Showing posts with label pasumai nadai. Show all posts
Showing posts with label pasumai nadai. Show all posts

Sunday, 10 January 2016

நெனப்பு வந்துச்சு அவனுக்கு : பாகம் – 3 (GW 54 – மாடக்குளம்)...


பசுமைநடையில இருந்து இந்த தடவ 54-வது நடையா மாடக்குளம் போறதா sms வந்ததும், 30 வயசு மனசு தடதடன்னு 20-25 வருஷம் பின்னாடி போய் தண்டவாளம் வழியா நடந்து கொவ்வாலி மலைக்குப் போனது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.


கொவ்வாலிமலை, மாடக்குளம் கம்மா, கோர வாய்கா, 12-ம் பாலம், செம்மண் பிச்சு, கரும்பு மோட்டரு, மாங்கா மோட்டரு, தொட்டி மோட்டரு, அம்மாசிக் கிணருன்னு சின்ன வயசுல விழுந்து, கிடந்து, விளையாண்டு, குளிச்சு, சுத்தினு எல்லாம் நெனப்பு வர மனசெல்லாம் பூத்துக் கெடந்தது அவனுக்கு.


வீட்ட ஒட்டினாப்ல இருக்கிற, மதுரையில இருந்து போடிக்கு போற தமிழ்நாட்டோட கடைசி மீட்டர் கேஜ் ரயிலு தண்டவாளம் தான் அவங்க ஏரியாவுக்கே கக்கூசு. அதுல அவன் வீட்டுக்கிட்ட இருக்கிறது ஆறாம் பாலம். கொவ்வாலி மலை பன்னெண்டாம் பாலம் தாண்டியிருக்கு. வெளிக்கி இருக்கிறதுக்கு எத்தனாம் பாலம் தூரம் போறோங்கறத பொறுத்து அவங்க வயசு இருக்கு. சுள்ளாய்ங்க எல்லாம் 6, கொஞ்சம் வயசு அதிமாக ஆக அப்டியே 7, 8, 9 ன்னு தூரம் போவாய்ங்க. லேடீஸ் எல்லாம் ராத்திரிலயும், கருக்கல்லயும் இருட்டுக்குள்ளயே போய்ட்டு வந்துருவாக. லீவன்னைக்கெல்லாம் காலையில தண்டவாளத்துக்கு போய்ட்டு அப்டியே அந்த வழியாவே மலைக்கு போய் பக்கத்துல கம்மாயில குளிச்சுட்டு, மலை மேல போய் உக்காந்து வெளாடுறது தான் வழக்கமான பொழுதுபோக்கு அவனுக்கு.

சிலவேள தூக்குவாளி நெறைய புளிச்சோறு கட்டி, தொட்டுக்க பெரண்ட தொவய அரச்சு, 10 மாம்பழத்தயும் எடுத்துப் போட்டுக்கிட்டு, கொஞ்சம் மாங்கா கீத்து மொளகாப்பொடி போட்டு டிப்பன் பாக்ஸ்ல எடுத்துக்கிட்டு, வாட்டர்கேன்ல தண்ணியும் புடிச்சுக்கிட்டு வீட்டோட கிளம்பி பிக்னிக் போயிருவாக மலைக்கு. காலையில கிளம்பி போனா பொழுதடைய தான் வருவாக வீட்டுக்கு. அப்புறம் அடிக்கடி அவங்க அம்மா கூட மொத்தமா சேந்த துணி தொவைக்க பொட்டலம் கட்டிக்கிட்டு கோர வாய்க்கா கிளம்பிருவாக அவன், அவன் தம்பி, அண்ணன், மாமன், மச்சினன், சினேகிதங்க எல்லாம். ஒரு பக்கம் அவங்க அம்மா தொவைக்க மறுபக்கம் அவிய்ங்க எல்லாம் தண்ணிக்குள்ள குதியாட்டம் போட்டு திரிவாய்ங்க.  


