Sunday 6 September 2015

கீழடி - மதுரையின் தாளடி... (GW - 51)

அடைமழை விட்டதும் செடிமழை என்பார்கள். ஆனால் இன்னும் அடைமழையே விட்டபாடில்லை. ஆம், கீழக்குயில்குடி ஆலமரத்தடி பெருவிழாவில் தொடங்கிய இன்னீர் மன்றல் உற்சாகம், புத்தகத் திருவிழாவில் நீட்சி பெற்று, கீழடியில் புதைந்து கிடக்கும் வைகை மண்ணின் வரலாற்றை கண்டபொழுது இரட்டிப்பாகியிருந்தது.


வைகை தவழ்ந்து வரும் பாண்டிய நாட்டுப் பெருவழியில் குமைந்து கிடக்கிறது அகிலம். பாண்டிய நாட்டின் எல்லைகளைத் தேடினால் அது ரோமாபுரி வரை நீண்டு கிடக்கிறது. உலக நாகரிகத்தின் ஆதி நகரங்கள் வைகையில் நீராடிய பின்னரே வரலாற்றில் முழுமை அடைந்திருக்கின்றன. உலகின் ஆதி மொழியான தமிழோ, நாகரிக வாழ்வின் தொடக்கமோ எதுவாயினும் மதுரை மண்ணில் புரண்டெழுந்த பின்பே அங்கீகரிக்கபட்டிருக்கிறது.

இவ்வாறான வரலாற்றுப் பெருமையை தாங்கி நிற்கும் மதுரையை மகுடமாய் தலையில் சூட்டிக்கொள்ளும் மண்ணின் மைந்தர்களுக்கு மேலும் கணம் சேர்க்கும் விதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கீழடி அகழாய்வு.


கீழடி நோக்கிய பசுமைநடையின் பயணம் உண்மையில் ஒரு வரலாற்றுப் பயணம். பசுமைநடை வரலாற்றில் விழாக்கள் தவிர்த்த மற்ற நடைகளில் ஏறக்குறைய 500 நபர்கள் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. கைக்குழந்தைகள் தொட்டு கம்பூன்றி நடக்கும் தாத்தாக்கள் வரை குடும்பங்களாக கலந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வு, அதிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கெல்லாம் கூடிய அர்ப்பணிப்பு என பொது வெளியில் இயங்குபவர்கள் நம்பமுடியாத அளவிற்கு மக்களின் பங்களிப்பை, அன்பைப் பெற்றிருக்கிறது பசுமை நடை.


எப்போதும் போல் இல்லை இந்த நடை. இன்னீர் மன்றல் தந்த ஆச்சர்ய அனுபவம், புது நபர்களுக்கு புத்தகத் திருவிழாவில் கிடைத்த விளக்கம், கீழடி அகழாய்வு குறித்து ஊடகங்கள் பகிர்ந்த செய்திகள் என கலந்துகட்டிய உற்சாகம் பார்வையாளர்களை பெருந்திரளாக கொண்டுவந்து சேர்த்திருந்தது. மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கே இருக்கும் மருதிருவர் சிலையை ஒட்டிய பகுதியில் ஒரு திருவிழாக் கூட்டம் திரள ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு பசுமைநடைக்கு வந்திருக்கும் வாகனங்களை நிறுத்த முடியாத அளவிற்கு இட நெருக்கடி. அதனால் அங்கிருந்து கிளம்பிய நடை மேற்கே நேர் வழியில் செல்லாது வடக்கே திரும்பி தெப்பக்குளக் கரையோரம் ஒருசேர பயணித்து மீண்டும் இராமநாதபுர முக்கிய சாலையை தொட்டு பயணித்தது. சாலையில் ஒருசேர சென்ற வாகன அணிவகுப்பு ஒரு ஊர்வலத்தின் தோற்றம் தந்து சிலமானை அடைந்தது.


