Thursday 19 December 2013

நெனப்பு வந்துச்சு அவனுக்கு – பாகம் 2...

மாமா இந்த வாட்டி பொங்கலுக்கு டிவியில என்ன படம் போடுவாங்க? ஏன்டா படம் பாக்குறத தவிர பொங்கலுக்கு வேற ஒன்னுமே ப்ளான் இல்லையாடா?
வேற என்ன பண்றது? கரும்ப தின்னுட்டு படம் பாக்க வேண்டியது தான்.
கேட்டதும் சுருக்குன்னுச்சு அவனுக்கு. அவன் மாமா, சித்தப்பாமாருங்க அவனுக்கு சொல்லிக்குடுத்த பொங்கல் கொண்டாட்டம் அவனோட முடிஞ்சு போனதையும், அவனும் அவன் ஜோட்டு பயலுகளும் அக்கக்கா அங்கங்க வெளியூருகளுக்கு வேலைக்குப் போனதால அவங்க மாமா, சித்தப்பாமாருங்க இளவட்டங்களா இருந்தப்போ செட்டு சேந்து நடத்துன இளைஞர் நற்பணி மன்றம் இன்னைக்கு இருந்த எடமும், இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு அப்டினா என்னன்ற தடமும் தெரியாம போனதுக்கும், அத இந்த பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தாம போனதையும் நினைக்கயில சுருக்குன்னுச்சு அவனுக்கு.

இவன் சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பொங்கல்னா எப்டியெல்லாம் இருக்கும்ன்ற நெனப்பு வந்துச்சு அவனுக்கு. தை பொங்கலுக்கு வீட்டு வாசல்ல கிழக்க பாத்து பொங்க வைக்க வேண்டி, மார்கழி மாசம் முழுக்க வாசல்ல அம்மா கூட சேந்து கோலம் போட்டு, கோலத்து நடுவுல சாணியில பிள்ளையார் புடிச்சு அதுக்கு நடுவால பூசணிப்பூ சொருகி வச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. நெதம் எங்கருந்தாச்சும் பூசணிப்பூ பரிச்சுட்டு வந்துர்றா, பூசணிப்பூ வச்சு கோலம் போட்டாத்தேன் வாசல்ல வச்சு பொங்க வெய்க்க முடியும்னு அவங்க அம்மா சொன்னதும், அதுக்காக வெள்ளன எந்திரிச்சு காடுகரை சுத்தி பூ பறிச்சுட்டு வந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

பொங்கலுக்கு மொதநா எரிக்கிறதுக்காகவே வீட்டுல இருக்கிற பழச பெறக்கி எடுத்து, வீட்டுக்கு வெள்ளையடிச்ச பெறகு படிக்கெல்லாம் வெள்ளையும், செகப்புமா கோடு போட்டு மறுநா பொங்கலுக்கு விடியமுன்ன எந்திரிச்சு குளிச்சு, அம்மா கூட சேந்து வாசல்ல நல்லா பெரிய கலர் கோலமா போட்டு அதுக்கு நடுவுல அடுப்ப கெழக்க பாத்து வச்சு சூரியன் உதிக்கிறப்போ கையெடுத்துக் கும்பிட்டு மஞ்சகெழங்கும் கூரப்பூவும் சுத்திக் கட்டுன மம்பானையில பொங்க வெச்சதும், பொங்க பொங்கி வரையில அம்மா கொலவ போட பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்னு சந்தோசமா கத்துனதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. கிண்டுன பொங்கல வாழஎலையில 5 தழுவு போட்டு ஐம்பூதங்களுக்கும் படச்ச பெறகு அப்டியே கழுவச்சோறு வாங்கித் தின்னதும், தொட்டுக்க பச்ச மொச்சயும், தேங்காச்சில்லும் தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. பெறகு தஞ்ஜோட்டு பசங்களோட சேந்து கரும்ப தின்னுட்டே ஊரு சுத்துனதும், கோயில்ல வரிகுடுத்ததுக்கு ஓலக்கொட்டான்ல குடுக்குற பொங்கலயும், கரும்பயும், அவங்க ஐயா பேரச் சொல்லி மைக்குல கூப்பிட்டு குடுக்குற துண்டயும் வாங்க காத்துக் கெடந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

இளைஞர் நற்பணி இயக்கத்துல இவங்க மாமா செயலாளரா இருந்ததும், பொங்கல் விளையாட்டுப் போட்டிக்கு அவங்க கூட சேந்து வசூல் பண்ணப் போகையில பனங்கெழங்கும், வேர்கல்லயும் வாங்கித் தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. பொங்கலன்னைக்கு காலையில ஓட்டப்பந்தயம், சுலோ சைக்கிள் ரேசு, சாக்கு ரேசு வச்சதும், ஓட்டப்பந்தயம் ஓடயில கால் வாரி கீழ விழுந்து முட்டி செரச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. சாயங்காலத்துல அவனுக்கு எப்பயுமே ரொம்பப் பிடிச்ச முட்டி ஒடைக்கிற போட்டி வெய்க்கிறதுக்கு முன்னால போய் மைக்ல அலோ மைக் டெஸ்டிங் 1 2 3 ன்னு பேசுறதும், அப்புறம் ரவியண்ணே “இன்னும் சற்று நேரத்தில் பழங்காநத்தம் மேலத்தெரு இளைஞர் நற்பணி இயக்கத்தின் சார்பாக பிள்ளையார் கோயில் திடலில் முட்டி உடைக்கும் போட்டி நடைபெற இருப்பதால் ஆங்காங்கே இருக்கும் பெரியோர்களும், தாய்மார்களும் போட்டி நடைபெற இருக்கும் இடத்திற்கு திரளாக வந்திருந்து போட்டியாளர்களை உற்சாகப் படுத்துமாறு விழாக் கமிட்டியாளர்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கண்ணக் கட்டுன பிறகும் நன்றாக கண் தெரியும் திறமையான இளைஞர்களும், அவர்களை ஊக்கப்படுத்த மொறையுள்ள தாவணி போட்ட பொண்ணுங்களும் கோவிலுக்கு அருகில் வரவும். கம்பத் தூக்கி முட்டிய அடிக்கிற தெம்பிருக்கும் ஆம்பளைகள் 2 ரூபாய் குடுத்து தங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளவும் னு அனவுன்ஸ் பண்ணவும், அத தொடர்ந்து ஜெகஜ்ஜோதியா நடக்குற முட்டி உடைக்குற போட்டியும், அதுல ஆளுக்கு ஒரு லெக்குல கம்பத் தூக்கிட்டு போறதயும், ஸ்டெப்பு கணக்கு பண்ணி, செருப்பில்லாம கால்ல மிதிக்கிற கல்லு அடையாளம் வச்சு அப்டி இப்டின்னு ஒவ்வொருத்தர் பண்ற பிரயத்தனத்தையும், ஆனாலும் அடிக்க மாட்டாம அவங்க கம்ப பெலக்க வீசையில அடுத்தாளு மேல படாம இருக்க ரெண்டு பேரு கூடவே கம்போட போய் அந்த கம்புட்ட அடிய தாங்குறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இப்டியே அடிக்க முடியாதவங்க மறுபடி மறுபடி ரீ என்ட்ரி கட்டி தோக்குறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. கடைசியில யாரோ ஒருத்தர் அடிக்க அவருக்கு பரிசா பெரிய பிளாஸ்டிக் வாளிய குடுத்துட்டு அவர ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு புகழ்ந்து அனுப்புறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

