Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Thursday, 7 January 2016

சல்லிக்கட்டு... (Not for the Faint Hearted)...


"Bullfighting is the only Art in which the Artist is in Danger of Death and in which the degree of Brilliance in the performance is left to the Fighter's Honour" - Ernest Hemmingway (1899-1961)

அறிமுகம்:

விளையாட்டு மனிதனின் உடன்பிறப்பு. ஒரு சமூகம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது அச்சமூகம் ஆடிய விளையாட்டு. அது அச்சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டோடு இணைந்தது. அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மாறாக உடல்நலமும் மனநலமும் பேணுவது.


சல்லிக்கட்டு-தமிழகத்தின் வீர விளையாட்டாக அடையாளப் படுத்தப்படுவதின் பின்புலமென்ன? அதன் வரலாறென்ன? மூலமென்ன? குறிப்பாக தென் தமிழகத்தில், அதிலும் மதுரையின் சுற்று வட்டாரங்களில் புகழ் பெற்றதன் ரகசியமென்ன? கொஞ்சம் உற்று நோக்கினால்,

இலக்கியத்தில் சல்லிக்கட்டு:
           
சல்லிக்கட்டு - ஏறுதழுவல் என்ற பெயர் தாங்கி சங்க இலக்கியங்களின் அகநூல்களில் ஒன்றான கலித்தொகையில், அதிலும் குறிப்பாக சோழன் நல்லுருத்திரன் பாடிய முல்லைக்கலியில் பாடப்பட்டுள்ளது.  ஏறு தழுவல்-விடை தழால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

           
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் பெண் காளை வளர்ப்பதையும், காளை அடக்குபவனை பெண் விரும்பியதையும் காண முடிகிறது. அதுசரி ஏன் காளை அடக்குபவனை பெண் விரும்ப வேண்டும்?

வரலாறு:


மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து காட்டுமிராண்டி நிலையிலிருந்து விலங்குகளை பழக்க ஆரம்பித்த காலத்தில் அவன் நாகரிகத்தின் முதல் படியை அடைந்தான். அதுவரை தனது உணவுத்தேவைக்கு அலைந்து திரிந்தவன் நிலையான வாழ்க்கைமுறைக்குத் தள்ளப்பட்டான்.இந்த நிலையான வாழ்வில் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இனமாக வாழ ஆரம்பித்தான். தினைக்குடிகளும் ஊர்களும் தோன்றின. கால்நடைகளின் பெருக்கம் உணவுத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்ததுடன் மனிதனை புதிய வாழ்க்கைமுறைக்கு உந்தியது. பரிவர்த்தனையின் முக்கியப் பொருளாக கால்நடைகள் மாறின.


மாடு என்றால் செல்வம் என்று பொருள். இன்றளவிலும் நாம் பசு, எருது, எருமை உள்ளிட்டவைகளை மாடு என்றே அழைக்கிறோம். விவசாயம் தோன்றியது. விவசாயம் செய்பவர்கள் தனி இனக்குழுவாகவும், கால்நடைகளை மேய்ப்பவர்கள் தனி இனக்குழுவாகவும் பிரிந்தனர் (முதல் தொழிற் பிரிவினை). இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு  விவசாயம் பெருக்கப்பட்டது. நிலங்களையும் கால்நடைகளையும் காக்கும் பொருட்டு வலிமை மிகுந்த அல்லது வயதில் மூத்த ஒருவர் இனக்குழுத் தலைவர் ஆக்கப்பட்டார். கால்நடைகளை வழி நடத்த பயன்பட்ட கோல் இனக்குழுத் தலைவன் மக்களை காக்க பயன்படுத்தும் செங்கோலாக மாறியது.

விவசாயப் பெருக்கம், கால்நடைகளின் பெருக்கத்தால் கிடைத்த உபரிப் பொருள் திறை என்ற பெயரில் வழங்கப்பட்டது. இங்கு அரசு உருவாகியது. எல்லோரிடமும் திறை வாங்கியதால் செல்வந்தன் ஆனவன் அதிகாரம் கொண்டான். அருகில் வாழ்ந்த இனக்குழுவின் கால்நடைகளை, விவசாய நிலங்களை கைப் பற்றினான்.


