பாறைத்திருவிழாவின்
தித்திப்பினை அசைபோட்டபடியே அக்டோபர் 26, 2014 ஞாயிறன்று
அதிகாலையில் தெப்பக்குளம் பசுமைநடைக்கு சாதரணமாய் கிளம்பிய எனக்கு அப்போது
தெரிந்திருக்கவில்லை அது என் வாழ்நாளில் முக்கியமான தினமாய் அமையப்போகிறதென்பது.
பசுமைநடையின் தொடர்பு எண்ணைக் கையாளுவதால் எப்போதும் போல குறுஞ்செய்தி அனுப்பிய
நாளிலிருந்து பசுமைநடை நிகழ்வு தொடங்கிய பின்னரும் தொடரும் அழைப்புகள் இம்முறை
குறிப்பிடும்படி இல்லை. பாறைத்திருவிழாவின் வெற்றிக்குப் பின்னர், மழைக்கு
மதிப்பளித்து அதோடு கூட தீபாவளிப் பண்டிகையின் குதூகலத்தையும் குலைக்க விரும்பாது,
நீண்ட தூரமோ மலைப்பகுதியோ வேண்டாமென முடிவெடுத்து நகருக்குள் தெப்பக்குளத்திற்கு
செல்வதென தீர்மானித்த எங்களுக்கு முதல் நாள் வரையில் சற்று ஏமாற்றமே. இருப்பினும்
எப்போதும் உள்ள உத்வேகம் சற்றும் குறையாமல் நிகழ்விற்கு தயாரானோம்.
நிகழ்வன்று
எங்கள் ஏமாற்றத்தினை பொய்யாக்கி எப்போதும்போல 150 க்கும்
அதிகமான எண்ணிக்கையில் பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர். தெப்பக்குளத்தின் மைய
மண்டபத்திற்கு செல்லலாமென ஆர்வத்துடன் தெப்பத்தினை எட்டிப்பார்த்தால் எங்களுக்கு
முன்பே தெப்பத்தில் நீர் நிரப்பும் மாநகராட்சியின் ஆர்வம் ஏறக்குறைய 2 அடிகளுக்கும்
மேல் நிரம்பியிருந்தது. என்ன செய்ய, தெப்பத்தினை ஒரு சுற்று சுற்றி பெருமூச்சுடன்
அதன் மேற்கு கரையில் முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள படித்துறையில் மைய
மண்டபத்தினை பார்த்தவாறு அமர்ந்து முனைவர்.சொ.சாந்தலிங்கம் அய்யா அவர்களின் உரை
கேட்கலானோம்.
கிழக்கின்
சூரியனை பின்னந்தலையில் தாங்கி அய்யா உரை நிகழ்த்திய கம்பீரத்தினை
ரசித்துகொண்டிருக்கும் வேளையில் பசுமைநடையின் நிறுவனர் எழுத்தாளர் திரு.அ.முத்துக்கிருஷ்ணன்
ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது முனைவர்.சொ.சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கு தஞ்சை
பெரியகோவில் சதயவிழாக்குழு இவ்வாண்டின் இராஜராஜன் விருதினை வழங்கி கவுரவிக்க
இருக்கிறது என்ற தகவல். தகவலைக் கேட்டதும் ஏதோ எனக்கே அந்த விருது கிடைத்தாற்
போன்ற மகிழ்ச்சியுடன் நான் பூரித்துக் கிடந்த வேளையில் திரு.அ.முத்துக்கிருஷ்ணன்
அவர்களிடமிருந்து வந்தது இன்னுமொரு அறிவிப்பு.
