Showing posts with label culture. Show all posts
Showing posts with label culture. Show all posts

Sunday, 6 September 2015

கீழடி - மதுரையின் தாளடி... (GW - 51)

அடைமழை விட்டதும் செடிமழை என்பார்கள். ஆனால் இன்னும் அடைமழையே விட்டபாடில்லை. ஆம், கீழக்குயில்குடி ஆலமரத்தடி பெருவிழாவில் தொடங்கிய இன்னீர் மன்றல் உற்சாகம், புத்தகத் திருவிழாவில் நீட்சி பெற்று, கீழடியில் புதைந்து கிடக்கும் வைகை மண்ணின் வரலாற்றை கண்டபொழுது இரட்டிப்பாகியிருந்தது.


வைகை தவழ்ந்து வரும் பாண்டிய நாட்டுப் பெருவழியில் குமைந்து கிடக்கிறது அகிலம். பாண்டிய நாட்டின் எல்லைகளைத் தேடினால் அது ரோமாபுரி வரை நீண்டு கிடக்கிறது. உலக நாகரிகத்தின் ஆதி நகரங்கள் வைகையில் நீராடிய பின்னரே வரலாற்றில் முழுமை அடைந்திருக்கின்றன. உலகின் ஆதி மொழியான தமிழோ, நாகரிக வாழ்வின் தொடக்கமோ எதுவாயினும் மதுரை மண்ணில் புரண்டெழுந்த பின்பே அங்கீகரிக்கபட்டிருக்கிறது.

இவ்வாறான வரலாற்றுப் பெருமையை தாங்கி நிற்கும் மதுரையை மகுடமாய் தலையில் சூட்டிக்கொள்ளும் மண்ணின் மைந்தர்களுக்கு மேலும் கணம் சேர்க்கும் விதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கீழடி அகழாய்வு.


கீழடி நோக்கிய பசுமைநடையின் பயணம் உண்மையில் ஒரு வரலாற்றுப் பயணம். பசுமைநடை வரலாற்றில் விழாக்கள் தவிர்த்த மற்ற நடைகளில் ஏறக்குறைய 500 நபர்கள் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. கைக்குழந்தைகள் தொட்டு கம்பூன்றி நடக்கும் தாத்தாக்கள் வரை குடும்பங்களாக கலந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வு, அதிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கெல்லாம் கூடிய அர்ப்பணிப்பு என பொது வெளியில் இயங்குபவர்கள் நம்பமுடியாத அளவிற்கு மக்களின் பங்களிப்பை, அன்பைப் பெற்றிருக்கிறது பசுமை நடை.


எப்போதும் போல் இல்லை இந்த நடை. இன்னீர் மன்றல் தந்த ஆச்சர்ய அனுபவம், புது நபர்களுக்கு புத்தகத் திருவிழாவில் கிடைத்த விளக்கம், கீழடி அகழாய்வு குறித்து ஊடகங்கள் பகிர்ந்த செய்திகள் என கலந்துகட்டிய உற்சாகம் பார்வையாளர்களை பெருந்திரளாக கொண்டுவந்து சேர்த்திருந்தது. மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கே இருக்கும் மருதிருவர் சிலையை ஒட்டிய பகுதியில் ஒரு திருவிழாக் கூட்டம் திரள ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு பசுமைநடைக்கு வந்திருக்கும் வாகனங்களை நிறுத்த முடியாத அளவிற்கு இட நெருக்கடி. அதனால் அங்கிருந்து கிளம்பிய நடை மேற்கே நேர் வழியில் செல்லாது வடக்கே திரும்பி தெப்பக்குளக் கரையோரம் ஒருசேர பயணித்து மீண்டும் இராமநாதபுர முக்கிய சாலையை தொட்டு பயணித்தது. சாலையில் ஒருசேர சென்ற வாகன அணிவகுப்பு ஒரு ஊர்வலத்தின் தோற்றம் தந்து சிலமானை அடைந்தது.