இதனால் காவல்-காவலர்கள்-அரசு என்ற நிலைத்த அமைப்பு உருவானது. காவலர்கள் வீரர்கள் ஆனார்கள். போர்கள் தோன்றின. வீரம் போற்றப்பட்டது. போரின் தொடக்கமாக இனக்குழுவின் செல்வமாக கருதப்பட்ட ஆநிரைகள்  கவரப்பட்டன. ஏறு தழுவலின் ஆரம்பமும் இதுவே.

குறிஞ்சி-மேடு பள்ளம், மருதம்-விளைநிலம், நெய்தல்/பாலை-மணற்பகுதி, முல்லை-காடும் காடு சார்ந்த சமவெளிப்பகுதி. அதனால் முல்லை நிலமே அரசு தோன்றவும், மேய்ச்சல் நிலமாகவும், ஏறுதழுவல் களமாகவும் அமைந்தது. ஏறுதழுவல் முல்லை நிலத்து ஆயர்களிடம் தோன்றி பின்பு மருத நிலத்து உழவர்களிடமும் பரவி செல்வாக்குப்பெற்றது.

சல்லிக்கட்டும் வீரமும்:

மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், பழக்குவதற்கும் மாடுகளை அடக்கி வெற்றிகொள்ள வேண்டியது அவசியமானது, நிலையான சமூக அமைப்பு தோன்றிய பின்னர் ஏறுதழுவல் விளையாட்டாக மாறியது. மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போதோ, தொழுவில் முரண்டு பிடிக்கும் போதோ, அடங்க மறுத்து திமிரும் போதோ அதை அடக்கி வசப்படுத்த வேண்டியது அவசியம். எனவே மாடுகளை அடக்கக் கூடிய வீரம் பொருந்திய ஆண் மகனே தன்னுடைய குலப் பெருமையை காக்கும் பெண்ணை திருமணம் செய்யத் தகுதியானவன் என்ற எண்ணம் இவ்விளையாட்டை வலுப்படுத்தியது. பெண் குழந்தை பிறந்த உடனே ஒரு காளையையும் சேர்த்தே வளர்க்கப் பட்டது. பெண்கள் காளைகளை வளர்த்தனர். அதனை அடக்குபவனை தங்கள் வாழ்க்கைத் துணையாய் தேர்ந்தெடுத்தனர்.


ஆரம்ப காலத்தில் பெண் வளமையின் குறியீடு. பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. பொன், பொருள் பரிசாகத் தரவேண்டும். பெண்ணை அடைவதற்கு ஏற்படும் போட்டியில் உயிர் கூட போகலாம்.  பிறகு மெல்ல பெண்களின் உரிமையை பறிக்கும் பொருட்டு ஆண்கள் அவர்களிடமிருந்த காளைகளை வெற்றி கொண்டனர். காலப்போக்கில் காளைகளை அடக்குவது பெண்களை அடக்கும் செயலின் அகவடிவச் செயலாக மடைமாற்றமடைந்தது. பின்னாட்களில் பெண் வெற்றி கொள்ளப் படவேண்டியவள், காளைகளை அடக்குதல் வீரம் அதற்கு பெண் பரிசுப்பொருள் என்று மறுவடிவம் கொண்டது.


இவ்வாறு ஏறுதழுவல் பெண்களை மனம் முடிக்க வீரத்தை நிருபிக்கும் விளையாட்டாக இருந்தது நாளடைவில் அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களினால் வீரத்தை நிருபித்து பெண்ணைத் தவிர வேறு பரிசுப் பொருள்கள் பெறும் முறையாய் மாறியது. ஏனெனில் முன்பெல்லாம் முறையுள்ள மாமன்மார்கள் மட்டுமே குறிப்பிட்ட காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். உதாரணத்திற்கு அழகத் தேவன் கதைப் பாடலில் வரும்,

" கெழக்கே பிறந்த காளை 
கீழக்குடி ஓய்யம்மா காளை 
வேட்டி வச்ச ஆம்பள சிங்கம் 
அங்காளி பங்காளி 
அண்ணன் தம்பி யாரும் நிக்காதீங்க,
மொறையுள்ள மச்ச்சான்மார்கள் 
யாராக இருந்திட்டாலும் 
ஏழு காளை புடிச்சவங்க 
என்னைத் தாலி கட்டிகங்க"