மறுநா அவங்க மாமாகூட சல்லிக்கட்டு பாக்க போகணும்னு நெனச்சுட்டே தூங்கப் போறதும், வெள்ளன எந்திரிச்சு போய் அவங்க மாமா அவன பத்தரமா சாரத்துல ஏத்தி விட்டுட்டு அவரு களத்துல நின்னுகிட்டு சல்லிக்கட்டு பாத்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இன்னைக்கு அவன் மாமா டிவியில சல்லிக்கட்டு பாக்குறதையும், அவரு மகன் சிறப்புநிகழ்ச்சி படம் போடச் சொல்லி அவரு கூட சண்டை போடுறதையும் நெனைக்கையில கண்ணீரு முட்டுச்சு அவனுக்கு. தனக்கு கெடச்ச சந்தோசத்த அடுத்த தலமொறைக்கு கடத்தாம பொழப்புக்காக அடகு வச்சத நெனைக்கையில நெஞ்சுக்குள்ள முள்ளு முள்ளா குத்துது அவனுக்கு.

இன்றல்ல
என்றும் அதே அன்புடன்,
பா.உதயக்குமார்.


Wednesday 4 December 2013

நெனப்பு வந்துச்சு அவனுக்கு...

அப்பா நாளைக்கு போகி.
அதுக்கு?
ஊர்ல இருக்கும் போது நாம பழசெல்லாம் எடுத்து ஒதுங்க வச்சு, வேண்டாதத எரிச்சு, வெள்ளயடிச்சு, படியில கோலம் போட்டு, மறுநா புதுஅரிசி போட்டு பொங்கவச்சு கொண்டாடுவமே? இப்ப ஏம்பா கொண்டாடல?
ஆமாமா அது ஒண்ணு தான் கொறச்சலா இருக்கு? உள்ளதுக்கே இங்க வழியக் காணோம், இதுல போகி, பொங்கல்ன்னுட்டு. பேசாம இருக்கியா? சும்மா தொணதொணன்னுட்டு.
வெள்ளயடிக்க வக்கில்லாத வீட்டு முத்தத்த வெறிச்சுப் பாக்கயில ஊர்ல இதேமாதிரியொரு போகிக்கு முந்தய நாளோட ஏற்பாடுக நெனப்பு வந்துச்சு அவனுக்கு. காத்து வேகமா அடிக்கயில பன ஓலயில செஞ்ச முள்ளுக் காத்தாடியா சுத்தி சுத்தி வேலை பாத்தாக அய்யாவும் அப்பத்தாவும். அப்பாவும் அம்மாவுங்கூட ஏதேதோ வேலயா இருக்க வயக்காட்டு வரப்போரம் பேத்து எடுத்துட்டு வந்த களிமண்ண வச்சு மாட்டு வண்டியும், ஆட்டு உரலும் செஞ்சு வெளாண்டது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
ஊர்ல வீட்டு முத்தத்துல ஒக்கார வச்சு அய்யா சொன்ன, பெண்ணே பூச்செண்டு தா, பெண்ணே பூச்செண்டு தான்னு ராசாமகன் கேக்குற அண்ட்ரெண்ட பட்சி கத, அப்புறம்,
           மாடுகட்டி போரடிச்சா மாளாதுன்னு
           ஆனகட்டி போரடிச்ச மருத நம்ம ஊரு,
           கட்டுக்கு களங்காணும்
           கதிர் உலக்கு நெல் காணும்
           புட்டுக்கு மண் சுமந்து
           பிரம்படி தான் பட்டவரு
           சொக்கநாதர் அவர் பேரு
           மருதயாளும் மன்னவருன்னு ஆரம்பிச்சு குட்டிமேகம் ஒன்னுக்கு பேஞ்சு வைகையில வெள்ளம் வந்த கதன்னு, கத கதயா நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
தஞ்சோட்டுப் பயலுகளோட சேந்து பாட்டி பாட்டி ஒண்ணுக்கு, சீனி பாப்பா சீனி, ஒரு கொடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்தாச்சுன்னு வெளாண்ட ஒவ்வொரு வெளாட்டும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
சிகரெட் அட்டயில கூண்டு செஞ்சு பொன்வண்டு புடிச்சதும், கண்ணாடி சீசாவுல மின்மினிப்பூச்சி புடிச்சதும், மூக்குத்தி செடியில அமுக்கி பாப்பாத்தி புடிச்சதும், முள்ளுச்செடியில நிக்குற தட்டான் புடிச்சதும், கவட்ட வச்சு குருவி அடிச்சதும், கொக்கி போட்டு ஓணான் புடிச்சதும், அதுக்கு மூக்குப் பொடி போட்டு ஆட வச்சதும், சகதிக்குள்ள பொரண்டு மீன் புடிச்சதும், செவக்காட்டுல போய் பனங்கா பறிச்சதும், கம்மா ஓரத்துல எலந்தபழம் பறிச்சதும், அரசமர எலயில பீபீ செஞ்சு ஊதுனதும், ஆலமர விழுதுல ஊஞ்சல் ஆடி நீராவில விழுந்து குளிச்சதும், செங்க - மண்ணு வச்சு வீடு, கோயில் கட்டி கூட்டாஞ்சோறு சமச்சதும், சுடுகா ஒரசி தொடயில சூடு வச்சதும், வேப்பங்கொட்ட ஒடச்சி வெரலு மொட்டியில வச்சு அடிக்கயில ரத்தம் வந்ததும், அப்பத்தாவோட உக்காந்து தாயம் வெளாண்ட்தும், அது குடுக்குற பருத்தி வாங்கி கடயில போட்டு சேவு தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