இப்ப இருக்கிற பிள்ளைக மாதிரி வீட்டுக்குள்ளயே ஒத்தையில செல்போனுல கேம் விளையாடுற மாதிரி இல்ல அப்ப. அவஞ்சோட்டு பயலுவல்லாம் ஒண்ணா தான் திரியுவாக, வெளாடுவாக. எப்பயும் பத்து பதினஞ்சு பேரு கிட்டி, சில்லாக்கு, கோலிகுண்டு, பிள்ளபந்து, எறிபந்து, கள்ளன் போலிசு, பம்பரக்கட்டை, பரமபதம், தாயம், கம்புதள்ளி, கிரிக்கட்டுன்னு எதாச்சும் வெளாண்டுட்டே தான் இருப்பாக. அப்பறம் எல்லாரும் சேந்து கோர வாய்க்கா இல்லேனா கரும்பு மோட்டரு, மாங்கா மோட்டரு, தொட்டி மோட்டருன்னு எங்க தண்ணி வருதோ அங்க குளிச்சு குதியாட்டம் போட கிளம்பிருவாக. கம்மாயில தண்ணி வந்தா போதும் வேற வெளாட்டே வேணாம். பொழுதுக்கும் எருமையாட்டம் கம்மாத் தண்ணியிலயே ஊறிக் கெடப்பாய்ங்க. கம்மாயில இக்கரைக்கும் அக்கரைக்கும் போட்டி வச்சு நீந்தி ஜெயிக்கிறது தான் வெளாட்டு. ஒருவாட்டி கூட ஜெயிச்சதே இல்ல அவன். ஆனா எல்லா தடவையுமே போட்டில கலந்துகுவான். குளிக்கிறது மட்டுமில்ல மடையில உக்காந்து தூண்டிபோட்டு மீன் பிடிச்சு வீட்டுக்கு கொண்டுபோறது, அய்யனார் கோவில்ல பொங்க வாங்கி திங்கிறது, வீட்டுக்கு போற வழில தண்டவாளத்துக்கு ரெண்டு பக்கமும் மொளச்சு கெடக்குற பெரண்டை பறிச்சுட்டு போய் ஊறுகா போட குடுக்குறது எல்லாமே லீவுல நெதம் நடக்குற சங்கதி.  


கம்மாயில கரையில முங்கி முங்கு நீச்சல்லயே போய் முட்டி எந்திரிக்கிற குத்துக்கல்லு 12-ம் நூற்றாண்ட சேந்த பாண்டியர் காலத்து கல்வெட்டுன்னு பசுமை நடையில சாந்தலிங்கம் ஐயா விளக்கி சொல்ற வர தெரியாது அவனுக்கு. அந்த கல்லு மேல நின்னு தலைகீழா டைவு அடிச்சு குளிச்சிருக்கானே தவர அந்தக் கல்லுல அருவா, சாமரம், குடை, கலப்பைனு செதுக்கிருந்ததையும், “இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்” ன்னு வெட்டிருந்ததையும் இதுக்கு முன்னாடி ஒருவாட்டி கூட கவனிச்சதே இல்ல அவன். அவஞ்சோட்டு பயலுவலும் அப்படித்தான்.


அவனுக்கு தெரிஞ்சதெல்லாம், மாடக்குளம் ரொம்ப பெரிய கம்மா. அது ரொம்ப பழைய காலத்து கம்மா. கம்மா ஒடஞ்சா மதுரை அழிஞ்சு போவும். அது ஒடயாம இருக்க கம்மா கரையில ஈடாடி அய்யனார் காவ இருக்காரு. அவரு காவ இருக்கதுக்கு பின்னாடி ஒரு கத இருக்கு. அது என்னெனா, முன்னாடி ஒருநா இப்டித்தான் கம்மா பெருகி மடை ஒடயப்போற சமயத்துல அத பாத்த ஊருக்காரன் ஒருத்தன் கரையில இருக்கிற அய்யனாருகிட்ட எப்படியாவது கம்மா ஒடயாம ஊரக் காப்பாத்திடு. அதுக்கு ஈடா என் தலைய வெட்டி உனக்கு காணிக்கை குடுக்குறேன்னு மடயில கொண்டு போய் தலைய வச்சு தானே சிரச் சேதம் பண்ணிக்கிட்டானாம். அன்னையில இருந்து கம்மா ஒடயாம ஈடாடி அய்யனாரு ஓடோடி காவ காக்குறாராம். அதுக்கு மலை மேல இருக்கிற கொவ்வாலியும் (கபாலீஸ்வரிய கபாலின்னு கூப்பிட்டு பின்னாடி பேச்சு வாக்குல அது கொவ்வாலி ஆயிடுச்சு) தொணையிருக்குதாம். இது அவுக அய்யா அவனுக்கு சொன்ன கத. ஆனா அந்த மடைக்குப் பேரு “திருவாலவாயன் மடை” ங்கிறதும், அது மீனாட்சி சொக்கர குறிக்கிறதுங்கிறதும் பசுமைநடைக்கு போனப்போ தான் தெரிஞ்சுச்சு அவனுக்கு.


எடையில காவல்கோட்டம் நாவல் படிக்கையில அதுலயும் மதுரையோட எல்லையா மாடக்குளம் இருந்துச்சுன்னும், இதே மாதிரி மடைய மையமா வச்சு ஒரு தலைவெட்டி கதை வந்ததும், மாடக்குளத்துல மட்டும் கள்ளய்ங்களால கருது கசக்கிட்டு போக முடியலங்கிற சேதியும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.