என்ற வரிகள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது அப்படியில்லை. எல்லோரும் மாடு பிடிக்க அனுமதிக்கப் பட்டபிறகு கீழ்சாதியில் ஒருவன் மேல்சாதிப் பெண் வளர்த்த காளையை பிடிக்கும் போதும், ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் பிடிக்கும் போதும் இவ்வழக்கம் தடை பட்டிருக்கலாம். எனவே பெண்ணை திருமணம் செய்தல் மறைந்து வெறும் பரிசுப் பொருளோடு நின்ற பிறகு சல்லிக்கட்டு என பெயர் பெற்றிருக்கலாம்.

சல்லிக்கட்டு-பெயர்க்காரணம்:

சல்லிக்கட்டு- "சல்லி" என்றால் சிறிய காசு (சல்லிகாசுக்கு பிரயோஜனமில்லை என்று தற்போதும் கூறுகிறோம்) அல்லது ஆபரணத் தொங்கல் என்று பொருள். திருமனத்தைக் குறித்து நடத்தப்பட்ட ஏறுதழுவல் பரிசுப் போட்டியாக மாறிய சூழலில் பரிசாக பணம் வழங்கப்பட்டதாலும், காளைகளின் கழுத்தில் ஆபரணம் அணியப்பட்டதாலும் சல்லிக்கட்டு என பெயர் பெற்றிருக்கலாம்.


சல்லிக்கட்டு தற்போது சமய விழாவாக நடத்தப் படுகிறது. சங்க காலத்தில் கடவுளுக்கு உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் அந்த நம்பிக்கைக்கு ஆதரவு குறைந்தது. அதே வேளையில் துடியான தங்களது கிராம தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுக்க வேண்டும் என்ற விழைவும் சல்லிக்கட்டு போன்ற உயிர்பலி, இரத்தப் பலி நேர்கின்ற விளையாட்டு சமயத்தோடு இணைக்கப் பட்டிருக்கலாம்.

சல்லிக்கட்டும் மதுரையும்:

சல்லிக்கட்டு பல இடங்களில் விளையாடப்பட்டாலும் மதுரை மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் சிறப்பாக ஆண்டுதோறும் விளையாடப்பட்டு வருகிறது. இதற்கு மதுரையின் நில அமைப்பே முக்கிய காரணம். முன்பே சொன்னது போல் சல்லிக்கட்டு/ஏறு தழுவல் முல்லை நிலத்தில் தோன்றி வலுப் பெற்றது. சோழநாடு-மருதவளம் நிறைந்தது, சேரநாடு-மலைவளம் சிறந்தது. எனவே முல்லைவளமுடைய பாண்டிய நாடாகிய மதுரைப் பகுதியில் செல்வாக்குப் பெற்றது.

சாதி மறந்த சல்லிக்கட்டு:

பண்பாட்டின் அடையாளமாக, விளையாட்டின் தீவிரத்தில் சாதியை விட்டொழித்து எல்லா சாதியினரும், மதத்தினரும் கலந்துகொள்வதொடு நடத்தவும் முடிகிற தமிழர்களின் வீர விளையாட்டாய் நிலைபெற்றிருக்கிறது சல்லிக்கட்டு. உதாரணமாக அலங்காநல்லூரில் நாயக்கர்கள், கோனார்கள், முக்குலத்தோர்கள் இணைந்து சல்லிக்கட்டை நடத்தினால், அதனினும் பிரமாண்டமாக பாலமேட்டில் "தேவேந்திர குல வேளாளர்கள் (பள்ளர்)" சல்லிக்கட்டை வருடாவருடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் சாலையோரங்களில் விற்கப்படும் மாட்டுக்கறி (பீப்) பிரியாணி மற்றும் பன்னிக்கறி வெகு பிரபலம். பொங்கலுக்கு கரும்புக் கடைகளைப் போல அதிகளவில் இந்த பீப் பிரியாணி மற்றும் பன்னிக்கறி கடைகள் கடைகள் போடப்பட்டிருக்கும். மாடுகளைப் போற்றும் மாட்டுப்பொங்கல் நாளில் மாட்டுக்கறி பிரியாணி விற்கும், உண்ணும் வழக்கம் இருப்பதில் புரிந்துகொள்ள முடிகிறது அதன் பண்பாட்டு அளவியலை. இந்தக் கட்டுரையின் மூலம் நாம் சல்லிக்கட்டின் வரலாற்றை மட்டுமல்ல, விவசாயத்தின் அடிப்படையில் உருவான இனக்குழு வரலாற்றையும், தொழிற் பிரிவினையையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழர்/திராவிட நாகரிகங்களில் தொழிற் பிரிவினையை இருந்தது பின்னாட்களில் சாதியமாக கட்டமைக்கப்பட்டது.

