Monday, 27 July 2020

விடியலை நோக்கி...



விடிஞ்சும் விடியாம இந்த மழை வேற நசநசன்னு பேஞ்சுட்டு இருக்கு. உள்ள குளிருல செனையா இருக்க இந்த லெட்சுமி வேற அனத்திட்டு இருக்குது. இந்த கருவாயன விடியுமுன்ன வாடான்னு தாக்கல் சொல்லி அனுப்பிருந்தேன். வக்காளி இன்னும் ஆளக்காணோம். ஏய், ஏம்மா செல்வி எந்திரி. தலையில துண்டபோட்டு போய் செந்தேல் அண்ணன் கடையில தூக்குவாளியில டீயை வாங்கியா. அப்டியே 2 அப்பம், 2 உளுந்தவடை வாங்கிக்க. காலங்காத்தால கடன் சொல்லாதேம்பான். பால் ஊத்த வரையில எங்கப்பா குடுக்குறேன்னு சொல்லுச்சுன்னு சொல்லிட்டு வா, என்ன.
ஏடி ஏய் முனீசு, வந்து இங்கன அந்த கழனித்தண்ணிய கலக்கி வச்சுட்டுப்போடி. நீ ஒம்போது மாத்தக்காரின்னு மாட்டுக்கு தெரியுமா? எப்ப ஈனுமோன்னு வதக் வதக்குங்குது. இந்த கருவாயன வேற காங்கல இழவு எங்க போய் தொலஞ்சானோ.

மழையை விட நசநசத்துக் கொண்டிருந்தான் பெரியராசு. ஏலேய் ஏய் கருவாப்பயலே, உன்னிய விடியுமுன்னே வாடான்னு சொன்னேன்ல. தொரை அசால்ட்டா நெளிஞ்சு திரிஞ்சு வாரீரு. வந்து இங்கன மாட்டை பாருடா வெண்ணை.

மாட்டின் அருகில் போன கருவாயன் முனீஸ்வரி கலக்கி வைத்திருந்த கழனியை மறுமுறை ஒரு கலக்கு கலக்கிவிட்டு லெட்சுமிக்கு காட்டிவிட்டு அதன் வயிற்றை தடவிப்பார்த்தான்.



ஐயா இன்னும் செத்த நேரத்துல ஈன்றும். வெளிக்கி தள்ள முட்டுது. சற்று நொடிக்கெல்லாம் சரேலென பெருங்குரலெடுத்து சீழ் வடிய கன்றொன்றை ஈன்றது லெட்சுமி. என்ன கன்டுடா? ஐயா காளக்கன்டுங்க.
தாயோளி விளங்காமப்போக. இத வச்சு போன மாசம் 5000 ஓவாய்க்கு பருத்தியும், புண்ணாக்கும் அழுதது தான் மிச்சம் என துண்டை உதறிக்கொண்டே எழுந்து சென்றான் பெரிய ராசு.

கைக்கொள்ளாமல் போண்டாவையும், வடையையும் மறுகையில் தூக்குவாளியையும் ஆட்டிக்கொண்டே வந்தாள் 12ம் வகுப்பு பரீட்சை எழுதி முடித்திருந்த அவன் மகள் செல்வி.
டீயைக் குடித்தவாறே பெரிய ராசு, ஏய் கழுத இந்தவாட்டி பாசாயிட்டு என்ன பண்ணப்போற? அப்பா நான் டாக்டருக்கு படிக்கப்போறேன். என்னை NEET கிளாஸ் சேத்துவிடு.
வெளுத்தேன்னா பாத்துக்க மூதி. பொட்டப்புள்ளைய பள்ளிக்கூடம் அனுப்பினதே பெருசு. உனக்கு 12 ஆப்பு படிச்சது பத்தலையோ? இன்னும் நீ டாக்டருக்கு படிக்க கோமணத்தையும் உருவி வித்துட்டு அழுகணுமோ? அதெல்லாம் ஒரு மசுரும் வேணாம். போ போய் பட்டிய பாத்துக்க. அப்புறம் உன்னிய கட்டிக்குடுக்க டாக்டர் மாப்பிள்ளை வேணும்ப. அவென் காரு, வீடும்பான், சவரன் 100 போடும்பான். என்ன உன் தாத்தேன் பொதச்சா வச்சிருக்கான்? இல்லை உங்காத்தா வரெயில தல நெறையா சொமந்து வந்தாளா? கழுதைகளா... ஒன்னுகுமத்த கழுதைகளா. போன வருசம் ஏதோ பொம்பளைபிள்ளை ஒன்னு வேற செத்துப்போச்சாம்ல, ஏதோ டாக்டர் படிக்க முடியாம? நீயும் போய் செத்து ஒழிஞ்சுடாத. இல்லை அடம்பிடிப்பேன்னா, போய்த்தொலை. அம்மஞ்சல்லி இல்லை என்ட்ட.