அவங்க ஊரும், அவன் வெளாண்ட எடமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு காலத்துல மதுரையே மாடக்குளத்த அடிப்படையா வச்சுத் தான் வளந்திருக்குன்னு பசுமைநடையில எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அப்டியே பெருமையில பூரிப்பா இருந்துச்சு அவனுக்கு. அதுக்குச் சான்றா அவரு,  பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுல “மதுரோதய வளநாட்டில் மாடக்குளக்கீழ் மதுரை” ன்னு இருக்குறதயும், “மாடக்குளக்கீழ் திருப்பரங்குன்றம்”, “மாடக்குளக்கீழ் அரியூர்”, “மாடக்குளக்கீழ் கொடிமங்கலம்”, “மாடக்குளக்கீழ் குலசேகரபுரம்” ன்னு மாடக்குளத்த மையமா வச்சுத்தான் பல ஊருக இருந்திருக்கு. அதுக்கும் மேல இங்க பன்னண்டாம் நூற்றாண்டுல பாண்டியர் கால அரண்மனை இருந்துச்சுன்னும் போனதடவ இங்க வந்தப்ப சாந்தலிங்கம் அய்யா சொன்னத நெனவுபடுத்தி பேசப் பேச 541 படி ஏறிப்போன மலையையும் தாண்டி ஒசக்க ஆகாசத்துல மெதக்குற உணர்வு வந்துச்சு அவனுக்கு. 


அவுக அய்யா சொன்னதோட சிறுவயசுல இருந்து இவன் கவனிச்சிட்டு வர்ற இன்னொரு முக்கியமான சமாச்சாரம் இன்னும் இவுக ஊரு தான் பல பழமையான விசயங்கள இன்னும் பாதுகாத்துக்கிட்டு வருது. எம்.ஜி.ஆருக்கு சண்ட சொல்லிக்கொடுத்தது மாடக்குளத்து ஆளுக தான். இன்னுமும் இங்க சிலம்பாட்டம், சுண்ணாம்பு காளவாச எல்லாம் இருக்கு. குஸ்தி பள்ளிகொடம் இருக்கு. கார்ப்பரேசன் ஆனாலும் இன்னும் ஊர் கட்டுப்பாடு இருக்கு. தண்டோரா போட்டுத் தான் போவாக. கோயில்மாடு இருக்கு. ஊரு பூராவும் சல்லிக்கட்டு மாடு இருக்கு. இன்னும் வெளிய தெரியாம அய்யனார் கோயில்ல கெடா முட்டு நடக்கும், சேவச்சண்ட நடக்கும். மஞ்சத்தண்ணி இருக்கும். பத்து வருசத்துக்கு முன்னாடி கூட பழங்காநத்தத்துல சல்லிக்கட்டு நடந்ததும் அதுல சாரம் போட்டு இவன் வேடிக்கை பாத்ததும், மாடு அணையப் போன இவுக மாமா கால்ல லேசா குத்துப்பட்டதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இதெல்லாம் இப்போ இங்க வந்தவக ஆச்சர்யமா பேச பேச இவனுக்கு கொஞ்சம் பெருமையாத்தான் இருந்துச்சு.


அவங்க ஊருப் பெருமய மதுரை மட்டுமில்லாம, சென்னை, கடலூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி, காரைக்குடி, கும்பகோணம், திருச்சின்னு தமிழ் நாடு மட்டுமில்லாம ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கொரியான்னு உலகம் பூராம் இருந்து பல நூத்துக்கணக்கான பேரு வந்து பாத்து வியந்து போனத நெனைக்க நெனைக்க சிலுத்துகிச்சு அவனுக்கு. பசுமைநடை தான் அவனுக்கு அவங்க ஊர்ப் பெருமய புரியவச்சுச்சு. பசுமைநடை தான் அவனுக்கு மதுரய குறுக்குவெட்டா காமிச்சுச்சு. பசுமைநடை தான் அவனுக்கு ஒரு சின்ன வட்டத்தத் தாண்டி எல்லைகள கடந்து பல மனுசங்கள அறிமுகப்படுத்துச்சு. அது அவன மாதிரி இன்னும் பல பேருக்கும் எல்லாமுமா இருந்துக்கிட்டுருக்கு. அதோட இயல்பு அப்படித்தான். பசுமைநடை ஆத்துல ஓடுற தண்ணி மாதிரி. சில பேரு அள்ளி குடிப்பாங்க, சில பேரு முங்கி குளிப்பாங்க. சில பேரு கால் மட்டும் நனைப்பாங்க. சில பேரு வேடிக்கை மட்டும் பாப்பாங்க. ஆனா ஆறு எல்லோருக்கும் ஒண்ணு தான்.


எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவன் சின்ன வயசுல பாத்த கம்மாயும், மடையும், மலையுமா இல்ல இப்போ இருக்கது. அவன் வீட்டுல இருந்து தண்டவாளத்து வழி நேரா பாத்தா மலையும், கம்மா கரையும் தெரியும் அவனுக்கு. இப்போ வயக்காடெல்லாம் கட்டடமாகிப் போச்சு. கம்மா கூட கொஞ்சம் சுருங்கிப் போச்சு. கோர வாய்க்கா வயக்காட்டு வரப்பளவு சிறுத்துப் போச்சு. கரும்பு மோட்டரு கார் செட்டாவும், தொட்டி மோட்டரு ரெண்டுமாடி வீடாவும், மாங்கா மோட்டரு அபார்ட்மெண்ட்டாவும் மாறிப்போச்சு. தண்டவாளம் கூட பிராட் கேஜா மாத்துறோம்னு சில வருசத்துக்கு முன்னாடி பேத்து எடுத்து பொதர் மண்டிப்போச்சு. நாம காப்பாத்த வேண்டியதெல்லாம் தொலச்சுட்டு இருக்கோம்னு புரியும் போது ஊருல மிச்சமிருக்கிற வயக்காட்டுலயாவது வெவசாயம் பண்ணனும்னு தோனுச்சு அவனுக்கு. மாடக்குளத்துக்கு குடும்பத்தோட பசுமைநடை போய்ட்டு வந்ததுல இருந்து அவங்க அய்யாவும், அவன் பால்யமும் நெனப்புலேயே இருக்கு அவனுக்கு...


---
பா.உதயக்குமார்...
---
படங்கள் உதவி: அருண் பாஸ், ஆனந்த், விஷ்ணு வர்த்தன், அரவிந்தன்...

முந்தைய பாகங்களைப் படிக்க...



Sunday, 6 September 2015

கீழடி - மதுரையின் தாளடி... (GW - 51)

அடைமழை விட்டதும் செடிமழை என்பார்கள். ஆனால் இன்னும் அடைமழையே விட்டபாடில்லை. ஆம், கீழக்குயில்குடி ஆலமரத்தடி பெருவிழாவில் தொடங்கிய இன்னீர் மன்றல் உற்சாகம், புத்தகத் திருவிழாவில் நீட்சி பெற்று, கீழடியில் புதைந்து கிடக்கும் வைகை மண்ணின் வரலாற்றை கண்டபொழுது இரட்டிப்பாகியிருந்தது.


வைகை தவழ்ந்து வரும் பாண்டிய நாட்டுப் பெருவழியில் குமைந்து கிடக்கிறது அகிலம். பாண்டிய நாட்டின் எல்லைகளைத் தேடினால் அது ரோமாபுரி வரை நீண்டு கிடக்கிறது. உலக நாகரிகத்தின் ஆதி நகரங்கள் வைகையில் நீராடிய பின்னரே வரலாற்றில் முழுமை அடைந்திருக்கின்றன. உலகின் ஆதி மொழியான தமிழோ, நாகரிக வாழ்வின் தொடக்கமோ எதுவாயினும் மதுரை மண்ணில் புரண்டெழுந்த பின்பே அங்கீகரிக்கபட்டிருக்கிறது.

இவ்வாறான வரலாற்றுப் பெருமையை தாங்கி நிற்கும் மதுரையை மகுடமாய் தலையில் சூட்டிக்கொள்ளும் மண்ணின் மைந்தர்களுக்கு மேலும் கணம் சேர்க்கும் விதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கீழடி அகழாய்வு.


கீழடி நோக்கிய பசுமைநடையின் பயணம் உண்மையில் ஒரு வரலாற்றுப் பயணம். பசுமைநடை வரலாற்றில் விழாக்கள் தவிர்த்த மற்ற நடைகளில் ஏறக்குறைய 500 நபர்கள் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. கைக்குழந்தைகள் தொட்டு கம்பூன்றி நடக்கும் தாத்தாக்கள் வரை குடும்பங்களாக கலந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வு, அதிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கெல்லாம் கூடிய அர்ப்பணிப்பு என பொது வெளியில் இயங்குபவர்கள் நம்பமுடியாத அளவிற்கு மக்களின் பங்களிப்பை, அன்பைப் பெற்றிருக்கிறது பசுமை நடை.