வயக்காட்டுல கருதடிச்சு கட்டு சுமந்து போகயில சிந்தி விழுகிற மிச்சம் பொறுக்கி படி நெல்லு சேத்ததும், கரும்பு அறுத்து ஆலைக்குப் போற வழியில இருக்க கரண்டு கம்பிய தொரட்டி வச்சு தூக்கும்போது நின்னு போற வண்டியில கரும்பு உருவிட்டு ஓடுனதும், வாழமரம் அறுத்து வண்டி கட்டி போகயில ஓடிப்போயி கால்ல மிதிச்சு கிழிச்சு வெளாண்டதும், தென்ன ஓல பறிச்சு வந்து பாம்பு செஞ்சு வெளாண்டதும், ஆடிப் பட்டத்துல அய்யா வெதைக்க, அந்நேரம் காத்தாடி செஞ்சு பறக்க விட்டதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அப்புறம் கொஞ்ச நாச் செண்டு மழையில்லாம வறண்ட நெலத்த பாக்க புடிக்காம ஒழவுமாட்ட வித்து வயக்காட்டுக்கு மோட்டர் தண்ணி பாச்சுன அய்யா போட்ட நெல்லு சாவியானத பாக்க பொறுக்காம மாரடச்சு செத்துப் போனதும், அவர பொதச்ச புல்லுமேட்டுல ஊர்நாய் ஒருகாலத் தூக்கி ஒண்ணுக்கடிச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அய்யா செத்தபொறவு, மேக்கதிர் வீட்டுக்கு – நடுக்கதிர் மாட்டுக்கு – அடிக்கதிர் காட்டுக்குன்னு சொல்லிக்குடுத்த அப்பத்தா சீமையிலயிருந்து வந்த மிசினு அறுத்துப் போட்ட வைக்கல மாடு திங்காம திரிஞ்சதயும், அடுத்தடுத்த வருசம் வீட்டுக்கும் வராம கூடிக்கூடிப் பிரிஞ்சு வேகமெடுத்துப் பறக்குற ஊர்க்குருவி திங்கவும் ஒண்ணுமில்லாமப் போனதயும் நெனச்சு நெனச்சு அழுது ஒடஞ்சது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
கடசியில சேத்துப்புண்ணா வெடிச்சுக் கெடந்த செவக்காட்டுல வெயிலு பொறுக்காம தள்ளாடி விழுந்த அப்பத்தா செதுப்போனதா சேதி வந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அய்யாவுக்குப் பொறவு அப்பத்தாவும், அதோட சேத்து ஊர்ல அவக இருந்த வீடும், நெலமும், வெவசாயமும், வாழ்ந்த வாழ்க்கயும் செத்துப் போனதும் ஒவ்வொரு பொங்கலுக்கும் எப்பவும் நெனப்புலயே இருக்கு அவனுக்கு...

Saturday 2 November 2013

பசுமைநடையில் நான்...

கொங்கர்புளியங்குளம் – எனக்கும் பசுமைநடைக்குமான தொடர்பின் ஆரம்பப்புள்ளி. இதுவரையில் 27 நடை கண்டிருக்கும் பசுமைநடையின் நாலாவது நடை, எனது முதல் நடை, இப்போது மீண்டும் 27 ஆவது நடை (20/10/2013) கொங்கர் புளியங்குளம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகிலிருக்கும் கொங்கர் புளியங்குளம் மலைக்கும் எனக்குமான தொடர்பு பசுமைநடை தாண்டியும் கொஞ்சம் இரசம் மிக்கது. ஆம் இங்கு ஒரு சாதாரணமான சூழலில் அப்போது நான் வைத்திருந்த நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் செல்போனில் நான் எடுத்துக்கொண்ட ஒரு சாதரணமான புகைப்படமே இதுவரையில் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான நபருக்கு பிடித்த புகைப்படமாக உள்ளது.
கொங்கர் புளியங்குளத்தில் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம்...

அப்படி அது சொல்லிக்கொள்ளுமளவிற்கு சிறப்பான புகைப்படம் இல்லையெனினும் ஒரு சிறப்பான தகுதியை எட்டிவிட்டது. இப்படி அச்சுபிச்சு காரணங்களோடே இம்மலைக்கும் எனக்குமான இரசவாதம் கொஞ்சம் அலாதியானது. இம்முறை கொங்கர் புளியங்குளம் என்னை எழுதத் தூண்டியது பசுமைநடையில் எனது சுயபுராணத்தை.