சல்லிக்கட்டு ஏன் வேண்டும்?


தற்போது சல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமாக நமது பண்பாட்டின் எச்சமாக விளங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது, ஆனால் வழக்கத்தில் மாடுகளை அணைவதற்குப் பதிலாக குறிப்பிட்ட தூரம் வரை மாடுகளைத் தொட்டுக்கொண்டே சென்றாலே வீரமாக அடையாளப்படுத்தப் படுகிறது. எது எப்படியோ நமது வரலாற்றுத் தொன்மையை கொஞ்சம் கொஞ்சமாகவும், சில வேலைகளில் மொத்தமாகவும் இழந்து கொண்டிருக்கும் நாம் தொக்கி நிற்கும் ஒன்றிரண்டு எச்சங்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். சல்லிக்கட்டில் மாடுகளை அணைபவர்களுக்கு பணம், பரிசுப் பொருள் என மாற்றமடைந்த பிறகு அதில் எல்லா சாதியினரும் இப்போது கலந்து கொள்கின்றனர், எல்லா சாதியினரும் அதை ஏற்று நடத்துகின்றனர். இவ்வளவு பெரிய வரலாற்றுப் பெருமையை தன்னோடு சுமந்திருக்கும் இவ்விளையாட்டு தற்போது வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதத்தோடே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப் படுகிறது.


விலங்கு நல ஆர்வலர்கள் முன் வைக்கும் விவாதம் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றன என்பது தான். இதுவரை சல்லிக்கட்டு வரலாற்றில் எந்த ஒரு மாடும் களத்தில் இறந்ததாய் தகவல் இல்லை. மாறாக வீரர்களே இறந்திருக்கின்றனர். காயம்பட்டிருக்கின்றனர். சல்லிக்கட்டு காளை வளர்ப்பதும் அவ்வளவு சுலபமில்லை. காளையை வெயில் படாமல், தான் உண்ணா விட்டாலும் அதற்கு ஊட்டமளித்து, அதைப் பராமரிக்கவே தனியாக ஆட்களை நியமித்து, உயிருக்குயிராய் நேசித்து அணு அணுவாய் அந்தக் காளையை தயார் செய்கின்றனர்.


சல்லிக்கட்டு பணம் புரளும் விளையாட்டும் அல்ல. இதில் வெற்றி கொள்வோருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் கட்டில், பீரோ, பிளாஸ்டிக் சேர், சைக்கிள், வெள்ளிக் காசு. ஒரு கிராம் தங்கக் காசு ஆகியவை மட்டுமே. ஒரு காளையை வளர்த்து சல்லிக்கட்டுக்கு அதைத் தயார் செய்வதற்கும், அதை சல்லிக்கட்டு நடக்குமிடத்திற்கு கொண்டு செல்வதற்கும் செலவிடப்படுப்படும் தொகை அதை விட 100 மடங்கு அதிகம்.
           

பிறகு எது சல்லிக்கட்டை நோக்கி நம்மை உந்துகிறது? மான உணர்வு, வீர உணர்வு, பண்பாட்டு உணர்வு, சமய உணர்வு... சல்லிக்கட்டு நமது பண்பாட்டு அடையாளம். வேறு எந்த விளையாட்டிற்கும் இவ்வளவு நீண்ட பண்பாட்டு அடையாளம் இல்லை. வேறு எந்த இனக் குழுவிற்கும் பண்பாட்டோடு இணைந்த இப்படிப்பட்ட விளையாட்டுக்கள் இல்லை. நமது பண்பாட்டு அடையாளங்களை காப்பதோடு அதனை மேலும் வீரியமாக முன்னெடுக்கும்போது நமது அடையாளம் அழிவிலிருந்து காக்கப்படும். இல்லையெனில் பொங்கலை மட்டும் கொண்டாடிக்கொண்டிருந்த நாம் ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போகியில் நமது அடையாளங்களை பழமையை கழித்து, எரிக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இழந்ததைப் போல மிச்சமிருக்கும் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். நாம் விவாதத்தில் வைத்திருப்பது நமது பண்பாட்டை... சிந்தியுங்கள்...