எப்போதும் போல் இல்லை இந்த நடை. இன்னீர் மன்றல் தந்த ஆச்சர்ய அனுபவம், புது நபர்களுக்கு புத்தகத் திருவிழாவில் கிடைத்த விளக்கம், கீழடி அகழாய்வு குறித்து ஊடகங்கள் பகிர்ந்த செய்திகள் என கலந்துகட்டிய உற்சாகம் பார்வையாளர்களை பெருந்திரளாக கொண்டுவந்து சேர்த்திருந்தது. மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கே இருக்கும் மருதிருவர் சிலையை ஒட்டிய பகுதியில் ஒரு திருவிழாக் கூட்டம் திரள ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு பசுமைநடைக்கு வந்திருக்கும் வாகனங்களை நிறுத்த முடியாத அளவிற்கு இட நெருக்கடி. அதனால் அங்கிருந்து கிளம்பிய நடை மேற்கே நேர் வழியில் செல்லாது வடக்கே திரும்பி தெப்பக்குளக் கரையோரம் ஒருசேர பயணித்து மீண்டும் இராமநாதபுர முக்கிய சாலையை தொட்டு பயணித்தது. சாலையில் ஒருசேர சென்ற வாகன அணிவகுப்பு ஒரு ஊர்வலத்தின் தோற்றம் தந்து சிலமானை அடைந்தது.


சிலைமானில் இருந்து வலதுபுறம் கீழடியை நோக்கி திரும்பியவுடன் பசுமைநடை பயணம், நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கிய காலப்பயணமாய் பரிணாமம் அடைந்தது.  அதுவரையில் 2015 ல் பயணித்த மனதும் உணர்வும், தூரத்தில் எங்கேயோ ஸ்பீக்கர் குழாய்களில் ஒலித்த டி.ஆரின் மெஸ்மெரிச பாடல்களில் லயித்து 80 களுக்கு மடைமாற்றம் அடைந்தது.. பயணித்துக் கொண்டிருக்கையில் தெரியவில்லை இந்த பயணச் சக்கரம் காலச் சக்கரத்தில் என்னை/எங்களை பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறதென்று. வெளிவட்ட சாலை குறுகி, தார்சாலை ஊர்சாலையாக பரிணமித்து, ஊர்சாலை ஒற்றையடி பாதையாக மாறி திடீரென ஒரு தோப்பில் விஸ்தரிக்கும் பொழுது நம் முன் தெரிந்தது 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்று நகரம்.


ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு வனம் தாண்டி இருக்கும் நகரமும் அங்கு உயிர் வாழும் அழகிய இளவரசியோ, கிளியோ, அதில் இருக்கும் மந்திரவாதியின் உயிரோ எதுவோ, சிறுவயதில் நான் படித்த மாயஜால கதைகளிலெல்லாம் தவறாமல் இடம்பிடிக்கும் வர்ணனை இது. கீழடி அகழாய்வில் மீண்டெழுந்த புதைநகரை பார்த்த கணத்தில் அந்த மாயஜால வர்ணனை மிகுந்த நகரை பார்த்த உணர்வு. அனால் இங்கு இளவரசிகளோ, மந்திரவாதிகளோ வாழ்ந்து மறைந்திருக்கவில்லை. இங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகளெல்லாம் எளிய மனிதர்களின் வாழ்க்கை முறையை சித்தரிப்பவை. அவர்கள் எல்லோரும் மன்னர்களாய், இளவரசர்களாய், ராணிகளாய், இளவரசிகளாய் வாழ்ந்திருந்திருக்கலாம். அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டமைக்கப்பட்டிருந்த நாகரிகமான நகரம் மதுரை. தோண்டத்தோண்ட இங்கு கிடைத்தவையெல்லாம் புதையல்கள் அல்ல அதிசயங்கள். அதுவரையிலான வரலாற்றை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடக்கூடிய அற்புதங்கள்.


அரிசி புடைத்துக்கொண்டிருந்த கிழவி கோழியை விரட்ட தங்கத் தண்டட்டியைக் கழட்டி எறிந்த தமிழர்களின் செழிப்பான வரலாற்றுக் கதையை மெய்ப்பிக்கும் விதமாக கிடைத்த தந்தத்திலான தாயக்கட்டைகள் இந்த அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்திற்கு ஒரு பானை சோறு. மதுரை தமிழகத்தின் வரலாற்றுத் தலைநகரம் என்பது உலகறிந்ததே. ஆனால் வைகை தமிழக நாகரித்தின் தொட்டில் என்பதை கீழடி அகழாய்வு ஆணித்தரமாக பதிவு செய்கிறது.