சிலைமானில் இருந்து வலதுபுறம் கீழடியை நோக்கி திரும்பியவுடன் பசுமைநடை பயணம், நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கிய காலப்பயணமாய் பரிணாமம் அடைந்தது.  அதுவரையில் 2015 ல் பயணித்த மனதும் உணர்வும், தூரத்தில் எங்கேயோ ஸ்பீக்கர் குழாய்களில் ஒலித்த டி.ஆரின் மெஸ்மெரிச பாடல்களில் லயித்து 80 களுக்கு மடைமாற்றம் அடைந்தது.. பயணித்துக் கொண்டிருக்கையில் தெரியவில்லை இந்த பயணச் சக்கரம் காலச் சக்கரத்தில் என்னை/எங்களை பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறதென்று. வெளிவட்ட சாலை குறுகி, தார்சாலை ஊர்சாலையாக பரிணமித்து, ஊர்சாலை ஒற்றையடி பாதையாக மாறி திடீரென ஒரு தோப்பில் விஸ்தரிக்கும் பொழுது நம் முன் தெரிந்தது 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்று நகரம்.


ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு வனம் தாண்டி இருக்கும் நகரமும் அங்கு உயிர் வாழும் அழகிய இளவரசியோ, கிளியோ, அதில் இருக்கும் மந்திரவாதியின் உயிரோ எதுவோ, சிறுவயதில் நான் படித்த மாயஜால கதைகளிலெல்லாம் தவறாமல் இடம்பிடிக்கும் வர்ணனை இது. கீழடி அகழாய்வில் மீண்டெழுந்த புதைநகரை பார்த்த கணத்தில் அந்த மாயஜால வர்ணனை மிகுந்த நகரை பார்த்த உணர்வு. அனால் இங்கு இளவரசிகளோ, மந்திரவாதிகளோ வாழ்ந்து மறைந்திருக்கவில்லை. இங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகளெல்லாம் எளிய மனிதர்களின் வாழ்க்கை முறையை சித்தரிப்பவை. அவர்கள் எல்லோரும் மன்னர்களாய், இளவரசர்களாய், ராணிகளாய், இளவரசிகளாய் வாழ்ந்திருந்திருக்கலாம். அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டமைக்கப்பட்டிருந்த நாகரிகமான நகரம் மதுரை. தோண்டத்தோண்ட இங்கு கிடைத்தவையெல்லாம் புதையல்கள் அல்ல அதிசயங்கள். அதுவரையிலான வரலாற்றை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடக்கூடிய அற்புதங்கள்.


அரிசி புடைத்துக்கொண்டிருந்த கிழவி கோழியை விரட்ட தங்கத் தண்டட்டியைக் கழட்டி எறிந்த தமிழர்களின் செழிப்பான வரலாற்றுக் கதையை மெய்ப்பிக்கும் விதமாக கிடைத்த தந்தத்திலான தாயக்கட்டைகள் இந்த அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்திற்கு ஒரு பானை சோறு. மதுரை தமிழகத்தின் வரலாற்றுத் தலைநகரம் என்பது உலகறிந்ததே. ஆனால் வைகை தமிழக நாகரித்தின் தொட்டில் என்பதை கீழடி அகழாய்வு ஆணித்தரமாக பதிவு செய்கிறது.


டார்வினின் கூற்றுப்படி விவாதிப்போமேயானால் உலகத்தின் மற்ற பகுதிகளில் குரங்குகள் முழு பரிணாம வளர்ச்சியை எட்டும் முன்னரே ஆதித் தமிழகமான லெமூரியா கண்டத்தில் மனிதர்கள் எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தனர். கிறித்தவமும், இசுலாமும் நம்பும் கூற்றுப்படி சிந்திப்போமேயானால், இராமேஸ்வரம்-இலங்கை இடையிலான கடற்கரையில் சேதுகால்வாய் திட்டத்திற்காக தோண்டி ஆழப்படுத்தும் இராமர் பாலம் என்கிற மணற்திட்டு ஆங்கிலத்தில் உலகின் முதல் மனிதனான ஆதமின் பெயராலேயே (Adam Bridge) வழங்கப்பட்டு வருகிறது. தமிழகமே ஒரு வரலாற்றுப் புதையல். மதுரை அதன் பொக்கிஷம். உலகின் மற்ற மூலைகளில் மனிதர்கள் வேட்டையாடித் திரிந்த போது இங்கு விவசாயம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆடையின்றி உலவும் போது இங்கு அணிகலன்கள் வடிவம் பெற்றிருந்தன. அவர்கள் ஓய்வு குறித்து சிந்திக்கும் போது இங்கு செங்கல் கட்டிடங்கள் எழும்பியிருந்தன. அவர்கள் எழுதப் பழகும் முன்னரே இங்கு இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தன.


