மதுரச்சுவை...

2. ஹயத்கான் ரோடு லெட்சுமிகிருஷ்ணா ரோஸ்மில்க்...

மதுரை பெரியார்-திருவள்ளுவர் பேருந்து நிலையம் எதிரே 4ம் நம்பர் ரோட்டுக்கு செல்ல திரும்பும் ரோடான பூக்கடைகள் நிறைந்திருக்கும் ஹாயத்கான் ரோட்டில், காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டின் வெளிப்புறத்தில் KPN - மதுரை ராதா டிராவல்ஸ் எதிரே இருக்கிறது லட்சுமிகிருஷ்ணா பால் மற்றும் டீக்கடை. (இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட்டே காணாமல் போகையில் இந்த பூக்கடைகள், ட்ராவல்ஸ் ஏன் லெட்சுமி கிருஷ்ணா கடையும் கூட காணாமல் போகலாம்).

பால்கோவா, பன்னீர், மாலை வேளையில் சூடான பாதாம் பால் என இக்கடையில் பால் பொருட்கள் பிரசித்தி பெற்றாலும் இதன் தனிச்சிறப்பு 24 மணி நேரமும் கிடைக்கும் ரோஸ்மில்க்...

மதுரையில் வேறு எங்குமே இதற்கு ஈடான சுவையில் நீங்கள் ரோஸ்மில்க் சுவைத்திருக்க முடியாது. இதன் மதுரமான சுவையை உணர உகந்த நேரம் நள்ளிரவு 1 - 2 மணி. இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வரும்போதோ, வெளியூர் பயணம் போகும் போதோ அல்லது போய்விட்டு அந்நேரத்தில் திரும்பி வரும் போதோ அப்படியே ஒரு யு டர்ன் போட்டு ரோஸ்மில்க் பருகி வரலாம்.

நிசியில் தூங்காநகரம் தூரிகை பிடித்து தன் நிர்வாணத்தை வரைந்து கொண்டிருக்கும் அந்த ஏகாந்த வேளையில் நீங்கள் ரோஸ்மில்க்கில் சில மிடறுகள் விழுங்கிக்கொண்டே மதுரையின் நிர்வாண அழகில் மயங்கி கிறங்கிக் கிடக்கலாம்.

தமிழ்ச்சங்கம் ரோடு இளநீர் சர்பத், கீழவாசல் பேமஸ் ஜிகர்தண்டா மற்றும் அம்சவல்லி ப்ரூட் மிச்சர், காந்தி மியூசியம் ரோடு மாப்பிள்ளை விநாயகர் இஞ்சி-புதினா சோடாவைப் போல் ஹாயத்கான் ரோடு  லட்சுமிகிருஷ்ணாரோஸ்மில்க்கும் மதுரையின் மற்றுமொரு குளிர்ச்சுவை அடையாளம்.

#சியர்ஸ்...

17/06/2021


1. யானைக்கால் ஆசீர்வாதம் கடை வடை...

போண்டாவில் உதித்து வடையில் மறைகிறது மதுரை சூரியன்... 

 வடைக்கும் மதுரைக்குமான பிணைப்பு வார்த்தையில் வடிக்க முடியாதது. பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் KPS, கூடலழகர் கோயில் சௌராஷ்டிரா கடை, கோரிப்பாளையம் விசாலம், தானப்ப முதலி தெரு திரும்பியதும் மீனாட்சி காபி பார், மேலப்பட்டமார் தெரு அய்யர் கடை, மூன்றுமாவடி PTR மற்றும் இன்னும் அந்தந்த பகுதிகளில் பெயர் தெரியாமல் இருக்கும் வடை ஸ்பெஷல் கடைகளை பட்டியலிட்டால் 2-3 டஜன் தேறும். தள்ளுவண்டிகளில் விற்கும் கீரைவடை தனி அயிட்டம். 

கேரம் போர்டில் 19 காய்கள் இருந்தாலும் சிகப்பிற்கு தனி மவுசு இருப்பதைப் போல் இத்தனை கடைகளிலும் தனி மவுசான வடைக் கடை யானைக்கல் ஆசிர்வாதம் வடைக்கடை. இனிப்பில் ஈ மொய்ப்பதைப் போல மதுரைச் சனம் இந்த கடை வடையில் மொய்க்கிறது. தினந்தோறும் குறைந்தது 5000 வடைகளாவது விற்கும் என்பது எனது கணிப்பு (மதுரையில் தினமும் மொத்தம் லட்சம் வடைகள் அழியலாம்). நாவில் இட்டதும் கரையும் பஞ்சு போன்ற மிருதுவான தன்மை இதன் தனித்த அடையாளம். 

மதுரையில் இருந்து கொண்டு நீங்கள் இதுவரை ஆசிர்வாதம் கடை வடை சுவைத்திருக்காவிடில் ஒன்று முற்பிறவியில் ஏதோ பாவம் செய்திருக்கிறீர்கள் அல்லது இப்பிறவியில் உங்களுக்கு மோட்சம் கிட்டாமல் போகலாம்...

 17/06/2021

No comments:

Post a Comment