டார்வினின் கூற்றுப்படி விவாதிப்போமேயானால் உலகத்தின் மற்ற பகுதிகளில் குரங்குகள் முழு பரிணாம வளர்ச்சியை எட்டும் முன்னரே ஆதித் தமிழகமான லெமூரியா கண்டத்தில் மனிதர்கள் எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தனர். கிறித்தவமும், இசுலாமும் நம்பும் கூற்றுப்படி சிந்திப்போமேயானால், இராமேஸ்வரம்-இலங்கை இடையிலான கடற்கரையில் சேதுகால்வாய் திட்டத்திற்காக தோண்டி ஆழப்படுத்தும் இராமர் பாலம் என்கிற மணற்திட்டு ஆங்கிலத்தில் உலகின் முதல் மனிதனான ஆதமின் பெயராலேயே (Adam Bridge) வழங்கப்பட்டு வருகிறது. தமிழகமே ஒரு வரலாற்றுப் புதையல். மதுரை அதன் பொக்கிஷம். உலகின் மற்ற மூலைகளில் மனிதர்கள் வேட்டையாடித் திரிந்த போது இங்கு விவசாயம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆடையின்றி உலவும் போது இங்கு அணிகலன்கள் வடிவம் பெற்றிருந்தன. அவர்கள் ஓய்வு குறித்து சிந்திக்கும் போது இங்கு செங்கல் கட்டிடங்கள் எழும்பியிருந்தன. அவர்கள் எழுதப் பழகும் முன்னரே இங்கு இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தன.


கீழடி அகழாய்வு நமக்கு அக்கால மதுரை மக்கள் தேர்ந்த நாகரிகத்தோடு, ஒரு ஒழுங்கமைவில் எத்துனை செழிப்பாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒருபுறம் காதுகளில் தங்கத் தண்டட்டிகள் ஆட, அழகிய வேலைப்பாடுகளோடு கூடிய தந்தத்திலான தாயக்கட்டைகள் கொண்டு கிழவிகள் தாயம் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் ரோமபுரி ராணியும் அணிய ஏங்கும் வெண்முத்தாலான பாசிகளை தங்கள் சங்குக்கழுத்தில் அணிந்த கன்னிப்பெண்கள் மலரினும் மெல்லிய தங்கள் வெள்ளி விரல்களால் சொட்டாங்கல்லுக்குப் பதில் தங்கக் கட்டிகளை வைத்து விளையாடியிருந்திருக்கின்றனர். சுட்ட செங்கற்கள் வீடுகள், உலோகப்பானைகளில் உணவு, பசியும் பட்டினியும் கனவு என வாழ்ந்திருக்கின்றனர். சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் என இந்த அகழாய்வில் கிடைத்ததெல்லாம் நம் செழிப்பான வரலாறு.


கீழடி, மற்ற பசுமைநடைகளில் இருந்து சற்று வேறுபட்டது. இம்முறை மலையேற்றம் இல்லை, பக்தி உணர்வைத் தரும் கோயில்கள் இல்லை, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் இல்லை. ஒரு தென்னந்தோப்பும், நாலு டெண்ட்டுகளும், தோண்டப்பட்ட நாற்பது குழிகளும் மட்டுமே. ஆனால் இந்த நடை பசுமைநடையின் வரலாற்றில் ஒரு மைல்கல். பிறந்து இன்னும் நடை பழகாத குழந்தையிலிருந்து, கம்பூன்றி நடக்கும் முதியவர்வரை, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஒரு மாநாட்டுக் கூட்டம் கலந்து கொண்ட நடை இது. எத்தனை பேர் வந்தாலும் தெளிவான திட்டமிடுதலுடன், நேர்த்தியாக கையாண்ட விதம் வியப்பிற்குரியது. அதற்கு பசுமைநடையின் மிகப்பெரும் திருவிழாக்களும் அதில் கிடைத்த அனுபவப் புரிதல்களும் பக்கபலமாக இருந்தன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதற்கு பங்கேற்பாளர்களும், அவர்கள் பசுமைநடையில் கடைபிடிக்கும் சீரிய ஒழுங்கும் மிக அடிப்படையான காரணங்கள். பசுமைநடையின் ஸ்திரத்தன்மைக்கும் அதுவே காரணம்.



வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்கள். மதுரையும் அப்படி ஒரு வாழ்ந்து கெட்ட நகரமாகிப் போனது. ஆதியில் இருந்ததில் பாதி கூட இல்லை இப்போது. கீழடி வெளிக்கொணர்ந்திருப்பது நம் மிச்சம் மீதி வரலாறு. பதிவு செய்யப்படாததாலும், பாதுகாக்கப்படாததாலும் மண் மூடிப்போன வரலாற்றை மீட்டெடுத்து உயிர்ப்போடு இயங்க ஆவன செய்கிறது பசுமைநடை. பசுமைநடை பதிவு செய்து கொண்டிருப்பது ஆவணங்களை அல்ல வரலாற்றை. இம்மாதிரியான வரலாற்றை தெரியப்படுத்தி, என்னை, எனது வரலாற்றுப் பெருமையை உணரச் செய்து, உலகின் முன் கர்வத்தோடு பெருமிதமாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள உற்ற காரணமாய் இருக்கும் பசுமை நடைக்கு உளமார்ந்த நன்றிகள்.   
---
பா.உதயக்குமார்...
---
படங்கள்: அருண் பாஸ் மற்றும் ஆனந்த்...