கீழடி அகழாய்வு நமக்கு அக்கால மதுரை மக்கள் தேர்ந்த நாகரிகத்தோடு, ஒரு ஒழுங்கமைவில் எத்துனை செழிப்பாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒருபுறம் காதுகளில் தங்கத் தண்டட்டிகள் ஆட, அழகிய வேலைப்பாடுகளோடு கூடிய தந்தத்திலான தாயக்கட்டைகள் கொண்டு கிழவிகள் தாயம் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் ரோமபுரி ராணியும் அணிய ஏங்கும் வெண்முத்தாலான பாசிகளை தங்கள் சங்குக்கழுத்தில் அணிந்த கன்னிப்பெண்கள் மலரினும் மெல்லிய தங்கள் வெள்ளி விரல்களால் சொட்டாங்கல்லுக்குப் பதில் தங்கக் கட்டிகளை வைத்து விளையாடியிருந்திருக்கின்றனர். சுட்ட செங்கற்கள் வீடுகள், உலோகப்பானைகளில் உணவு, பசியும் பட்டினியும் கனவு என வாழ்ந்திருக்கின்றனர். சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் என இந்த அகழாய்வில் கிடைத்ததெல்லாம் நம் செழிப்பான வரலாறு.


கீழடி, மற்ற பசுமைநடைகளில் இருந்து சற்று வேறுபட்டது. இம்முறை மலையேற்றம் இல்லை, பக்தி உணர்வைத் தரும் கோயில்கள் இல்லை, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் இல்லை. ஒரு தென்னந்தோப்பும், நாலு டெண்ட்டுகளும், தோண்டப்பட்ட நாற்பது குழிகளும் மட்டுமே. ஆனால் இந்த நடை பசுமைநடையின் வரலாற்றில் ஒரு மைல்கல். பிறந்து இன்னும் நடை பழகாத குழந்தையிலிருந்து, கம்பூன்றி நடக்கும் முதியவர்வரை, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஒரு மாநாட்டுக் கூட்டம் கலந்து கொண்ட நடை இது. எத்தனை பேர் வந்தாலும் தெளிவான திட்டமிடுதலுடன், நேர்த்தியாக கையாண்ட விதம் வியப்பிற்குரியது. அதற்கு பசுமைநடையின் மிகப்பெரும் திருவிழாக்களும் அதில் கிடைத்த அனுபவப் புரிதல்களும் பக்கபலமாக இருந்தன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதற்கு பங்கேற்பாளர்களும், அவர்கள் பசுமைநடையில் கடைபிடிக்கும் சீரிய ஒழுங்கும் மிக அடிப்படையான காரணங்கள். பசுமைநடையின் ஸ்திரத்தன்மைக்கும் அதுவே காரணம்.



வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்கள். மதுரையும் அப்படி ஒரு வாழ்ந்து கெட்ட நகரமாகிப் போனது. ஆதியில் இருந்ததில் பாதி கூட இல்லை இப்போது. கீழடி வெளிக்கொணர்ந்திருப்பது நம் மிச்சம் மீதி வரலாறு. பதிவு செய்யப்படாததாலும், பாதுகாக்கப்படாததாலும் மண் மூடிப்போன வரலாற்றை மீட்டெடுத்து உயிர்ப்போடு இயங்க ஆவன செய்கிறது பசுமைநடை. பசுமைநடை பதிவு செய்து கொண்டிருப்பது ஆவணங்களை அல்ல வரலாற்றை. இம்மாதிரியான வரலாற்றை தெரியப்படுத்தி, என்னை, எனது வரலாற்றுப் பெருமையை உணரச் செய்து, உலகின் முன் கர்வத்தோடு பெருமிதமாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள உற்ற காரணமாய் இருக்கும் பசுமை நடைக்கு உளமார்ந்த நன்றிகள்.   
---
பா.உதயக்குமார்...
---
படங்கள்: அருண் பாஸ் மற்றும் ஆனந்த்...

Thursday, 19 December 2013

நெனப்பு வந்துச்சு அவனுக்கு – பாகம் 2...