ஒவ்வொருமுறையும்
பங்கேற்பாளர்களுக்கு ஒருவித ஆச்சர்யத்தை ஒளித்துவைத்து பரிசளிக்கும் பசுமைநடை
இம்முறை எனக்கும், என்னைப்போல இன்னும் 11 பேருக்கும், எங்கள் மூலம்
பார்வையாளர்களுக்கும் புதுவித ஆச்சர்யத்தையும், உற்சாகத்தையும் பரிசளித்தது. விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும்போது கவுண்டவுண் சொல்லப்படுவதுபோல்
முதலில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தமிழறிஞர்
இராம.சுந்தரம் அய்யாவினை மேடைக்கு அழைத்த திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள்
தொடர்ந்து கவிஞர் மோகனரங்கன் அவர்கள், எழுத்தாளர் தாமோதர் சந்துரு அவர்கள்,
குழந்தைகள் நல மருத்துவர் பழனிச்சாமி அவர்கள் ஆகியோரையும் மேடைக்கு அழைத்ததோடு
வரிசையாக என்னையும், கு.மதுமலரன், மோ.ராஜண்ணா வெங்கட்ராமன், பாடுவாசி ரகுநாத்,
க.குரூஸ் அந்தோனி ஹுபர்ட், கு.வேல்முருகன், இளஞ்செழியன், சித்திரவீதிக்காரன்
சுந்தர், தீபா நாகராணி, வஹாப் ஷாஜஹான், கனகராஜ், கு.வித்யா குமரேசன் ஆகியோரையும்
அழைத்தார்.
எதற்காக
அழைக்கப்பட்டோம் என எல்லோரும் ஒரு எதிர்பார்ப்புடன் குழம்பி நிற்க, அப்போது அரங்கேறியது
எங்கள் வாழ்வின் உன்னத தருணம்.
“காற்றின்
சிற்பங்கள்” – பசுமைநடையின் பாறைத்திருவிழாவில் எங்கள் எல்லோரையும்
ஆச்சர்யத்தில் ஆழ்த்த திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திரு.ரத்தின
விஜயன் அவர்களால் தொகுக்கப்பட்ட பசுமைநடை வலைப்பதிவர்கள் பன்னிருவரின் கட்டுரைகளை
அச்சில் வார்த்த புத்தகம். பல்வேறு காரணங்களால் அன்று வெளியிடப்பட முடியாததால்
தெப்பக்குளத்தில் வெளியிடப்பட்டது. கும்பகோணத்திலிருந்து சிலபல காரணங்களால்
வரமுடியாத கனகராஜைத் தவிர்த்து நாங்கள் பதினோரு பேரும் வரிசையில் நிற்க தமிழறிஞர்
இராம.சுந்தரம் அய்யா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு எங்கள் ஒவ்வொருவர் கையிலும்
ஒரு பிரதியை வழங்க அந்த காற்றின் சிற்பங்களைக் கட்டிக்கொண்டு மேலெழும்பிப் பறந்தது
மனது. என்ன சொல்ல எழுதிய தருணத்தினை விடவும் பெருமகிழ்ச்சி என் எழுத்தினை முதல்
முறை அச்சில் பார்த்த பொழுது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கிணங்க,
எவ்வித எதிர்பார்ப்புமில்லாது எங்கள் பசுமைநடையின் பயண அனுபவத்தை ஆர்வம் மேலிட
குறுகுறுப்புடன் பதிவு செய்த எங்களுக்கு பசுமைநடை தந்தது அளவிடமுடியாத ஆச்சர்யம். ஆம்,
இதுவரையில் நினைத்ததை பதிவிடும் வலைப்பதிவர்களாக மட்டுமே இருந்த எங்களை, எங்கள்
எழுத்துக்களை முதல்முறையாக அச்சில் வார்த்ததன் மூலம் எழுத்தாளர்களாக தரம் உயர்த்தி
அழகு பார்த்தது பசுமைநடை.