Saturday, 2 November 2013

பசுமைநடையில் நான்...

கொங்கர்புளியங்குளம் – எனக்கும் பசுமைநடைக்குமான தொடர்பின் ஆரம்பப்புள்ளி. இதுவரையில் 27 நடை கண்டிருக்கும் பசுமைநடையின் நாலாவது நடை, எனது முதல் நடை, இப்போது மீண்டும் 27 ஆவது நடை (20/10/2013) கொங்கர் புளியங்குளம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகிலிருக்கும் கொங்கர் புளியங்குளம் மலைக்கும் எனக்குமான தொடர்பு பசுமைநடை தாண்டியும் கொஞ்சம் இரசம் மிக்கது. ஆம் இங்கு ஒரு சாதாரணமான சூழலில் அப்போது நான் வைத்திருந்த நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் செல்போனில் நான் எடுத்துக்கொண்ட ஒரு சாதரணமான புகைப்படமே இதுவரையில் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான நபருக்கு பிடித்த புகைப்படமாக உள்ளது.
கொங்கர் புளியங்குளத்தில் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம்...

அப்படி அது சொல்லிக்கொள்ளுமளவிற்கு சிறப்பான புகைப்படம் இல்லையெனினும் ஒரு சிறப்பான தகுதியை எட்டிவிட்டது. இப்படி அச்சுபிச்சு காரணங்களோடே இம்மலைக்கும் எனக்குமான இரசவாதம் கொஞ்சம் அலாதியானது. இம்முறை கொங்கர் புளியங்குளம் என்னை எழுதத் தூண்டியது பசுமைநடையில் எனது சுயபுராணத்தை.

முதன்முதலில் பசுமநடை பற்றி நான் அறிந்தது முகநூல் வாயிலாக. அப்போது தான் காவல்கோட்டம் நாவலை வாசித்து முடித்திருந்த நேரமென்பதால் எனக்கு இம்மலைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் – ஞாயிறன்று அதிகாலை 6:30 மணியளவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வாயிலில் கூட வேண்டுமென முகநூலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரியாக கவனிக்காத நான், உடன் தம்பி சந்தோசோடு 6.30 மணிக்கு அங்கிங்கு விசாரித்து நேரே மலைக்கே சென்றுவிட்டேன். ஆனால் சொன்ன நேரத்தில் யாரும் அங்கு இல்லாதது கண்டு இருவருமே ஏமாற்றமடைந்தாலும், அதிகாலை வேலையில் தூக்கம் கெடுத்து, எங்களின் ஆர்வம் கெடுத்து ஏமாற்றத்தின் வடு உள்ளிருக்க இருவருமே ஏதேதோ சமாதானம் சொல்லி தேற்றிக்கொண்டோம். பிறகு வந்த கையோடு திரும்பிச் செல்லாமல் நாமாக சுற்றிப் பார்க்கலாமென முடிவெடுத்து சுற்றிமுடித்த கையோடு அந்த அதிகாலை நேரம் மலை எங்களுக்குள் ஏற்படுத்திய பரவசமும், அந்த ரம்மியமான சூழலும் தந்த மிதப்பில் அங்கேயே அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் சாலையில் சாரை சாரையாக வாகனங்கள் அணிவகுத்து வர எங்களுக்குள் பழைய உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலிருந்து கையசைத்தவாறே உற்சாகம் தாளாது கீழிறங்கி வந்து கூட்டத்தோடு சேர்ந்து கொண்டோம். பிறகு நேரே எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனிடம் சென்று  அறிமுகப்படுத்திக்கொண்டு ஆர்வமிகுதியில் “நீங்க ரொம்ப லேட் சார், நாங்க இங்க 6.30 க்கெல்லாம் வந்துட்டோம்” என்க, அவர் எங்களிடம் 6.30 மணிக்கு நாங்கள் வரச் சொன்ன இடம் பல்கலை வாயில் என பதிலுரைக்க, ஹி ஹி என அசடு வழிந்துகொண்டே பேசிச் சென்றோம். பிறகு அவர் இதை நாங்கள் குறுஞ்செய்தி வாயிலாகவே ஒருங்கிணைக்கிறோம் என்றுகூற எனது எண்ணை அவரிடம் கொடுத்துவிட்டு நிகழ்வில் ஒன்றிணைந்தேன். பேராசிரியர் சுந்தர்காளி இடங்களின் சிறப்பை விளக்க அதன்பிறகு எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. தம்பி சந்தோசிடம் நான், “தம்பி நாம இங்க ஒரு வேலை கூட செய்யாம சோறு சாப்பிட்டா நமக்கு உடம்புல ஒட்டாதுடா. அதனால எல்லோருக்கும் பரிமாறிட்டு கடைசியா நாம சாப்பிடுவோம்” எனக்கூறி ஏதேனுமொரு வகையில் நமது பங்களிப்பு இருக்க வேண்டுமென்ற முனைப்புடன் தன்னார்வமாக வேலை செய்தோம்.