மாமா இந்த வாட்டி பொங்கலுக்கு டிவியில என்ன படம் போடுவாங்க? ஏன்டா படம் பாக்குறத தவிர பொங்கலுக்கு வேற ஒன்னுமே ப்ளான் இல்லையாடா?
வேற என்ன பண்றது? கரும்ப தின்னுட்டு படம் பாக்க வேண்டியது தான்.
கேட்டதும் சுருக்குன்னுச்சு அவனுக்கு. அவன் மாமா, சித்தப்பாமாருங்க அவனுக்கு சொல்லிக்குடுத்த பொங்கல் கொண்டாட்டம் அவனோட முடிஞ்சு போனதையும், அவனும் அவன் ஜோட்டு பயலுகளும் அக்கக்கா அங்கங்க வெளியூருகளுக்கு வேலைக்குப் போனதால அவங்க மாமா, சித்தப்பாமாருங்க இளவட்டங்களா இருந்தப்போ செட்டு சேந்து நடத்துன இளைஞர் நற்பணி மன்றம் இன்னைக்கு இருந்த எடமும், இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு அப்டினா என்னன்ற தடமும் தெரியாம போனதுக்கும், அத இந்த பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தாம போனதையும் நினைக்கயில சுருக்குன்னுச்சு அவனுக்கு.

இவன் சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பொங்கல்னா எப்டியெல்லாம் இருக்கும்ன்ற நெனப்பு வந்துச்சு அவனுக்கு. தை பொங்கலுக்கு வீட்டு வாசல்ல கிழக்க பாத்து பொங்க வைக்க வேண்டி, மார்கழி மாசம் முழுக்க வாசல்ல அம்மா கூட சேந்து கோலம் போட்டு, கோலத்து நடுவுல சாணியில பிள்ளையார் புடிச்சு அதுக்கு நடுவால பூசணிப்பூ சொருகி வச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. நெதம் எங்கருந்தாச்சும் பூசணிப்பூ பரிச்சுட்டு வந்துர்றா, பூசணிப்பூ வச்சு கோலம் போட்டாத்தேன் வாசல்ல வச்சு பொங்க வெய்க்க முடியும்னு அவங்க அம்மா சொன்னதும், அதுக்காக வெள்ளன எந்திரிச்சு காடுகரை சுத்தி பூ பறிச்சுட்டு வந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

பொங்கலுக்கு மொதநா எரிக்கிறதுக்காகவே வீட்டுல இருக்கிற பழச பெறக்கி எடுத்து, வீட்டுக்கு வெள்ளையடிச்ச பெறகு படிக்கெல்லாம் வெள்ளையும், செகப்புமா கோடு போட்டு மறுநா பொங்கலுக்கு விடியமுன்ன எந்திரிச்சு குளிச்சு, அம்மா கூட சேந்து வாசல்ல நல்லா பெரிய கலர் கோலமா போட்டு அதுக்கு நடுவுல அடுப்ப கெழக்க பாத்து வச்சு சூரியன் உதிக்கிறப்போ கையெடுத்துக் கும்பிட்டு மஞ்சகெழங்கும் கூரப்பூவும் சுத்திக் கட்டுன மம்பானையில பொங்க வெச்சதும், பொங்க பொங்கி வரையில அம்மா கொலவ போட பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்னு சந்தோசமா கத்துனதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. கிண்டுன பொங்கல வாழஎலையில 5 தழுவு போட்டு ஐம்பூதங்களுக்கும் படச்ச பெறகு அப்டியே கழுவச்சோறு வாங்கித் தின்னதும், தொட்டுக்க பச்ச மொச்சயும், தேங்காச்சில்லும் தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. பெறகு தஞ்ஜோட்டு பசங்களோட சேந்து கரும்ப தின்னுட்டே ஊரு சுத்துனதும், கோயில்ல வரிகுடுத்ததுக்கு ஓலக்கொட்டான்ல குடுக்குற பொங்கலயும், கரும்பயும், அவங்க ஐயா பேரச் சொல்லி மைக்குல கூப்பிட்டு குடுக்குற துண்டயும் வாங்க காத்துக் கெடந்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