முகநூலில் சமயங்களில் நான் கவிதையென கிறுக்குவதை படிக்கும் சில நண்பர்கள் கேட்பதுண்டு, “என்னப்பா ஒரு புத்தகம் போட்ற வேண்டியது தான?”. கேட்கும்போது மனதிற்குள் ஒருபுறம் பெருமிதமாகவும், ஆசையாகவும் இருந்தபோதிலும், மறுபுறம் “நாம புத்தகம் போட்டு வாங்கிப் படிக்கிறது யாருப்பா? சும்மா என் புருசனும் கச்சேரிக்குப் போயிருக்கான்ற கதையா நானும் புத்தகம் போட்ருக்கேன்னு சொல்லிக்கிறதுக்கா? அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணுமப்போய்” என்று மறுதலித்தே வந்திருக்கிறேன். ஆனால் இன்று அந்த தகுதியை பசுமைநடை எனக்கு அளித்துவிட்டது. காற்றின் சிற்பங்களை கட்டிக்கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக பறந்தே திரிந்தேன். நிற்கையில், நடக்கையில், படுக்கையில் ஏன் கழிவறையில் அமர்ந்திருக்கையில் கூட மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே தானிருந்தேன். ஏற்கனவே எல்லாக் கட்டுரைகளையும் இணையத்தில் வாசித்திருந்தாலும் அவைகளை புத்தக வடிவில் அச்சில் பார்த்த போது, கருப்பு வெள்ளையிலும் அதன் நேர்த்தி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது.
“சமணர்
படுக்கைகள், கல்வெட்டுகள் இருக்கு தெரியுமா?” என்ற
யானைமலை குறித்த எனது கட்டுரை புத்தகத்தின் முதல் கட்டுரையாக வெளிவந்ததில் கூடுதல்
மகிழ்ச்சி. எனது முதல் பசுமைநடை கொங்கர்புளியங்குளமாயிருந்த போதிலும் சமணம் என்ற
வார்த்தையை நான் முதன்முதலில் கேள்விப்பட்டது யானைமலையில். பள்ளிப்பருவத்தில்
ஒத்தக்கடையில் இருக்கும் நண்பன் வீட்டிற்கு செல்லும்போது கேள்விப்பட்ட சமணர்படுக்கை
என்ற வார்த்தைக்கு பசுமைநடையின் மூலமே எனக்கு அர்த்தம் தெரிந்தது. அதோடு சேர்த்து
எனது எழுத்தையும் முதல்முறை அச்சில் வார்த்த பெருமையையும் சூடிக்கொண்டது பசுமைநடை.
எங்கள் எல்லோரை விடவும் கூடுதல் உற்சாகத்துடனும், பூரிப்புடனும் பெருமிதம் கொண்டிருந்தார்
எழுத்தாளர் திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள். “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்”
என்பதைப்போல் பசுமைநடையினை தொடங்கியபோது அவர் எதிர்பார்க்கவில்லை பசுமைநடை பல
தளங்களிலும் விரிந்து, பல தளங்களிலும் நேர்த்தியான கலைஞர்களை உருவாக்குமென்பதை.
பசுமைநடை எங்களைப் போன்றவர்களை எழுதத்தூண்டியது. எண்ணற்றோரை வாசிக்கத்தூண்டியது.
மதுரையின் மிக முக்கிய புகைப்படக்கலைஞர்களை உருவாக்கியுள்ளது. இன்னுமின்னும்
ஏராளமானோரை இயற்கையின் மீது காதல் கொள்ளச் செய்துகொண்டேயிருக்கிறது. பசுமைநடை மதுரையின்
மாபெரும் அடையாளம்.
காற்றின்
சிற்பங்கள் புத்தகத்தில் என்னோடு சேர்த்து, என்னைவிட அருமையான கட்டுரைகளை
எழுதியிருக்கும் நண்பர்கள் பதினோரு பேருக்கும் வாழ்த்துக்கள். எங்களைத் தவிர்த்து
எழுதிக்கொண்டிருக்கும் இன்னும் சில புதிய எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள். “காற்றின்
சிற்பங்கள் – கதம்பம்”.
- பா.உதயக்குமார்.
புகைப்படங்கள்:
அருண்பாஸ்
மற்றும் குரூஸ் ஆண்டனி ஹுபர்ட்...