முதன்முதலில் பசுமநடை பற்றி நான் அறிந்தது முகநூல் வாயிலாக. அப்போது தான் காவல்கோட்டம் நாவலை வாசித்து முடித்திருந்த நேரமென்பதால் எனக்கு இம்மலைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் – ஞாயிறன்று அதிகாலை 6:30 மணியளவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வாயிலில் கூட வேண்டுமென முகநூலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரியாக கவனிக்காத நான், உடன் தம்பி சந்தோசோடு 6.30 மணிக்கு அங்கிங்கு விசாரித்து நேரே மலைக்கே சென்றுவிட்டேன். ஆனால் சொன்ன நேரத்தில் யாரும் அங்கு இல்லாதது கண்டு இருவருமே ஏமாற்றமடைந்தாலும், அதிகாலை வேலையில் தூக்கம் கெடுத்து, எங்களின் ஆர்வம் கெடுத்து ஏமாற்றத்தின் வடு உள்ளிருக்க இருவருமே ஏதேதோ சமாதானம் சொல்லி தேற்றிக்கொண்டோம். பிறகு வந்த கையோடு திரும்பிச் செல்லாமல் நாமாக சுற்றிப் பார்க்கலாமென முடிவெடுத்து சுற்றிமுடித்த கையோடு அந்த அதிகாலை நேரம் மலை எங்களுக்குள் ஏற்படுத்திய பரவசமும், அந்த ரம்மியமான சூழலும் தந்த மிதப்பில் அங்கேயே அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் சாலையில் சாரை சாரையாக வாகனங்கள் அணிவகுத்து வர எங்களுக்குள் பழைய உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலிருந்து கையசைத்தவாறே உற்சாகம் தாளாது கீழிறங்கி வந்து கூட்டத்தோடு சேர்ந்து கொண்டோம். பிறகு நேரே எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனிடம் சென்று  அறிமுகப்படுத்திக்கொண்டு ஆர்வமிகுதியில் “நீங்க ரொம்ப லேட் சார், நாங்க இங்க 6.30 க்கெல்லாம் வந்துட்டோம்” என்க, அவர் எங்களிடம் 6.30 மணிக்கு நாங்கள் வரச் சொன்ன இடம் பல்கலை வாயில் என பதிலுரைக்க, ஹி ஹி என அசடு வழிந்துகொண்டே பேசிச் சென்றோம். பிறகு அவர் இதை நாங்கள் குறுஞ்செய்தி வாயிலாகவே ஒருங்கிணைக்கிறோம் என்றுகூற எனது எண்ணை அவரிடம் கொடுத்துவிட்டு நிகழ்வில் ஒன்றிணைந்தேன். பேராசிரியர் சுந்தர்காளி இடங்களின் சிறப்பை விளக்க அதன்பிறகு எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. தம்பி சந்தோசிடம் நான், “தம்பி நாம இங்க ஒரு வேலை கூட செய்யாம சோறு சாப்பிட்டா நமக்கு உடம்புல ஒட்டாதுடா. அதனால எல்லோருக்கும் பரிமாறிட்டு கடைசியா நாம சாப்பிடுவோம்” எனக்கூறி ஏதேனுமொரு வகையில் நமது பங்களிப்பு இருக்க வேண்டுமென்ற முனைப்புடன் தன்னார்வமாக வேலை செய்தோம்.

அங்கேயே அடுத்தநடை மாங்குளம் என அறிவிக்க, நான் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனிடம் மாங்குளத்தில் எனது நண்பர்கள் உள்ளனர், உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கூறுங்கள் எனக் கூறிவிட்டு வந்தேன். இங்கு எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனை பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதற்கு முன்புவரை அவருடனான எனது அறிமுகம் அவரை விஜய் டிவி நீயா நானாவில் பார்த்தது மட்டுமே. பிரபலங்கள் எல்லோரும் தனித்தே இருப்பார்கள் என்று மற்றவர்களைப் போலவே எனக்கும் எண்ணமுண்டு. ஆனால் இவர் விதிவிலக்கானவர். அவருடன் பழகிய பிறகே தெரிந்தது அவரது எழுத்துக்கள் அனைத்தும் மக்களுக்கானவை. மக்களின் தேவைகளை, உணர்வுகளை, வலிகளை, உண்மைகளை பிரதிபலிப்பவை. மக்களிடமிருந்து தனித்திருந்தால் மக்களுக்கான எழுத்து எப்படி உருவாகும்? இவர் சமூகவெளியில் எப்போதும் சகமனிதனாக பயணிப்பதையே விரும்பும் ஒரு சாதாரணன். சாதாரணர்களுக்காகவே எழுதும் சாமானியன். அந்த நிகழ்விற்குப் பிறகு அவர் என்னை ஞாபகம் வைத்து அழைப்பாரென நான் நினைக்கவேயில்லை. அவர் அழைத்ததன் நோக்கம் மாங்குளம் சென்று அடுத்த நடைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு. ஒரு நடை நடத்துவதில் உள்ள சிரமம், அதற்கான முன்தயாரிப்புகள், நேர்த்தி என ஒவ்வொன்றும் ஒரு நிர்வாகம் பயிலும் மாணவனுக்கும், அத்துறையிலிருப்பவர்களுக்குமான படிப்பினை. அதன்பிறகு ஒவ்வொரு நடையிலும் என்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டதை கேட்கவும் வேண்டுமா?

இயல்பில் சமூகப்பணி படித்த எனக்கு பசுமைநடை கற்பித்த பாடம், ஒரு தன்னார்வமிக்க சமூகத்தை எப்படி கட்டமைக்க வேண்டுமென்பது. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், இன, மத, சாதி, வகுப்புகளைச் சேர்ந்தவர்களை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது பசுமைநடை. இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கமிருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒரே தளத்தில், தங்களது சுய அடையாளங்களை விடுத்து பசுமநடையின் உறுப்பினர்களாக மட்டுமே இயங்குவதென்பது சாதரணமாக சாத்தியமாகிவிடக்கூடிய ஒன்றில்லை. இங்கு கிடைக்கும் மரியாதையும், அங்கீகாரமும் வயது முதிர்வினாலோ, தங்கள் துறையில் வித்தகர்களாக இருப்பதினாலோ, பெரும்பொருள் படைத்தவர்கள் என்பதினாலோ, சமூகத்தில் பெரும்புள்ளிகள் என்பதினாலோ அல்ல. முற்றாக தன்னார்வமான உழைப்பினால் மட்டுமே கிடைக்கப்பெறுவது. உழைக்கும் எவரையும், எப்போதும், இங்கு எல்லோரும், வணங்கத் தயார். எந்தவித பொருட் பிண்ணனியும் இல்லாது துணிந்து ஒரு விருட்சத் திருவிழா நடத்தியது முழுவதுமாக இந்த தன்னார்வமான உழைப்பை நம்பியும், எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனின் தீர்க்கமான பார்வையின் உந்துதலினாலும் மட்டுமே.

