்குகிறது இந்த கட்டுரை.

பாறைத் திருவிழா உணர்வுகள்:


கருப்பட்டி கலந்த அரிசி மாவில் பிழிந்து சுடப்பட்ட சீரணி மிட்டாயாய் விருட்சத் திருவிழாவின் தித்திப்பு மனதில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்க, அதன் மேல் ஊற்றப்பட்ட வெல்லப்பாகாக மேலும் தித்திப்பு கூட்டியது பாறைத் திருவிழா. விருட்சத் திருவிழாவின் கொண்டாட்டங்களை, மகிழ்ச்சியை, அது தந்த தித்திப்பான உணர்வை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டது பாறைத் திருவிழாவின் நிகழ்சிகள். பெயர்சூட்டுதலில் தொடங்கி, இடம், சிறப்பு விருந்தினர்கள், உணவு, குழந்தைகள் விழா,  விழா அனுமதி, ஏற்பாடுகள், பின்னரங்கு வேலைகள், இத்யாதி இத்யாதியென திட்டமிடுதலில் தொடங்கி விழா நிகழ்வு வரை எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கமைந்த நேர்த்தியை வெளிப்படுத்தி ஒரு கலாச்சார விழாவினை நடத்தும் முறையைக் கற்றுத்தந்தது பாறைத் திருவிழா.விருட்சத் திருவிழாவின் முந்தைய நாளிரவு ஊரின் எல்லையில் யாருமற்ற பெருவெளியில் நிசப்தமாய் குடிகொண்டிருக்கும் சமணமலை அடிவாரத்தில், கோயில்கொண்டு கருப்பு காவலிருக்க, மதுரையின் மிகப்பெரியதொரு எழுநூறாண்டு பழமையான ஆலமரத்தினடியில் கிளைகளின், இலைகளின், விழுதுகளின் வழியே வெள்ளி முளைத்து விரிந்துகிடக்கும் வானம் பார்த்துக்கொண்டே சிதிரவீதிக்காரனோடும், சஞ்சிகை வடிக்கும் முருகராஜுடனும் சமணமலை சுமந்த கதைகளையும், கதைமாந்தர்களையும் அருகாமை அமர்த்தி சடச்சிபொட்டலில் கதைபேசி மகிழ்ந்து படுத்துக்கிடந்தது மனதில் மேலெழும்பி உந்தித்தள்ள மீண்டுமொருமுறை கிடைக்கப்போகும் அந்த அரியதொரு இரவை எதிர்நோக்கி வேகமெடுத்தது பாறைத் திருவிழாவின் ஏற்பாடுகள்.
விழாவிற்கு முந்தைய நாள் வரையில் எல்லாமே எல்லோரும் எதிர்பார்த்தபடி நடக்க, யார் கண் பட்டதோ 18 ஆண்டுகளாக சூல்கொண்டிருந்த அரசியல் புயல் கரை கடந்ததில் கொஞ்சம் சேதமாகித்தான் போனது எழுகடல் பட்டிணமும். சாலையில் வாகனங்கள் ஓடவில்லை. மதியற்ற வீணர்கள் துரத்த மக்கள் ஓடினார்கள். தங்கள் தலைவிக்கு வழங்கப்பட்ட நீதியை கடைகளை அடைத்துக் கொண்டாடினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். மாநிலமெங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போதாத குறைக்கு வருணனும் வாழ்த்துமாரி பொழிய, வீட்டிலிருப்பவர்களின் பயத்தினால்  இம்முறை கிடைக்காமலே போனது அந்த மதுரமான இரவு.


ஏறக்குறைய எங்களைத்தவிர எல்லோருமே அறிவித்திருந்தார்கள் பாறைத் திருவிழா நிறுத்தப்பட்டதாய். ஆனால் எந்தப்பெரிய புயலும், மழையும் அசைத்துக்கூட பார்க்கவில்லை பசுமைநடையின் பாறைத்திடமான உறுதியை.


வான வேடிக்கையோடு கொண்டாட வேண்டிய விழா, ஒருபுறம் வானம் வேடிக்கை காட்ட, மறுபுறம் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியில் பேருந்துகளும் தவழாது கிடக்க, நமத்துபோகுமென நினைத்தவர்கள் வாயைப்பிளக்க, பசுமைநடையினை நம்பி, பசுமைநடைக்கு நம்பிக்கையளித்து சாரையாக வந்த மக்கள் நடத்திக்காட்டினார்கள் உறுதிமிக்கதொரு விழாவை. ஆம், பாறைத் திருவிழா பெயருக்கேற்ப பாறைத்திடமான உறுதிகொண்ட மக்களின் உறுதுணையும், பங்களிப்புமோடு அரங்கேறியது. இந்த உறுதி பெண்களாலும், குழந்தைகளாலும், குடும்பங்களாலும் பிணைக்கப்பட்டது.
விழாவின் அடிநாதமாக பசுமைநடை வரலாற்றின் மூலம் வடிக்கப்பட்ட மதுர வரலாறு நூல் இம்முறை நேர்த்தியான மூன்றாம் பதிப்பாகவும், ஆங்கில வடிவமான  “History of Madura – Voyage into Jaina Antiquity” யாகவும் வெளியிடப்பது. இனி மதுரையின் மதுரமான வரலாற்றை சமணப்பெருவெளியினூடே அறிந்துகொள்ள முற்படுவோர் பசுமைநடையின் வாயிலாகவே அதை அறிந்துகொள்ள முடியும்.


வெளியெங்கும் மழை. ஆனால் மக்கள் மனமெங்கும் பாறைத் திருவிழா நிகழ்வுகளை எதிர்நோக்கிய ஆவல். பேரிடர் மேலாண்மையில் மேற்படிப்பு முடித்தவர்களைப் போல் பேரிடர் மீட்பிற்குரிய நேர்த்தியில் எல்லா ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தி செவ்வனே விழாவினை கொண்டு சென்றது பசுமைநடைக் குழு. விழா நிறைவடைகையில் எல்லோரது மனதும் நிறைந்தே இருந்தது. முன்னெப்போதும் பெறாத மன நிறைவுடன் மீண்டுமொரு விழாவினை முன்னெடுக்கும் முனைப்போடு கலைந்து சென்றது பசுமைநடை.   
புகைப்படங்கள் உதவி: Eb Jai...
பி.கு: விருட்சத் திருவிழா மற்றும் பாறைத் திருவிழாக்களின் சுவாரசியம் நிறைந்த விழா ஏற்பாடுகள், பின்னரங்கு வேலைகள், உணர்வுகள் ஆகியவை ஒரு பதிவாகவும், குழந்தைகள் திருவிழா ஒரு பதிவாகவும் விரைவில் இங்கே பதிவிடப்படும்...