இளைஞர் நற்பணி இயக்கத்துல இவங்க மாமா செயலாளரா இருந்ததும், பொங்கல் விளையாட்டுப் போட்டிக்கு அவங்க கூட சேந்து வசூல் பண்ணப் போகையில பனங்கெழங்கும், வேர்கல்லயும் வாங்கித் தின்னதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. பொங்கலன்னைக்கு காலையில ஓட்டப்பந்தயம், சுலோ சைக்கிள் ரேசு, சாக்கு ரேசு வச்சதும், ஓட்டப்பந்தயம் ஓடயில கால் வாரி கீழ விழுந்து முட்டி செரச்சதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. சாயங்காலத்துல அவனுக்கு எப்பயுமே ரொம்பப் பிடிச்ச முட்டி ஒடைக்கிற போட்டி வெய்க்கிறதுக்கு முன்னால போய் மைக்ல அலோ மைக் டெஸ்டிங் 1 2 3 ன்னு பேசுறதும், அப்புறம் ரவியண்ணே “இன்னும் சற்று நேரத்தில் பழங்காநத்தம் மேலத்தெரு இளைஞர் நற்பணி இயக்கத்தின் சார்பாக பிள்ளையார் கோயில் திடலில் முட்டி உடைக்கும் போட்டி நடைபெற இருப்பதால் ஆங்காங்கே இருக்கும் பெரியோர்களும், தாய்மார்களும் போட்டி நடைபெற இருக்கும் இடத்திற்கு திரளாக வந்திருந்து போட்டியாளர்களை உற்சாகப் படுத்துமாறு விழாக் கமிட்டியாளர்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கண்ணக் கட்டுன பிறகும் நன்றாக கண் தெரியும் திறமையான இளைஞர்களும், அவர்களை ஊக்கப்படுத்த மொறையுள்ள தாவணி போட்ட பொண்ணுங்களும் கோவிலுக்கு அருகில் வரவும். கம்பத் தூக்கி முட்டிய அடிக்கிற தெம்பிருக்கும் ஆம்பளைகள் 2 ரூபாய் குடுத்து தங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளவும் னு அனவுன்ஸ் பண்ணவும், அத தொடர்ந்து ஜெகஜ்ஜோதியா நடக்குற முட்டி உடைக்குற போட்டியும், அதுல ஆளுக்கு ஒரு லெக்குல கம்பத் தூக்கிட்டு போறதயும், ஸ்டெப்பு கணக்கு பண்ணி, செருப்பில்லாம கால்ல மிதிக்கிற கல்லு அடையாளம் வச்சு அப்டி இப்டின்னு ஒவ்வொருத்தர் பண்ற பிரயத்தனத்தையும், ஆனாலும் அடிக்க மாட்டாம அவங்க கம்ப பெலக்க வீசையில அடுத்தாளு மேல படாம இருக்க ரெண்டு பேரு கூடவே கம்போட போய் அந்த கம்புட்ட அடிய தாங்குறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இப்டியே அடிக்க முடியாதவங்க மறுபடி மறுபடி ரீ என்ட்ரி கட்டி தோக்குறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. கடைசியில யாரோ ஒருத்தர் அடிக்க அவருக்கு பரிசா பெரிய பிளாஸ்டிக் வாளிய குடுத்துட்டு அவர ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு புகழ்ந்து அனுப்புறதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.

மறுநா அவங்க மாமாகூட சல்லிக்கட்டு பாக்க போகணும்னு நெனச்சுட்டே தூங்கப் போறதும், வெள்ளன எந்திரிச்சு போய் அவங்க மாமா அவன பத்தரமா சாரத்துல ஏத்தி விட்டுட்டு அவரு களத்துல நின்னுகிட்டு சல்லிக்கட்டு பாத்ததும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இன்னைக்கு அவன் மாமா டிவியில சல்லிக்கட்டு பாக்குறதையும், அவரு மகன் சிறப்புநிகழ்ச்சி படம் போடச் சொல்லி அவரு கூட சண்டை போடுறதையும் நெனைக்கையில கண்ணீரு முட்டுச்சு அவனுக்கு. தனக்கு கெடச்ச சந்தோசத்த அடுத்த தலமொறைக்கு கடத்தாம பொழப்புக்காக அடகு வச்சத நெனைக்கையில நெஞ்சுக்குள்ள முள்ளு முள்ளா குத்துது அவனுக்கு.

இன்றல்ல
என்றும் அதே அன்புடன்,
பா.உதயக்குமார்.


Monday, 16 September 2013

வணக்கம்...

மீனாட்சி பட்டணம் -


தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகராம் மதுரையின் கலாச்சாரத்தையும் அதன் பின்புலத்தையும் தேடிச் சென்று தொகுக்கும் ஒரு சாதாரணனின் முயற்சி... 

நமது பழக்கவழக்கங்கள், சடங்குகள் என கூடுமானவரை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் முயற்சி. "மதுரையைச் சுற்றிய கழுதையும் வேற ஊர் தங்காது" என்றொரு சொலவடை உண்டு. இது மதுரையைச் சுற்றும் கழுதையின் அனுபவம். மதுரையை சுற்ற விரும்பும் கழுதைகளுக்கான களம்...

தங்களது மேலான ஆதரவுகளுடன்...

பா.உதயக்குமார்...