Showing posts with label Gift. Show all posts
Showing posts with label Gift. Show all posts

Thursday, 14 January 2016

பசுமைநடை நாட்காட்டி – 2016...

காலம் - அது ஒரு மந்திரச்சொல்... அதன் பயணத்தில் நம் வாழ்வும் இயல்பும் மாறிக்கொண்டேயிருக்கிறது. கடந்துவிட்ட காலத்தை மீட்டெடுப்பதென்பது இயலாத காரியம். ஒவ்வொருவருக்குள்ளும் இந்த கால மாற்றத்தின் நினைவுகள் உறைந்திருக்கின்றன. நினைவுகளின் வழியே அவை உயிர்ப்போடு இருக்கின்றன.

ஆங்கிலத்தில் John Keats எழுதிய Ode on A Grecian Urn வாசித்திருக்கிறீர்களா? அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இறந்தவர்களின் சாம்பல் போட்டுவைக்கும் தாழியை (குவளை) வர்ணித்து எழுதப்பட்ட கலிப்பாடல் மாதிரியான ஒரு கிரேக்க கவிதை. அந்த கவிதை முழுவதிலும் அந்த தாழியில் வரையப்பட்டிருக்கும்/செதுக்கப்பப்பட்டிருக்கும் காட்சிகள், அதன் தருணங்கள், அதன் உயிர்ப்புத்தன்மை மிகுந்த ரசனையோடு புனையப்பட்டிருக்கும். உதாரணமாக, ஒருவன் புல்லாங்குழல் வாசிப்பதைப் போல ஒரு காட்சி செதுக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியின் இயல்பை, அந்த தருணத்தின் உயிர்ப்பை கவிஞர் இப்படி வர்ணித்திருப்பார்.
Heard melodies are sweet, but those unheard are sweeter”. நாம் ஒருவர் வாசிக்கும் இசையை கேட்டுவிட்டால் அது அந்த நேரத்திற்கான ரசனை மட்டுமே. ஆனால் இங்கு இவன் வாசிக்கும் இசை என்னவாயிருக்கும், அது எந்த மாதிரியான உணர்வை நமக்குள் கடத்தும் என்பது நம் சிந்தனையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் அந்த இசை நமக்குள் ஒரு ரசனையை கடத்திக்கொண்டேயிருக்கிறது. அந்த காட்சி நமக்கு மீண்டும் மீண்டும் அந்த உணர்வை கொண்டு வந்து சேர்க்கிறது. இது தான் காட்சிப் படிமமாக்கப்பட்ட உணர்வுகளின், தருணங்களின் இரசவாதம்.
காலத்தை, அதன் இயல்புகளை, அது தந்த நினைவுகளை, காட்சிப்படிமங்களாக, ரசனை மிகுந்ததாக உறைபனியாய் உறையச்செய்யும் லாவகம் ஓவியத்திற்கு, சிற்பத்திற்கு, புகைப்படத்திற்கு, எழுத்திற்கு உண்டு. நவீன யுகத்தில் புகைப்படங்களின் வீச்சு அலாதியானது. அதன் எளிமையும், தொழில்நுட்பமும் அதனை சாத்தியப்படுத்துகிறது. செல்போன்களில் கேமரா வந்த பிறகு காணும் யாவையும் கைக்குள் வசப்படுத்தி பத்திரப்படுத்த முடிகிறது. புகைப்படக்கலைஞர்களின் நேர்த்தியைப் பொறுத்து அதன் நுணுக்கங்களும், ரசனையும் மட்டுமே மாறுபடுகிறது. மற்றபடி நினைவுகளின் உயிர்ப்புத்தன்மை காட்சிப்படிமமாக மீட்டெடுக்கப்படுகிறது.
நினைவுகளின் பேராற்றல் அந்த தருணங்களை (Moments) அப்படியே காட்சிபடிமமாக, ரசனை மிகுந்ததாக, அதே உயிர்ப்புடன் மீட்டுத்தருவதில் அடங்கியிருக்கிறது. அதனால் தான் நாம் மனிதர்களை, அந்த தருணங்களை நினைவில் கொள்ள வழங்கும் பரிசுப்பொருட்களுக்கு நினைவுப் பரிசு (Memento) என பெயரிட்டிருக்கிறோம்.