அங்கேயே அடுத்தநடை மாங்குளம் என அறிவிக்க, நான் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனிடம் மாங்குளத்தில் எனது நண்பர்கள் உள்ளனர், உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கூறுங்கள் எனக் கூறிவிட்டு வந்தேன். இங்கு எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனை பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதற்கு முன்புவரை அவருடனான எனது அறிமுகம் அவரை விஜய் டிவி நீயா நானாவில் பார்த்தது மட்டுமே. பிரபலங்கள் எல்லோரும் தனித்தே இருப்பார்கள் என்று மற்றவர்களைப் போலவே எனக்கும் எண்ணமுண்டு. ஆனால் இவர் விதிவிலக்கானவர். அவருடன் பழகிய பிறகே தெரிந்தது அவரது எழுத்துக்கள் அனைத்தும் மக்களுக்கானவை. மக்களின் தேவைகளை, உணர்வுகளை, வலிகளை, உண்மைகளை பிரதிபலிப்பவை. மக்களிடமிருந்து தனித்திருந்தால் மக்களுக்கான எழுத்து எப்படி உருவாகும்? இவர் சமூகவெளியில் எப்போதும் சகமனிதனாக பயணிப்பதையே விரும்பும் ஒரு சாதாரணன். சாதாரணர்களுக்காகவே எழுதும் சாமானியன். அந்த நிகழ்விற்குப் பிறகு அவர் என்னை ஞாபகம் வைத்து அழைப்பாரென நான் நினைக்கவேயில்லை. அவர் அழைத்ததன் நோக்கம் மாங்குளம் சென்று அடுத்த நடைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு. ஒரு நடை நடத்துவதில் உள்ள சிரமம், அதற்கான முன்தயாரிப்புகள், நேர்த்தி என ஒவ்வொன்றும் ஒரு நிர்வாகம் பயிலும் மாணவனுக்கும், அத்துறையிலிருப்பவர்களுக்குமான படிப்பினை. அதன்பிறகு ஒவ்வொரு நடையிலும் என்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டதை கேட்கவும் வேண்டுமா?

இயல்பில் சமூகப்பணி படித்த எனக்கு பசுமைநடை கற்பித்த பாடம், ஒரு தன்னார்வமிக்க சமூகத்தை எப்படி கட்டமைக்க வேண்டுமென்பது. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், இன, மத, சாதி, வகுப்புகளைச் சேர்ந்தவர்களை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது பசுமைநடை. இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கமிருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒரே தளத்தில், தங்களது சுய அடையாளங்களை விடுத்து பசுமநடையின் உறுப்பினர்களாக மட்டுமே இயங்குவதென்பது சாதரணமாக சாத்தியமாகிவிடக்கூடிய ஒன்றில்லை. இங்கு கிடைக்கும் மரியாதையும், அங்கீகாரமும் வயது முதிர்வினாலோ, தங்கள் துறையில் வித்தகர்களாக இருப்பதினாலோ, பெரும்பொருள் படைத்தவர்கள் என்பதினாலோ, சமூகத்தில் பெரும்புள்ளிகள் என்பதினாலோ அல்ல. முற்றாக தன்னார்வமான உழைப்பினால் மட்டுமே கிடைக்கப்பெறுவது. உழைக்கும் எவரையும், எப்போதும், இங்கு எல்லோரும், வணங்கத் தயார். எந்தவித பொருட் பிண்ணனியும் இல்லாது துணிந்து ஒரு விருட்சத் திருவிழா நடத்தியது முழுவதுமாக இந்த தன்னார்வமான உழைப்பை நம்பியும், எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனின் தீர்க்கமான பார்வையின் உந்துதலினாலும் மட்டுமே.

இப்படி கடையனுக்கும் கடைத்தேற்றம் அளிக்கும் பசுமைநடை, சமூகவெளியில் செயல்படும் அனைவருக்குமான பால பாடம் அல்ல பட்ட மேற்படிப்பு.