சிலைமானில் இருந்து வலதுபுறம் கீழடியை நோக்கி திரும்பியவுடன் பசுமைநடை பயணம், நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கிய காலப்பயணமாய் பரிணாமம் அடைந்தது.  அதுவரையில் 2015 ல் பயணித்த மனதும் உணர்வும், தூரத்தில் எங்கேயோ ஸ்பீக்கர் குழாய்களில் ஒலித்த டி.ஆரின் மெஸ்மெரிச பாடல்களில் லயித்து 80 களுக்கு மடைமாற்றம் அடைந்தது.. பயணித்துக் கொண்டிருக்கையில் தெரியவில்லை இந்த பயணச் சக்கரம் காலச் சக்கரத்தில் என்னை/எங்களை பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறதென்று. வெளிவட்ட சாலை குறுகி, தார்சாலை ஊர்சாலையாக பரிணமித்து, ஊர்சாலை ஒற்றையடி பாதையாக மாறி திடீரென ஒரு தோப்பில் விஸ்தரிக்கும் பொழுது நம் முன் தெரிந்தது 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்று நகரம்.


ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு வனம் தாண்டி இருக்கும் நகரமும் அங்கு உயிர் வாழும் அழகிய இளவரசியோ, கிளியோ, அதில் இருக்கும் மந்திரவாதியின் உயிரோ எதுவோ, சிறுவயதில் நான் படித்த மாயஜால கதைகளிலெல்லாம் தவறாமல் இடம்பிடிக்கும் வர்ணனை இது. கீழடி அகழாய்வில் மீண்டெழுந்த புதைநகரை பார்த்த கணத்தில் அந்த மாயஜால வர்ணனை மிகுந்த நகரை பார்த்த உணர்வு. அனால் இங்கு இளவரசிகளோ, மந்திரவாதிகளோ வாழ்ந்து மறைந்திருக்கவில்லை. இங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகளெல்லாம் எளிய மனிதர்களின் வாழ்க்கை முறையை சித்தரிப்பவை. அவர்கள் எல்லோரும் மன்னர்களாய், இளவரசர்களாய், ராணிகளாய், இளவரசிகளாய் வாழ்ந்திருந்திருக்கலாம். அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டமைக்கப்பட்டிருந்த நாகரிகமான நகரம் மதுரை. தோண்டத்தோண்ட இங்கு கிடைத்தவையெல்லாம் புதையல்கள் அல்ல அதிசயங்கள். அதுவரையிலான வரலாற்றை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடக்கூடிய அற்புதங்கள்.


அரிசி புடைத்துக்கொண்டிருந்த கிழவி கோழியை விரட்ட தங்கத் தண்டட்டியைக் கழட்டி எறிந்த தமிழர்களின் செழிப்பான வரலாற்றுக் கதையை மெய்ப்பிக்கும் விதமாக கிடைத்த தந்தத்திலான தாயக்கட்டைகள் இந்த அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்திற்கு ஒரு பானை சோறு. மதுரை தமிழகத்தின் வரலாற்றுத் தலைநகரம் என்பது உலகறிந்ததே. ஆனால் வைகை தமிழக நாகரித்தின் தொட்டில் என்பதை கீழடி அகழாய்வு ஆணித்தரமாக பதிவு செய்கிறது.


டார்வினின் கூற்றுப்படி விவாதிப்போமேயானால் உலகத்தின் மற்ற பகுதிகளில் குரங்குகள் முழு பரிணாம வளர்ச்சியை எட்டும் முன்னரே ஆதித் தமிழகமான லெமூரியா கண்டத்தில் மனிதர்கள் எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தனர். கிறித்தவமும், இசுலாமும் நம்பும் கூற்றுப்படி சிந்திப்போமேயானால், இராமேஸ்வரம்-இலங்கை இடையிலான கடற்கரையில் சேதுகால்வாய் திட்டத்திற்காக தோண்டி ஆழப்படுத்தும் இராமர் பாலம் என்கிற மணற்திட்டு ஆங்கிலத்தில் உலகின் முதல் மனிதனான ஆதமின் பெயராலேயே (Adam Bridge) வழங்கப்பட்டு வருகிறது. தமிழகமே ஒரு வரலாற்றுப் புதையல். மதுரை அதன் பொக்கிஷம். உலகின் மற்ற மூலைகளில் மனிதர்கள் வேட்டையாடித் திரிந்த போது இங்கு விவசாயம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆடையின்றி உலவும் போது இங்கு அணிகலன்கள் வடிவம் பெற்றிருந்தன. அவர்கள் ஓய்வு குறித்து சிந்திக்கும் போது இங்கு செங்கல் கட்டிடங்கள் எழும்பியிருந்தன. அவர்கள் எழுதப் பழகும் முன்னரே இங்கு இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தன.