 பா.உதயக்குமார்...


நன்றி:
திரு.பா.ஆசைத்தம்பி,
தொல்லியல்துறை,
மதுரை.

படங்கள்: ஆகாஷ் அருண் - புதுடெல்லி,
                    அருண்பாஸ் - மதுரை,
                    குணா அமுதன் - மதுரை,
                    KK சுந்தர் - மதுரை.

Thursday, 19 December 2013

நெனப்பு வந்துச்சு அவனுக்கு – பாகம் 2...

மாமா இந்த வாட்டி பொங்கலுக்கு டிவியில என்ன படம் போடுவாங்க? ஏன்டா படம் பாக்குறத தவிர பொங்கலுக்கு வேற ஒன்னுமே ப்ளான் இல்லையாடா?
வேற என்ன பண்றது? கரும்ப தின்னுட்டு படம் பாக்க வேண்டியது தான்.
கேட்டதும் சுருக்குன்னுச்சு அவனுக்கு. அவன் மாமா, சித்தப்பாமாருங்க அவனுக்கு சொல்லிக்குடுத்த பொங்கல் கொண்டாட்டம் அவனோட முடிஞ்சு போனதையும், அவனும் அவன் ஜோட்டு பயலுகளும் அக்கக்கா அங்கங்க வெளியூருகளுக்கு வேலைக்குப் போனதால அவங்க மாமா, சித்தப்பாமாருங்க இளவட்டங்களா இருந்தப்போ செட்டு சேந்து நடத்துன இளைஞர் நற்பணி மன்றம் இன்னைக்கு இருந்த எடமும், இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு அப்டினா என்னன்ற தடமும் தெரியாம போனதுக்கும், அத இந்த பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தாம போனதையும் நினைக்கயில சுருக்குன்னுச்சு அவனுக்கு.

இவன் சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பொங்கல்னா எப்டியெல்லாம் இருக்கும்ன்ற நெனப்பு வந்துச்சு அவனுக்கு. தை பொங்கலுக்கு வீட்டு வாசல்ல கிழக்க பாத்து பொங்க வைக்க வேண்டி, மார்கழி மாசம் முழுக்க வாசல்ல அம்மா கூட சேந்து கோலம் போட்டு, கோலத்து நடுவுல சாணியில பிள்ளையார் புடிச்சு அதுக்கு நடுவால பூசணிப்பூ சொருகி வச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. நெதம் எங்கருந்தாச்சும் பூசணிப்பூ பரிச்சுட்டு வந்துர்றா, பூசணிப்பூ வச்சு கோலம் போட்டாத்தேன் வாசல்ல வச்சு பொங்க வெய்க்க முடியும்னு அவங்க அம்மா சொன்னதும், அதுக்காக வெள்ளன எந்திரிச்சு காடுகரை சுத்தி பூ பறிச்சுட்டு வந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

பொங்கலுக்கு மொதநா எரிக்கிறதுக்காகவே வீட்டுல இருக்கிற பழச பெறக்கி எடுத்து, வீட்டுக்கு வெள்ளையடிச்ச பெறகு படிக்கெல்லாம் வெள்ளையும், செகப்புமா கோடு போட்டு மறுநா பொங்கலுக்கு விடியமுன்ன எந்திரிச்சு குளிச்சு, அம்மா கூட சேந்து வாசல்ல நல்லா பெரிய கலர் கோலமா போட்டு அதுக்கு நடுவுல அடுப்ப கெழக்க பாத்து வச்சு சூரியன் உதிக்கிறப்போ கையெடுத்துக் கும்பிட்டு மஞ்சகெழங்கும் கூரப்பூவும் சுத்திக் கட்டுன மம்பானையில பொங்க வெச்சதும், பொங்க பொங்கி வரையில அம்மா கொலவ போட பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்னு சந்தோசமா கத்துனதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. கிண்டுன பொங்கல வாழஎலையில 5 தழுவு போட்டு ஐம்பூதங்களுக்கும் படச்ச பெறகு அப்டியே கழுவச்சோறு வாங்கித் தின்னதும், தொட்டுக்க பச்ச மொச்சயும், தேங்காச்சில்லும் தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. பெறகு தஞ்ஜோட்டு பசங்களோட சேந்து கரும்ப தின்னுட்டே ஊரு சுத்துனதும், கோயில்ல வரிகுடுத்ததுக்கு ஓலக்கொட்டான்ல குடுக்குற பொங்கலயும், கரும்பயும், அவங்க ஐயா பேரச் சொல்லி மைக்குல கூப்பிட்டு குடுக்குற துண்டயும் வாங்க காத்துக் கெடந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