இப்படி கடையனுக்கும் கடைத்தேற்றம் அளிக்கும் பசுமைநடை, சமூகவெளியில் செயல்படும் அனைவருக்குமான பால பாடம் அல்ல பட்ட மேற்படிப்பு.

Tuesday 15 October 2013

மதுரை வீதிகள்...

ஆயிரத்தொரு அராபிய இரவு கதைகளில் வரும் பாக்தாத் நகரை விடவும் அதிகக் கதைகள் கொண்டது மதுரை. குறிப்பாக மதுரையின் பகல் நேரக் கதைகள் சொல்லித் தீராதவை. கி.நாகராஜனும் சிங்காரமும் காட்டிய மதுரைக்காட்சிகள் வெறும் கீற்றுகளே. எல்லா வீதிகளும் இன்றும் நுரைதபடியே பொங்கிக் கொண்டிருக்கின்றன கதைகள். மதுரையில் கதை இல்லாத வீதிகள் இல்லை. நகரின் ஒவ்வொரு கல்லிற்குப் பின்னயேயும் ஒரு கதையிருக்கிறது.

மதுரை மாநகரம் குடித்துத் தீர்க்க முடியாத ஒரு சூதாட்ட பானகம். பகலிலும் இரவிலும் குரல் அடங்காத தெருக்கள். நாயின் அடங்காத நாக்கின் துடிப்பைப் போல எப்போதும் மெல்லிய பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கும் மனித நடமாட்டம். புரிந்து கொள்ளமுடியாத விதியின் கைகளில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டது.

மிகை நாடும் விருப்பம் அந்த நகரின் இயல்பிலே கலந்திருக்கிறது. ஒரு வேலை அழிந்த நகரம் என்பதால் தன்னை தனித்து அடையாளம் காட்டிக் கொள்வதற்காக அப்படித் துள்ளிக்கொண்டிருக்கிறதோ என்னவோ.

எத்தனை பாதைகள், எத்தனை வளைவுகள், மதுரையின் வீதியமைப்புகளுக்குள் காலை நேரங்களில் நடந்து பாருங்கள். அது ஸ்பானிய நகரங்களை நினைவுபடுத்தக் கூடியது.கோவிலின் உயர்ந்த கோபுரங்களுக்கு சமமான விளம்பரப்பலகைகள், கட்டடங்கள் இன்று உருவாகி விட்டிருக்கின்றன. ஆனால் மீனாட்சி கோவில் பூமிக்கும் ஆகாசதிர்க்கும் இடையில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மலரைப் போலவே தோன்றுகிறது.

கல்மண்டபங்களின் தூண்களின் விரல் தட்டி கேட்கும் சங்கீதம் நூற்றாண்டுகளின் முன் உள்ள மனிதர்களின் இதயத்துடிப்பைதானே வெளிப்படுத்துகிறது. மதுரையில் சுற்றியளைவதர்க்கு சற்றே பித்தேறிய மனநிலை தேவைப்படுகிறது அல்லது சுற்றியலைகிறவன் அப்படியொரு மனநிலைக்கு தானே உள்ளாகிறான்.

ஓடும் ஆற்றில் நீந்துவது போன்றது தான் மதுரையின் வாழ்க்கை. அதில் நம் முயற்சி அதற்குள் பிரவேசிக்க வேண்டியது மட்டுமே. மற்றபடி ஆற்றின் வேகமே நம்மை அடித்துக்கொண்டு போய்விடும்.

நம்பமுடியாமல் இருந்தால் ஒருமுறை டவுன்ஹால் ரோடின் உள்ளே நடந்து பாருங்கள். உங்கள் வேலை ரீகல் தியேட்டரில் இருந்து திரும்பி ஒரு எட்டு உள்ளே நுழைவது மட்டும் தான். ஆற்றின் வேகம் போல ஜனத்திரள் தானே உங்களை அழைத்துக்கொண்டு போய் மீனாட்சி கோபுரத்தின் அருகில் சேர்த்துவிடும். அங்கும் நீங்கள் விழிப்புணர்வு கொள்ளாவிட்டால் வெயிலேறிய மீனாட்சி அம்மன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் சூடு கொதிக்கும் கல்லில் நிதானமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

- எஸ்.ராமகிருஷ்ணன்...

Saturday 28 September 2013

மதுரை...

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை...

நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை...

மல்லிகை மௌவ்வல் அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
நாடிய மாடிய பதிமதுரை...

தொன்னவன் நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை...

தமிழைக் குடித்த கடலோடு - நான்
தழுவேன் என்றே சபதமிட்டு
அமிர்தம் பரப்பும் வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை - இது
மரபுகள் மாறா வேல்மதுரை...

மதுரை தாமரைப் பூவென்றும் - அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை
எம்குடி மக்கள் திரள் என்றும் - பரி
பாடல் பாடிய பால்மதுரை - வட
மதுரா புரியினும் மேல்மதுரை...

மீசை வளர்த்த பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர் சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த
அந்நியரில்சில கண்ணியரும்
ஆட்சிபுரிந்த தென்மதுரை -
மீனாட்சியினால் இது பெண்மதுரை...

மண்ணைத் திருட வந்தவரைத் - தம்
வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட வந்தவரை - ஊர்
பொசுக்கிப் போக வந்தவரைத் - தன்
சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய தூய்மதுரை...

அரபுநாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல் - ஒரு
மண்டபம் திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
கவிதைத் தமிழனின் தலைமதுரை...

வையைக் கரையின் சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும் தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும் தென்மதுரை...

போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின் ஒசைகளும் - இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும் வலையொலியும்
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண்
தூங்காதிருக்கும் தொழில்மதுரை...

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம் பெருக்கியத்தில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை...

நெஞ்சு வறண்டு போனதனால் - வையை
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் - நதியைப்
பாட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை...

- கவிப்பேரரசு வைரமுத்து...        