கீழடி அகழாய்வு நமக்கு அக்கால மதுரை மக்கள் தேர்ந்த நாகரிகத்தோடு, ஒரு ஒழுங்கமைவில் எத்துனை செழிப்பாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒருபுறம் காதுகளில் தங்கத் தண்டட்டிகள் ஆட, அழகிய வேலைப்பாடுகளோடு கூடிய தந்தத்திலான தாயக்கட்டைகள் கொண்டு கிழவிகள் தாயம் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் ரோமபுரி ராணியும் அணிய ஏங்கும் வெண்முத்தாலான பாசிகளை தங்கள் சங்குக்கழுத்தில் அணிந்த கன்னிப்பெண்கள் மலரினும் மெல்லிய தங்கள் வெள்ளி விரல்களால் சொட்டாங்கல்லுக்குப் பதில் தங்கக் கட்டிகளை வைத்து விளையாடியிருந்திருக்கின்றனர். சுட்ட செங்கற்கள் வீடுகள், உலோகப்பானைகளில் உணவு, பசியும் பட்டினியும் கனவு என வாழ்ந்திருக்கின்றனர். சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் என இந்த அகழாய்வில் கிடைத்ததெல்லாம் நம் செழிப்பான வரலாறு.


கீழடி, மற்ற பசுமைநடைகளில் இருந்து சற்று வேறுபட்டது. இம்முறை மலையேற்றம் இல்லை, பக்தி உணர்வைத் தரும் கோயில்கள் இல்லை, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் இல்லை. ஒரு தென்னந்தோப்பும், நாலு டெண்ட்டுகளும், தோண்டப்பட்ட நாற்பது குழிகளும் மட்டுமே. ஆனால் இந்த நடை பசுமைநடையின் வரலாற்றில் ஒரு மைல்கல். பிறந்து இன்னும் நடை பழகாத குழந்தையிலிருந்து, கம்பூன்றி நடக்கும் முதியவர்வரை, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஒரு மாநாட்டுக் கூட்டம் கலந்து கொண்ட நடை இது. எத்தனை பேர் வந்தாலும் தெளிவான திட்டமிடுதலுடன், நேர்த்தியாக கையாண்ட விதம் வியப்பிற்குரியது. அதற்கு பசுமைநடையின் மிகப்பெரும் திருவிழாக்களும் அதில் கிடைத்த அனுபவப் புரிதல்களும் பக்கபலமாக இருந்தன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதற்கு பங்கேற்பாளர்களும், அவர்கள் பசுமைநடையில் கடைபிடிக்கும் சீரிய ஒழுங்கும் மிக அடிப்படையான காரணங்கள். பசுமைநடையின் ஸ்திரத்தன்மைக்கும் அதுவே காரணம்.



வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்கள். மதுரையும் அப்படி ஒரு வாழ்ந்து கெட்ட நகரமாகிப் போனது. ஆதியில் இருந்ததில் பாதி கூட இல்லை இப்போது. கீழடி வெளிக்கொணர்ந்திருப்பது நம் மிச்சம் மீதி வரலாறு. பதிவு செய்யப்படாததாலும், பாதுகாக்கப்படாததாலும் மண் மூடிப்போன வரலாற்றை மீட்டெடுத்து உயிர்ப்போடு இயங்க ஆவன செய்கிறது பசுமைநடை. பசுமைநடை பதிவு செய்து கொண்டிருப்பது ஆவணங்களை அல்ல வரலாற்றை. இம்மாதிரியான வரலாற்றை தெரியப்படுத்தி, என்னை, எனது வரலாற்றுப் பெருமையை உணரச் செய்து, உலகின் முன் கர்வத்தோடு பெருமிதமாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள உற்ற காரணமாய் இருக்கும் பசுமை நடைக்கு உளமார்ந்த நன்றிகள்.   
---
பா.உதயக்குமார்...
---
படங்கள்: அருண் பாஸ் மற்றும் ஆனந்த்...

No comments:

Post a Comment