நெஞ்சுடைந்த செல்வி டம்ளரில் ஊற்றிய டீயை வாயில் ஊற்றாமல் அதனை வெறித்தபடியே இருந்தாள். இந்த நிலைதான் அவள் கூட்டுக்காரிகளுக்கு என்றாலும், அவளுக்கு படிப்பின் மீது தீராக்காதல் இருந்தது. விதித்தது அவ்வளவு தான் என்று விட்டுவிடவும் மனமில்லை. உட்கார்ந்து யோசித்தவளுக்கு உள்ளூரில் படிப்பகம் நடத்திக் கொண்டிருந்த கருப்புசட்டை ராமசாமி அண்ணன் நினைவு வந்தது. படிப்பகத்திலேயே இன்னொரு ராமசாமியும் இருந்ததால் ஊரில் அவரை எல்லோரும் பெரிய ராமசாமி என்று அழைப்பது வழக்கம். தீர்க்கமான முடிவோடு குளித்து முடித்து பெரிய ராமசாமி அண்ணனின் படிப்பகத்துக்கு சென்றாள்.

என்ன செல்வி காலைல நேரமே வந்திருக்க? எப்பவும் சாயங்காலம் தானே வருவ? முந்தாநாள் எடுத்துட்டுப்போன பல்லாங்குழி புத்தகத்தை அதுக்குள்ள வாசிச்சு முடிச்சுட்டியா?
இல்லைண்ணே. போன வாரம் நாலுமுக்கு ரோட்ல செவப்புத்துண்டு கட்சிக்காரவகளோட  சேந்து ஒரு போராட்டம் பண்ணீகளே?
ஆமா, NEET தேர்வுல இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேணும்னு பண்ணினோம். அதுக்கு இப்போ என்னத்தா?
இல்லைண்ணே இந்த வருசம் அதை ரத்து பண்ணிடுவாகளா?
தெரியலத்தா. எல்லாம் ஒன்றிய சர்கார் முடிவு பண்ணனும். நாம போராட்டம் பண்ணி நம்மோட எதிர்ப்பை தெரியப்படுத்துறோம். அவ்வளவுதான்.
இந்த மாதிரி முடிவு எல்லாம் யாருண்ணே எடுக்குறாக?
எல்லாம் காசு உள்ளவனும், பெரிய சாதிக்காரனும் தான்.
ஏண்ணே நாம எல்லாம் முடிவு எடுக்க முடியாதா?
எங்கத்தா, உன்னிய மாதிரி துடியா யோசிக்கிற பொம்பளைப் புள்ளைங்க எல்லாம் இங்கன சாணி அள்ளிக்கிட்டு இருக்குது. அந்த நெலம போய் நீங்க எல்லாம் முட்டி மோதி மேல வந்து முடிவு எடுக்கிற எடத்துல உக்காந்தா அதெல்லாம் மாறும். ஆனா அதை ஒருபக்கம் பவர் இருக்கிறவன் நடக்கவிடாம பாத்துக்கிறான். இன்னொரு பக்கம் நம்ம வீட்டாளுகளே விவரம் போதாம அடக்கி வச்சிருக்காங்க.
நானும் உங்க கட்சியில சேந்துக்கிறவாண்ணே?
என்னத்தா இப்படி பொசுக்குன்னு கேட்டுப்புட்ட? உங்கய்யன் விடுவாரா?
விடமாட்டாருதாண்ணே. ஆனா, அப்பனையே தாண்டி வர முடியாட்டி நான் எப்படிண்ணே நாட்டுக்கே முடிவு எடுக்கிற நெலமைக்கு வர முடியும் என சொல்லிக்கொண்டே படிப்பகதிற்குள் நுழைந்த செல்வி தேடிப்பிடித்து ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினாள்...

"பெண் ஏன் அடிமையானாள்?...


-
உதயக்குமார் பாலகிருஷ்ணன்