Thursday 26 September 2013

பாண்டிய மண்ணில் பசுமை நடை...

பாண்டிய மண்ணில் பசுமை நடை  – திருவாதவூர் பயணம்...
நாள்: 22/09/2013

இரவெல்லாம் பூத்த வெண்பனி மலறாத மென் காலைப் பொழுது. கதிரவன் இன்னும் உறங்கி எழாத விடியுமுற்பொழுதை கொஞ்சமேனும் பகலாக்க உழைத்துக் கொண்டிருந்தன வீடு திரும்பாத நிலவும், இரவுப் பணியை முடிக்காத தெருவிளக்குகளும். அதிகாலைப் பண்பலைகள் ஒருபுறம் தேவகானம் பாட, ஞாயிற்றுக்கிழமையாதலால் வழக்கமான விறைப்போடல்லாது சற்று சோம்பலாகவே விழித்தன டீக்கடைகள். வழக்கமாக ஊர்வனவற்றில் சேரும் பேருந்துகளும், தங்களைப் பறப்பனவையாக அடையாளப்படுத்தும் முனைப்பில் தூக்கம் களைந்து உறுமிக்கொண்டு விரைந்தன, ஆளரவமற்ற தார் சாலைகளில். இவற்றோடு நானும் எனது வண்டியை உதைத்துக் கிளம்பி சென்றுகொண்டிருந்தேன் புகையும், தூசியுமற்ற விடிகாலை சாலையில்...


சேவல் கூவும் சத்தம் கேட்டு வானம் வைத்துக்கொண்டிருந்தது செந்நிறத்தில் ஒரு வட்டப் பொட்டு. வானம் எனக்கொரு போதிமரமென வைரமுத்து எழுதியது எவ்வளவு உண்மை! மறைதல் நாணமென்றால் உதித்தல் மோகம். கதிரவன் தூக்கம் களைய கண்விழித்துக் கொண்டிருந்தது மதுரை. போகும் வழியில் களைகட்டியிருந்தது கரிமேடு மீன் மார்க்கெட். கவிச்சி திங்காத ஞாயிற்றுக்கிழமைகளை சாபக்கேடாகக் கருதும் மதுரைக்காரர்களின் வாய் ருசிக்கவும், தங்களின் வயிற்றை ரொப்பவும் கூடை கூடையாக மீன்களை அள்ளிக்கொண்டிருந்தனர் வியாபாரிகள். குறுக்கும் நெடுக்குமாக வளைய வந்த ட்ரைசைக்கிளின் நடுவே சிரமேற்கொண்டு வண்டியை லாவகமாக ஓட்டுவதே சவால். சவாலில் வெற்றிபெற்ற என் வண்டி நேரே சென்று நின்ற இடம் மாட்டுத்தாவணி.

இரவு வீட்டில் தூங்கி எழுந்தார்களா? அல்லது இங்கு வந்து தூங்காமலே காத்திருந்தார்களா? ஆர்வமிகுதியுடன் எனக்கு முன்பே அங்கிருந்தனர் அநேகர். வழக்கம் போல சோம்பலான தாமதத்துடன் சிலர். சற்று நேரத்தில் கிளம்பியது பசுமைநடைப் பயணம் மாணிக்கவாசகரின் மண்ணை நோக்கி. மாட்டுத்தாவணியிலிருந்து ஒத்தக்கடை சென்று அங்கிருந்து வலதுபுறம் திரும்பியது திருவாரூர் பயணம். இதற்குள் கதிரவன் முழுச் சோம்பல் நீங்கி முறைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கென்ன கோபமோ?!? வழக்கமாக டீக்கடையில் மொய்க்கும் கூட்டம் பார்த்திருக்கிறோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒத்தக்கடை அங்குவிலாஸ் அல்வா கடையில் அதிகாலையிலேயே மொய்த்தது, ஈக்கள் அல்ல மக்கள் கூட்டம். புதுத்தாமரைப்பட்டி பத்திர அலுவலகம் வரையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகமாய் பட்டா போட்டிருந்த விளைநிலங்கள், அதைத் தாண்டியதும் கொஞ்சம் கொஞ்சமாய் பசுமை வடிவம் பெற்றிருந்தன.


கொஞ்சம் நெரிசலாய்த் தெரிந்த சாலை திருமோகூர் தாண்டியதும் வெறிச்சோடியிருந்தது. சாலையில் அமர்ந்து சாவகாசமாக சிற்றுண்டி உண்டுகொண்டிருந்தன புறாக்களும், காகங்களும், இன்னும் பெயர் தெரியாப் பறவைகளும். வழியெங்கும் ஆனந்தக்கூத்தாடிக்கொண்டிருந்தன மயில்கள். தார்ச்சாலையில் பெயரெழுதிச் சென்ற டிராக்டர்களின் இரும்புச் சக்கரங்கள் சொல்லிச்சென்றன இன்னும் அந்தப் பக்கம் மிச்சமிருக்கும் விவசாயத்தை. அவற்றின் தடங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன வசதியென நாம் மறந்து வாழாது விட்ட நம் வாழ்க்கையை. சாலைகளில் கிடை கிடையாக சென்றுகொண்டிருந்தன ஆடுகளும், மாடுகளும். அவற்றினூடே மனிதர்களும் அவ்வப்போது ஒன்றிரண்டு வண்டிகளும். இருமருங்கிலும் இருக்கும் மரங்களைப் பிடுங்கி நடுவே சிகப்பு, மஞ்சலென அரளிப்பூச்செடிகளை மலர்வளையமாக நட்டுவைத்திருக்கும் விரைவுச்சாலைகளைப் போலல்லாது, தன் இயல்பைத் தொலைக்காது இருபுறமும் மரங்கள் சூழ குகைப் பாதையென பயணிக்கிறது திருவாதவூர் சாலை.வழியெங்குமிருந்த இன்னும் குழாய்களாக நசுக்கப்படாத, பாட்டில்களில் சிறையிடப்படாத நீர்நிறைந்த குட்டைகளில் கத்திக் கொண்டிருந்தன தவளைகள். அவற்றை உண்ணும் முனைப்பில் சுத்திக் கொண்டிருந்தன பாம்புகள். குட்டைகளின் கரையோரம் ஒருபுறம் அமர்ந்து பெண்கள் துவைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர் பயமறியாச் சிறுவர்கள்.