இளைஞர் நற்பணி இயக்கத்துல இவங்க மாமா செயலாளரா இருந்ததும், பொங்கல் விளையாட்டுப் போட்டிக்கு அவங்க கூட சேந்து வசூல் பண்ணப் போகையில பனங்கெழங்கும், வேர்கல்லயும் வாங்கித் தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. பொங்கலன்னைக்கு காலையில ஓட்டப்பந்தயம், சுலோ சைக்கிள் ரேசு, சாக்கு ரேசு வச்சதும், ஓட்டப்பந்தயம் ஓடயில கால் வாரி கீழ விழுந்து முட்டி செரச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. சாயங்காலத்துல அவனுக்கு எப்பயுமே ரொம்பப் பிடிச்ச முட்டி ஒடைக்கிற போட்டி வெய்க்கிறதுக்கு முன்னால போய் மைக்ல அலோ மைக் டெஸ்டிங் 1 2 3 ன்னு பேசுறதும், அப்புறம் ரவியண்ணே “இன்னும் சற்று நேரத்தில் பழங்காநத்தம் மேலத்தெரு இளைஞர் நற்பணி இயக்கத்தின் சார்பாக பிள்ளையார் கோயில் திடலில் முட்டி உடைக்கும் போட்டி நடைபெற இருப்பதால் ஆங்காங்கே இருக்கும் பெரியோர்களும், தாய்மார்களும் போட்டி நடைபெற இருக்கும் இடத்திற்கு திரளாக வந்திருந்து போட்டியாளர்களை உற்சாகப் படுத்துமாறு விழாக் கமிட்டியாளர்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கண்ணக் கட்டுன பிறகும் நன்றாக கண் தெரியும் திறமையான இளைஞர்களும், அவர்களை ஊக்கப்படுத்த மொறையுள்ள தாவணி போட்ட பொண்ணுங்களும் கோவிலுக்கு அருகில் வரவும். கம்பத் தூக்கி முட்டிய அடிக்கிற தெம்பிருக்கும் ஆம்பளைகள் 2 ரூபாய் குடுத்து தங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளவும் னு அனவுன்ஸ் பண்ணவும், அத தொடர்ந்து ஜெகஜ்ஜோதியா நடக்குற முட்டி உடைக்குற போட்டியும், அதுல ஆளுக்கு ஒரு லெக்குல கம்பத் தூக்கிட்டு போறதயும், ஸ்டெப்பு கணக்கு பண்ணி, செருப்பில்லாம கால்ல மிதிக்கிற கல்லு அடையாளம் வச்சு அப்டி இப்டின்னு ஒவ்வொருத்தர் பண்ற பிரயத்தனத்தையும், ஆனாலும் அடிக்க மாட்டாம அவங்க கம்ப பெலக்க வீசையில அடுத்தாளு மேல படாம இருக்க ரெண்டு பேரு கூடவே கம்போட போய் அந்த கம்புட்ட அடிய தாங்குறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இப்டியே அடிக்க முடியாதவங்க மறுபடி மறுபடி ரீ என்ட்ரி கட்டி தோக்குறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. கடைசியில யாரோ ஒருத்தர் அடிக்க அவருக்கு பரிசா பெரிய பிளாஸ்டிக் வாளிய குடுத்துட்டு அவர ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு புகழ்ந்து அனுப்புறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