எல்லாப் பரிசுகளுமே நினைவுப்பரிசுகளாக ஆகிவிட முடியாது. நாம் வழங்கும் பரிசும், அந்த பரிசை தெரிவு செய்வதற்கான அல்லது தயார் செய்வதற்கான மெனக்கெடல்கள், அதனை வழங்கும் முறை, தருணம் என எல்லாமுமே பரிசைப்பெறுபவர் அந்த தருணத்திலும், அந்த பரிசு மீட்டெடுக்கும் தருணத்திலும் மகிழ்ந்து லயித்துக் கிடக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.
சிலருக்கு நாம் பரிசு வழங்குவது மட்டுமே முக்கியம். சிலருக்கு நாம் என்ன பரிசு வழங்குகிறோம் என்பதும் முக்கியம். நாம் எதிர்பாராதவொரு தருணத்தில் நமக்கு கிடைக்கும் பரிசுகள் நம்மை மகிழ்ச்சியில் மட்டுமல்லாது ஆச்சர்யத்திலும் திளைக்கச் செய்கின்றன. 
நினைவுகளை மீட்டெடுக்க பரிசுகளும், அந்த பரிசுகளே பல நினைவுகளை தருவதும் இனிய முரண். பரிசளிப்பதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று நம்மை அல்லது அந்த தருணத்தை, ஒரு நிகழ்வை நினைவுறுத்த வழங்கப்படுவது. மற்றொன்று நல்ல நினைவுகளையே பரிசளிப்பது. நம் எல்லோருக்குமே மறக்ககூடாத நினைவுகள் சில இருக்கும். எப்பாடுபட்டாவது மறந்துவிட வேண்டும் அல்லது நம் நினைவிற்கே வரக்கூடாது என்பது போன்ற நினைவுகளும் சிலருக்கு இருக்கலாம். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை", "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா" வகையறா பாடல்கள் எல்லாம் இந்த வகை தான். ஆனால் நல்ல நினைவுகளை மீட்டெடுப்பதென்பது நம்மை தொடர்ந்து உயிர்ப்போடு இயங்கச் செய்யும்.



கடந்த 10/01/2016 ஞாயிறன்று மாடக்குளம் சென்ற பசுமைநடையும் ஒரு வகையில் என் பால்யத்தை, என் குழந்தைமையை, நான் களித்துணர்ந்த மகிழ்வான தருணங்களை மீண்டும் எனக்கு நினைவூட்டியது. அதன் தொடர்ச்சியாக பசுமைநடை நிகழ்த்திய இம்மாதிரியான இரசவாத தருணங்களை இந்த ஆண்டு முழுவதிலும் நினைத்து கொண்டேயிருக்க, அதனை தொடர்ந்து ஞாபகப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது பசுமைநடை நாட்காட்டி. 


பசுமைநடையின் பொன்னான சாதனைத் தருணங்களை, அதன் உயிர்ப்பான உணர்வுகளை ஆண்டு முழுவதிலும் அசைபோடும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நாட்காட்டி. நினைவுகளின் வழியே மகிழ்வான தருணங்களை மீட்டெடுக்க அதில் அச்சிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நமக்கு சிறந்த நினைவூட்டிகளாக இருக்கின்றன. இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் பசுமைநடையினர் அனைவருக்கும் கிடைத்த மிகச்சிறந்த பரிசு இந்த பசுமைநடை நாட்காட்டி. நல்ல தருணங்களை நமக்கு வழங்கியதோடு அதன் நினைவுகளையும் தொடர்ந்து பரிசளிக்கும் பசுமைநடைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
---
பா.உதயக்குமார்...
---
படங்கள் உதவி: அருண்பாஸ், விஷ்ணு வர்த்தன்...