ஊரூறிற்கு என்ன இருக்கிறதோ இல்லையோ வழியெங்கும் தவறாமல் இருக்கின்றன டீக்கடைகளும் அதில் காலை எழுந்தவுடன் தேசிய பானமாம் டீயின் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் மனிதர்களும். மதுக்கடைகளை டாஸ்மாக்குகளாக அங்கீகரித்ததைப் போல் டீக்கடைகளையும் அரசுடமையாக்கலாம். பெண்கள், குழந்தைகளும் குடிப்பதால் “யு” சான்றிதழோடு கடை நடத்தலாம். அரசின் கவனத்திற்கு!
இப்படி மாட்டுத்தாவணியிலிருந்து வழியெங்கும் குதூகலப்படுத்தி வந்த சாலையின் 19-ஆவது கிலோமீட்டரில் திருவாதவூருக்குள் செல்லும் முன்பே வலப்புறம் 2000 வருடப் பழமையை சுமந்து கொண்டு அமைதியாய்ப் படுத்துக் கிடக்கின்றது கற்பாறைகளாலான ஓவா மலை. 


ஏறக்குறைய தன்னைத் தவிர தன்னைச் சுற்றியிருந்த எல்லா சகோதர மலைகளையும் மனிதர்களின் பேராசைக்கு குவாரிகளாக தின்னக் கொடுத்த பிறகும் இன்னும் அது மிச்சமிருப்பது அது சுமந்த தமிழால். ஆம், அது தாங்கிய தமிழ் அதனைக் காத்து வருகிறது 2015 ஆண்டுகளாக. சமணம் தமிழுக்குச் செய்த தொண்டு ஒருபுறமிருக்க, அது மதுரைக்குச் செய்த தொண்டு மதுரையின் அனைத்துத் திசைகளிலும் உள்ள மலைகளில் குடைவரைகள், கற்படுக்கைகள், கல்வெட்டுக்களைப் பதித்து அவற்றையும், அவற்றோடு இயற்கையையும் காத்தது. இல்லாவிட்டால் இம்மலைகளெல்லாம் இந்நேரம் கபளீகரம் செய்யப்பட்டு, நிலவைப் போலவே மதுரையும் எண்ணற்ற குழிகளுடன் காட்சி தந்து கொண்டிருக்கும்.


மலையின் முகப்பில் பாதுகாக்க வேண்டிய இடம் என்ற வாசகங்களோடு, பாதுகாப்பின்றி நிற்கிறதொரு பலகை. அதனருகே சாவகாசமாய்ப் படுத்துக்கிடக்கின்றன 2009-ஆம் ஆண்டில் தொல்லியல் துறையால் வைக்கப்பட்ட மலையின் வரலாறு சொல்லும் இரு மார்பிள் கற்பலகைகள். அதன் மேற்பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் காணக் கிடைகின்றன குகைத்தளமும், கற்படுக்கைகளும், இரு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்.
 


“பாங்காட அரிதன் கொட்டுபிதோன்”, “உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்” என்ற அந்த இரண்டு தமிழ் பிராமி கல்வெட்டுக்களின் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு. வெட்டியதிலிருந்து எங்கும் தொலைந்து போகாத அந்தக் கல்வெட்டுக்களின் இருப்பிடத்தை 1996-ல் வெளிப்படுத்தியவர் ஐ.மகாதேவன். முதல் கல்வெட்டு இருப்பது குகைத்தளத்தின் நீர்வடிப்பகுதியின் மேல்பகுதியில். அதன் விளக்கம் “இத்தளத்தைக் குடைவித்துக் கொடுத்தது பாங்காடு அல்லது திருவாரூருக்கு அருகிலுள்ள பனங்காடி என்ற ஊரைச் சேர்ந்த அரிதன்” என்பதாகும். இரண்டாவது கல்வெட்டு அமைந்திருப்பது குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் கீழ்ப்பகுதியில். அதன் விளக்கம் “பரசு என்கிற உபாசகர் - உபாத்யாயன் – சமையல் ஆசிரியர் இந்த உறைவிடங்களை அமைத்துக் கொடுத்தார்” என்பதாகும்.

கல்வெட்டுக்களின் அருகில், தொட்டவுடன் சுருண்டு கொள்ளும் ரயில்பூச்சியினைப் போல, சுமை அதிகமானால் தலையில் சுருண்டு பிடிக்கும் சும்மாடைப் போல, கொசு அதிகமானால் கொளுத்தப்படும் கொசுவர்த்திச் சுருளைப் போல வடிவத்தில் ஒத்த ஓவியங்கள் நிறைய இருக்கின்றன. அது கற்கால ஓவியங்களா இல்லை சேட்டைக்காரர்கள் வரைந்த பிற்கால ஓவியங்களா எனத் தெரியவில்லை.

அன்று காணக்கிடைக்கவில்லை எனினும் குகைத்தளத்தின் இடது ஓரம் வாசம் செய்துகொண்டிருக்கின்றன சட்டைகளைக் கழட்டிப் போட்ட திகம்பரப் பாம்புகள். மலையைச் சுற்றிலும், செல்போன் கதிர்வீச்சோ, மாடம் வைத்துக் கட்டப்படாத வீடுகளோ ஏதோவொன்று தொலைத்துக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளும், பட்டாம்பூச்சிகளும் வட்டமிட்டு சுத்தித் திரிகின்றன.

தானே இயற்கையாய், மனிதர்களை விடுத்து ஆளில்லாத மலைகளில் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த, தமக்கென ஏதும் கொள்ளாது திசைகளையே ஆடையாய் அணிந்து வாழ்ந்து மறைந்த திகம்பரர்களின் வாழ்விடங்களே இன்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. பேராசைகளின் மொத்த மூட்டையாய் எல்லாவற்றையும் விழுங்கும் மனிதர்களின் வாழ்க்கை எதிரிலிருக்கும் குவாரிகளின் படுகுழிகளைப்போலே அதலபாதாளத்தில் வீழ்ந்தே கிடக்கின்றன என்ற உண்மை முகத்தில் அறைய பயணம் அங்கிருந்து திருவாதவூருக்கு திசை திரும்பியது.