மறுநா அவங்க மாமாகூட சல்லிக்கட்டு பாக்க போகணும்னு நெனச்சுட்டே தூங்கப் போறதும், வெள்ளன எந்திரிச்சு போய் அவங்க மாமா அவன பத்தரமா சாரத்துல ஏத்தி விட்டுட்டு அவரு களத்துல நின்னுகிட்டு சல்லிக்கட்டு பாத்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இன்னைக்கு அவன் மாமா டிவியில சல்லிக்கட்டு பாக்குறதையும், அவரு மகன் சிறப்புநிகழ்ச்சி படம் போடச் சொல்லி அவரு கூட சண்டை போடுறதையும் நெனைக்கையில கண்ணீரு முட்டுச்சு அவனுக்கு. தனக்கு கெடச்ச சந்தோசத்த அடுத்த தலமொறைக்கு கடத்தாம பொழப்புக்காக அடகு வச்சத நெனைக்கையில நெஞ்சுக்குள்ள முள்ளு முள்ளா குத்துது அவனுக்கு.

இன்றல்ல
என்றும் அதே அன்புடன்,
பா.உதயக்குமார்.


Wednesday, 4 December 2013

நெனப்பு வந்துச்சு அவனுக்கு...

அப்பா நாளைக்கு போகி.
அதுக்கு?
ஊர்ல இருக்கும் போது நாம பழசெல்லாம் எடுத்து ஒதுங்க வச்சு, வேண்டாதத எரிச்சு, வெள்ளயடிச்சு, படியில கோலம் போட்டு, மறுநா புதுஅரிசி போட்டு பொங்கவச்சு கொண்டாடுவமே? இப்ப ஏம்பா கொண்டாடல?
ஆமாமா அது ஒண்ணு தான் கொறச்சலா இருக்கு? உள்ளதுக்கே இங்க வழியக் காணோம், இதுல போகி, பொங்கல்ன்னுட்டு. பேசாம இருக்கியா? சும்மா தொணதொணன்னுட்டு.
வெள்ளயடிக்க வக்கில்லாத வீட்டு முத்தத்த வெறிச்சுப் பாக்கயில ஊர்ல இதேமாதிரியொரு போகிக்கு முந்தய நாளோட ஏற்பாடுக நெனப்பு வந்துச்சு அவனுக்கு. காத்து வேகமா அடிக்கயில பன ஓலயில செஞ்ச முள்ளுக் காத்தாடியா சுத்தி சுத்தி வேலை பாத்தாக அய்யாவும் அப்பத்தாவும். அப்பாவும் அம்மாவுங்கூட ஏதேதோ வேலயா இருக்க வயக்காட்டு வரப்போரம் பேத்து எடுத்துட்டு வந்த களிமண்ண வச்சு மாட்டு வண்டியும், ஆட்டு உரலும் செஞ்சு வெளாண்டது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
ஊர்ல வீட்டு முத்தத்துல ஒக்கார வச்சு அய்யா சொன்ன, பெண்ணே பூச்செண்டு தா, பெண்ணே பூச்செண்டு தான்னு ராசாமகன் கேக்குற அண்ட்ரெண்ட பட்சி கத, அப்புறம்,
           மாடுகட்டி போரடிச்சா மாளாதுன்னு
           ஆனகட்டி போரடிச்ச மருத நம்ம ஊரு,
           கட்டுக்கு களங்காணும்
           கதிர் உலக்கு நெல் காணும்
           புட்டுக்கு மண் சுமந்து
           பிரம்படி தான் பட்டவரு
           சொக்கநாதர் அவர் பேரு
           மருதயாளும் மன்னவருன்னு ஆரம்பிச்சு குட்டிமேகம் ஒன்னுக்கு பேஞ்சு வைகையில வெள்ளம் வந்த கதன்னு, கத கதயா நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
தஞ்சோட்டுப் பயலுகளோட சேந்து பாட்டி பாட்டி ஒண்ணுக்கு, சீனி பாப்பா சீனி, ஒரு கொடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்தாச்சுன்னு வெளாண்ட ஒவ்வொரு வெளாட்டும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