திருவாதவூரின் பெருமை திருவாதவூரார்-மாணிக்க வாசகரால். எல்லோரும் உருகும் ஒருவாசகமாம் திருவாசகம் இயற்றிய சமயக்குறவர். இறைவன் பக்தர்களுக்காக அதிசயங்கள் புரிந்த கதை நிறைய உண்டு. இறைவனே தன் பக்தனுக்காக வந்து அடிவாங்கிய கதை இவருக்கு மட்டுமே உண்டு. சொக்கநாதர் இவருக்காக நரியைப் பரியாக்கினார், பிட்டுக்கு மண் சுமந்தார், பிரம்படியும் பட்டார் எனப் புராணங்கள் சொல்கின்றன. இன்னொரு சிறப்பும் இவ்வூருக்கு உண்டு. இவ்வூர் கி.மு.2-ஆம் நூற்றாண்டில் சங்ககாலப் புலவர் கபிலர் பிறந்து, வாழ்ந்து, மறைந்த ஊர்.

திருமறைநாதர்-வேதநாயகி அம்மாள். திருவாதவூரில் வீற்றிருக்கும் தெய்வங்கள். சலனமின்றி அமைதியாகவே இருக்கிறது இவர்களின் இருப்பிடமும், அங்குசென்றபின் நம் மனமும். கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோயிலுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டுக்களோடு, வியாபாரிகளும், தேவரடியார்களும் சிலைகள் வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டுக்களையும் சேர்த்து எழுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இவ்வூரில் “உலகளந்த சோழன் பேரேரி” அதாவது ராஜராஜச் சோழனின் பெயர் தாங்கிய ஏரி ஒன்றுள்ளது. இதன் மடையில், பீமன் இந்திரலோகத்திலிருந்து கொண்டுவந்ததாய்க் கருத்தப்படும் புருசாமிருகச் சிலையொன்று உள்ளது (பல் மருத்துவர் ராஜான்னா, யாரோ கடுங்கோவத்திலிருந்த ஒரு பொண்டாட்டி இந்த மிருகத்துக்கு பேர் வச்சிருப்பாளோ? என வேடிக்கையாய் சொல்வார்). அதோடு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சிப் பொறுப்பேற்றதைக் குறிக்கும் நினைவுத் தூணொன்றும் உள்ளது.


எல்லாம் சரி. சங்க முற்காலத்திலிருந்து வெள்ளையர் காலம் வரை வெவ்வேறு காலத்திய அடையாளம் தாங்கிய இவ்வூருக்கு ஏன் திருவாதவூரெனப் பெயராம்? சனீஸ்வரருக்கு வாதநோயைப் போக்கியதால் வாதவூர் – திருமறைநாதர் வீற்றிருப்பதால் திருவாதவூர். வாத நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். ஊமைகளையும் வாதத்தில் வல்லவர்களாக மாற்றும் நாதர் இவர் அதனால் இது திருவாதவூர் எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ? அருமையானதொரு பயணம். அதைச் சாத்தியப்படுத்தியது பசுமை நடை.

பசுமைநடை –


எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணனால் விதையிடப்பட்டு  இன்று விருட்சமென வளர்ந்து நிற்கும் ஒரு தன்னார்வ அமைப்பு. நாம் மறந்துவிட்ட, நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட, நம்மைச் சுற்றியுள்ள, நமக்கு தெரிந்த/தெரியாத இடங்களின் தெரியாத வரலாறுகளை தெரியப்படுத்தி அதை பொதுவில் வைக்கிறது பசுமைநடை. ஏனோதானோவென்றில்லை,தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியலறிஞர்கள், சூழலியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்/ஆசிரியர்கள், முனைவர்கள், ஓவியர்களின் துணைகொண்டு ஆழமாக, வீரியமாக.


தொல்லியலறிஞர்.முனைவர்.சாந்தலிங்கம் மேற்சொன்ன வரலாற்றுத் தகவல்களை விவரிக்கும் பாங்கு அலாதியானது. அவற்றை அவர் விவரிக்கும் போது உண்டாகும் பூரிப்பு அதன் மேல் அவருக்கு இருக்கும் ஈர்ப்பையும், ஈடுபாட்டையும் காட்டுகிறது. பசுமைநடையின் சிறப்பு இதில் எல்லோருமே தத்தமது சொந்த அடையாளம் விடுத்து தன்னார்வலர்களாக, பசுமைநடை உறுப்பினர்களாக மட்டுமே இருப்பது தான். இது எளியோர்கள் சேர்ந்து நடத்தும் வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாதமும் பெரும்பாலானோருக்கு வசதிப்பட்ட ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பயணப்படுகிறது பசுமைநடை. நீங்களும் ஒருமுறை சென்று அனுபவியுங்களேன்...

புகைப்படங்கள்: மருத்துவர்.ராஜான்னா மற்றும் செல்வம் ராமசாமி...

பசுமைநடையில் இணைந்துகொள்ள - 97897 30105, greenwalkmdu@gmail.com.

Monday 16 September 2013

வணக்கம்...

மீனாட்சி பட்டணம் -


தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகராம் மதுரையின் கலாச்சாரத்தையும் அதன் பின்புலத்தையும் தேடிச் சென்று தொகுக்கும் ஒரு சாதாரணனின் முயற்சி... 

நமது பழக்கவழக்கங்கள், சடங்குகள் என கூடுமானவரை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் முயற்சி. "மதுரையைச் சுற்றிய கழுதையும் வேற ஊர் தங்காது" என்றொரு சொலவடை உண்டு. இது மதுரையைச் சுற்றும் கழுதையின் அனுபவம். மதுரையை சுற்ற விரும்பும் கழுதைகளுக்கான களம்...

தங்களது மேலான ஆதரவுகளுடன்...

பா.உதயக்குமார்...