சிகரெட் அட்டயில கூண்டு செஞ்சு பொன்வண்டு புடிச்சதும், கண்ணாடி சீசாவுல மின்மினிப்பூச்சி புடிச்சதும், மூக்குத்தி செடியில அமுக்கி பாப்பாத்தி புடிச்சதும், முள்ளுச்செடியில நிக்குற தட்டான் புடிச்சதும், கவட்ட வச்சு குருவி அடிச்சதும், கொக்கி போட்டு ஓணான் புடிச்சதும், அதுக்கு மூக்குப் பொடி போட்டு ஆட வச்சதும், சகதிக்குள்ள பொரண்டு மீன் புடிச்சதும், செவக்காட்டுல போய் பனங்கா பறிச்சதும், கம்மா ஓரத்துல எலந்தபழம் பறிச்சதும், அரசமர எலயில பீபீ செஞ்சு ஊதுனதும், ஆலமர விழுதுல ஊஞ்சல் ஆடி நீராவில விழுந்து குளிச்சதும், செங்க - மண்ணு வச்சு வீடு, கோயில் கட்டி கூட்டாஞ்சோறு சமச்சதும், சுடுகா ஒரசி தொடயில சூடு வச்சதும், வேப்பங்கொட்ட ஒடச்சி வெரலு மொட்டியில வச்சு அடிக்கயில ரத்தம் வந்ததும், அப்பத்தாவோட உக்காந்து தாயம் வெளாண்ட்தும், அது குடுக்குற பருத்தி வாங்கி கடயில போட்டு சேவு தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
வயக்காட்டுல கருதடிச்சு கட்டு சுமந்து போகயில சிந்தி விழுகிற மிச்சம் பொறுக்கி படி நெல்லு சேத்ததும், கரும்பு அறுத்து ஆலைக்குப் போற வழியில இருக்க கரண்டு கம்பிய தொரட்டி வச்சு தூக்கும்போது நின்னு போற வண்டியில கரும்பு உருவிட்டு ஓடுனதும், வாழமரம் அறுத்து வண்டி கட்டி போகயில ஓடிப்போயி கால்ல மிதிச்சு கிழிச்சு வெளாண்டதும், தென்ன ஓல பறிச்சு வந்து பாம்பு செஞ்சு வெளாண்டதும், ஆடிப் பட்டத்துல அய்யா வெதைக்க, அந்நேரம் காத்தாடி செஞ்சு பறக்க விட்டதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அப்புறம் கொஞ்ச நாச் செண்டு மழையில்லாம வறண்ட நெலத்த பாக்க புடிக்காம ஒழவுமாட்ட வித்து வயக்காட்டுக்கு மோட்டர் தண்ணி பாச்சுன அய்யா போட்ட நெல்லு சாவியானத பாக்க பொறுக்காம மாரடச்சு செத்துப் போனதும், அவர பொதச்ச புல்லுமேட்டுல ஊர்நாய் ஒருகாலத் தூக்கி ஒண்ணுக்கடிச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அய்யா செத்தபொறவு, மேக்கதிர் வீட்டுக்கு – நடுக்கதிர் மாட்டுக்கு – அடிக்கதிர் காட்டுக்குன்னு சொல்லிக்குடுத்த அப்பத்தா சீமையிலயிருந்து வந்த மிசினு அறுத்துப் போட்ட வைக்கல மாடு திங்காம திரிஞ்சதயும், அடுத்தடுத்த வருசம் வீட்டுக்கும் வராம கூடிக்கூடிப் பிரிஞ்சு வேகமெடுத்துப் பறக்குற ஊர்க்குருவி திங்கவும் ஒண்ணுமில்லாமப் போனதயும் நெனச்சு நெனச்சு அழுது ஒடஞ்சது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
கடசியில சேத்துப்புண்ணா வெடிச்சுக் கெடந்த செவக்காட்டுல வெயிலு பொறுக்காம தள்ளாடி விழுந்த அப்பத்தா செதுப்போனதா சேதி வந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.
அய்யாவுக்குப் பொறவு அப்பத்தாவும், அதோட சேத்து ஊர்ல அவக இருந்த வீடும், நெலமும், வெவசாயமும், வாழ்ந்த வாழ்க்கயும் செத்துப் போனதும் ஒவ்வொரு பொங்கலுக்கும் எப்பவும் நெனப்புலயே இருக்கு அவனுக்கு...